06/04/2017

பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் - 2...


உடலைப் பிரிந்து ஒரு பயணம்...

ஒரு கட்டத்தில் அந்த சக்திகளின் பலம் உச்சத்திற்கு சென்றதாய் பால் ப்ரண்டனுக்குத் தோன்றியது. ஆனாலும் ஒரு அசாதாரண மனபலத்துடன் பால் ப்ரண்டன் தாக்குப்பிடித்தார். திடீரென்று அந்த துஷ்ட சக்திகளின் போக்குவரத்து நின்று போயிற்று. அவை எல்லாம் மாயமாக மறைந்து போயின. அங்கு ஒரு வித மயான அமைதி நிலவியது. பால் ப்ரண்டனுக்கு சிறிது நேரம் கழித்தே காரணம் விளங்கியது.

இரு புதிய உருவங்களின் அருகாமையை பால் ப்ரண்டன் உணர்ந்தார். மிகவும் அமைதியான தெய்வீக சக்தி உடையவையாய் அவை இருந்தன. துஷ்ட சக்திகளைப் போன்ற தெளிவில்லாத நிழல்களாகவோ, அலைகளாகவோ இல்லாமல் அந்த இரண்டு உருவங்களும் ஓரளவு தெளிவாகத் தெரிந்தன. பழங்கால எகிப்திய குருமார்கள் போலத் தெரிந்த அவர்களிடத்தில் விவரிக்க முடியாத தூய்மையை அவர் உணர்ந்தார். அவர்களைச் சுற்றி ஒரு ஒளி வெள்ளத்தை பால் ப்ரண்டன் கண்டார்.

வந்தவர்கள் இருவரும் பால் ப்ரண்டன் அருகில் வந்து சிலைகளைப் போல் நின்றனர். இருவரும் தங்கள் கைகள் மார்பிலே கட்டிக் கொண்டு நின்று பால் ப்ரண்டனை ஊடுருவிப் பார்த்தார்கள். அடுத்ததாக முதலில் மிக அருகில் நின்றவர் உதடுகள் அசைவது தெரிந்தது. ஆனால் வார்த்தைகள் ஒலியாக வெளிவரவில்லை என்று புரிந்தாலும் பேசுவது தெளிவாக பால் ப்ரண்டன் மூளையை எட்டியது.

ஏனிங்கு வந்தாய்? அபூர்வ சக்திகளைப் பெற வந்தாயா? மானிடர்களின் வழியில் கிடைப்பது போதவில்லையா?

அந்த வார்த்தைகள் எண்ணங்களாக தன் மூளையில் பதியவில்லை என்பதையும், அவருடைய குரலாய் தான் மூளையில் பதிகிறது என்பதையும் புரிந்த பால் ப்ரண்டனுக்கு அது எப்படி என்பது தான் தெரியவில்லை. பால் ப்ரண்டன் சொன்னார். போதவில்லை.

திரும்பிப் போய் விடு. இங்கு ரகசியங்களைத் தேடி வந்தவர்கள் பைத்தியம் பிடித்துப் போயிருக்கிறார்கள்.

நான் தேடி வந்ததை அறியாமல் போக முடியாது.

எங்களை நெருங்கியவர்கள் சொந்த பந்தங்களை இழந்து தனியராகப் போயிருக்கிறார்கள். அது உனக்கு சம்மதமா?

எனக்குத் தெரியவில்லை என்பதை உண்மையில் பால் ப்ரண்டன் ஒத்துக் கொண்டார். ஆனாலும் திரும்பிப் போக முனையவில்லை.

சரி அப்படியே ஆகட்டும். நீ தேர்ந்தெடுத்த செயலிற்கான பலனை நீயே அனுபவித்தாக வேண்டும் என்ற அந்த முதல் உருவம் அங்கிருந்து உடனடியாக மறைந்தது. அடுத்த உருவம் பால் ப்ரண்டனை நெருங்கியது. இரண்டாவது உருவத்தின் முகம் மிக மிக வயதானதாக இருந்தது. எவ்வளவு வயதிருக்கும் என்பதை பால் ப்ரண்டனால் அனுமானிக்க முடியவில்லை.

இரண்டாவது உருவத்திடம் இருந்தும் வார்த்தைகள் குரலுடன் பால் பரண்டன் மூளையில் பதிந்தன. மகனே. இரகசிய சக்திகளின் தலைவர்கள் தங்கள் கைகளில் உன்னை எடுத்துக் கொண்டு விட்டார்கள். நீ ஞான மண்டபத்திற்கு தற்போது அழைத்து செல்லப்படவிருக்கிறாய். நீ அமர்ந்திருக்கும் இந்தக் கல்லில் காலை நீட்டி மல்லாக்கப் படுத்துக் கொள்...

பால் ப்ரண்டனுக்கு அதன்படி நடப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. அப்படியே படுத்துக் கொண்டார். ஆனால் அதன் பின் நடந்ததென்ன என்று பால் ப்ரண்டனுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. அவருடைய தசைகள் எல்லாம் இறுக ஆரம்பித்தன. அவருடைய உடல் முழுவதும் பக்கவாதம் வந்தது போல் செயல் இழக்க ஆரம்பித்தது. முழு உடலும் பாறையாக கனக்க ஆரம்பித்தது. உடலில் இருந்து உணர்வுகள் மங்க ஆரம்பித்தன. மரணம் நெருங்குவது போல் இருந்தது. ஆனால் பால் ப்ரண்டனின் தத்துவார்த்தமான பக்குவம் அதற்கு பயப்படவில்லை.

ஒருவித இனம் புரியாத சிலிர்ப்பு தண்டுவடத்தில் கீழிருந்து மேலாகப் பரவி கடைசியில் மூளையில் மட்டும் ஏதோ உணர்வு தங்கியது. பால் ப்ரண்டன் நினைவை இழக்க ஆரம்பித்தார். நினைவினை இழக்க ஆரம்பிக்கும் அந்த நேரத்தில் நாளை என்னுடைய பிணத்தை இந்தப் பிரமிடினுள் பார்ப்பார்கள். இதுவே என் முடிவு என்ற எண்ணம் வந்து போயிற்று.

உடலெல்லாம் மரத்தாலும் தலையில் மட்டும் லேசான உணர்வு சிறிது நேரம் தங்கியிருந்தது. ஏதோ சூறாவளியில் சிக்கியதைப் போல் ஒரு உணர்வு மூளையில் தங்கி ஏதோ ஒரு துளை வழியாக வெளியேறுவதை பால் ப்ரண்டன் உணர்ந்தார். பின் உடலிலிருந்து பரிபூரண விடுதலை பெற்றது போல் உணர்ந்தார். உடலின் கனம் இல்லாமல் லேசானதைப் போன்று தோன்றிய அந்த நேரத்தில் உடல் தானல்ல என்பது அவருக்குப் புரிந்தது. இவ்வளவு நாள் தான் அடைபட்டிருந்த சிறையாகவே உடல் தோன்றியது. உடலை விட்டு வெளியே வந்திருந்த போதும் இன்னும் எல்லாவற்றையும் காணக் கூடிய சக்தியும், உணரக் கூடிய சக்தியும் தன்னை விட்டு போய் விடவில்லை என்பது புரிந்த போது அவருக்குத் திகைப்பு மேலிட்டது. இன்னும் சொல்லப் போனால் முன்னெப்போதையும் விட உணர்வுகள் கூர்மை பெற்றது போல் தோன்றியது.

அவரால் அவர் உடலைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. கண்கள் லேசாக மூடிய, இரண்டு கைகளையும் மடித்து மார்பில் வைத்திருந்த தன் உடலை அவர் ஆச்சரியத்துடன் பார்த்தார். ஏக காலத்தில் நிற்பதைப் போலவும் மிதப்பதைப் போலவும் அவருக்குத் தோன்றியது.

அந்த உடலிலிருந்து ஏதோ மங்கலான வெளிர் ஒளி கிளம்பி பார்த்துக் கொண்டிருக்கும் அந்த ஆவி நிலை வந்திருப்பதை அவர் கண்டார். அது என்ன என்பதை பால் ப்ரண்டனால் சொல்ல முடியவில்லை. சுற்றிலும் உள்ள சுவர்களில் கூட மெல்லிய நிலவொளியாய் அது பிரதிபலிக்கக் கண்டார். உடலில்லாமல் உணர்வுகள் மட்டுமாய் ஒரு மிதவை நிலையில் பால் ப்ரண்டன் இருந்தார். பழங்கால எகிப்தியர்கள் மனிதனின் ஆன்மாவை பறவை வடிவத்தில் பல கல்வெட்டுகளில் வரைந்திருப்பதன் பொருள் உயரத்தில் இருக்கும் போது புரிகிறது போல இருந்தது.

உடலை விட்டுப் பிரிந்திருந்த அந்த நேரத்தில் எடையில்லாத மிகவும் லேசானதொரு நிலையை பால் ப்ரண்டன் உணர்ந்தார். தன் உடலைப் பார்க்கையில் பெரியதொரு உண்மை அவருக்குப் புலப்பட்டது. இது தான் மரண நிலை. உடலை விட்டுப் பிரியும் போது உண்மையாக நான் சாவதில்லை. உடலை விட்டுப் பிரிந்தும் நான் இருக்க முடியும் என்ற உண்மை நிரூபணம் ஆகி விட்டதால் நான் நம்புகிறேன். அதே நேரத்தில் இந்த உடலையா நான் நான் என எண்ணி இருந்தேன்? என்ற திகைப்பும் அவருள் எழுந்தது.

புவியீர்ப்பு விசை பாதி அவரைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க, பாதி அந்தரத்தில் மிதப்பது போலிருக்க அந்த நிலையில் அவருக்கு ஆத்மஞானம் கிடைத்தது. அர்த்தமில்லாத இந்த சதைக் குவியல் நான் அல்ல உண்மையில் இந்த உடல் என்னை இத்தனை காலம் சிறை வைத்திருந்தது என்ற எண்ணம் அவருக்கு பலப்பட்டது. அப்போது உடன் இருந்த அந்த முதிய குரு அவருடைய எண்ணத்தைப் படித்தது போல சொன்னார். உண்மையே. மிகப் பெரிய பாடத்தை நீ கற்றாய் மகனே. ஆத்மா அழிவில்லாதது..

அந்த நேரத்தில் பால் ப்ரண்டன் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் இறந்து போன அரைகுறையாய் நினைவிருந்த ஒரு பெண்ணின் முகத்தையும், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்த அவர் நண்பர் ஒருவர் முகத்தையும் ஒரு விபத்தில் அகால மரணமடைந்த ஒரு குழந்தையின் புன்னகை தவழும் முகத்தையும் அண்ட வெளியில் பார்த்தார். அந்த மூன்று முகங்களும் அவரைப் பார்த்தன, பேசின. மிகக் குறுகிய காலமே அவரிடம் பேசிய அந்த முகங்கள் உருகி மறைந்தன...

மேலும் பயணிப்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.