06/04/2017

தென்னாடுடைய சிவனே போற்றி...


திருவாசகம்…

மாணிக்கவாசகரால் பாடப்பட்டு இறைவனால் எழுதப்பட்டது என்ற சிறப்பினைக் கொண்ட ஒரு நூல்.

திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது மிகைப்படுத்தப் பட்ட கூற்று அல்ல என்பதினை இந்நூலினைப் படித்தோர் அறிவர்.

சரி அது அப்படியே இருக்கட்டும். பிழையில்லை… ஆனால் நம்முடைய கேள்விக்கு பதில் இந்த நூலினில் இருக்கின்றது என்று சொன்னீர்களே அது எங்கே?

ஏன் தமிழ்நாட்டில் மட்டும் அந்தச் சமயங்கள் வளர்ந்தன… தமிழில் அவ்வாறு என்ன இருக்கின்றது? என்று கேட்கின்றீர்களா…

இதோ மாணிக்கவாசகரின் பதில்.

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

தமிழர்களின் சிந்தனை எப்பொழுதும் பரந்து விரிந்தது. இதனை யாதும் ஊரே யாவரும் கேளிர். ஒன்றே குலம் ஒருவனே தேவன். போன்ற கூற்றுகளின் மூலம் அறிந்துக் கொள்ளலாம்.

ஆனால் இங்கே மாணிக்கவாசகரோ எந்நாட்டவர்க்கும் இறைவா என்றுக் கூறினாலும், இறைவனை தென்னாடுடையவன் என்று சிறப்பாகக் கூறுகின்றார். அவர் அவ்வாறு சொல்ல வேண்டியக் காரணம் என்ன?

அவரின் இந்தக் கூற்று சரியான ஒன்றா?

அட என்னங்க… மாணிக்கவாசகர் தமிழகத்தை சேர்ந்தவர்… அதனால் அவர் தென்னாடுடைய சிவனே என்று கூறி இருக்கின்றார்… இதுவே ஒரு வடநாட்டினைச் சேர்ந்த ஒருவர் எழுதி இருந்தால் அவர் வடநாட்டினை உடைய சிவனே என்று தான் கூறி இருப்பார். அப்படி என்றால் இறைவன் வடநாட்டினை மட்டும் சேர்ந்தவர் ஆகி விடுவாரா?  இறைவன் முழு உலகத்திற்கும் உடையவர் என்றுக் கூறுகின்றீர்களா.

உங்களின் கவனத்திற்கு..

ஒருக் கருத்து உண்மையான கருத்து ஆக வேண்டும் என்றால் அது எல்லா நிலையிலிலும் நிலைத்து நிற்க வேண்டும். எல்லா நிலைக்கும் பொருந்த வேண்டும். இப்பொழுது தென்னாடுடைய என்னும் சொல் தெற்குத் திசையில் உள்ள ஒரு நாட்டினைக் குறிப்பதாக இருந்தால் அந்த நாடு இடத்திற்கு இடம் மாறுபடுவதாக அமைந்து விடும்.

சீனத்திற்கு தென்னாடு வடஇந்தியா.

வடஇந்தியாவிற்கு தென்னாடு தமிழகம்.

தமிழகத்திற்கு தென்னாடு ஆப்பிரிக்கா.

இப்படியே அந்தக் கருத்து அர்த்தமில்லாத ஒருக் கருத்து ஆகி விடும். எனவே மாணிக்கவாசகர் அந்த அர்த்தத்தினில் தென்னாடுடைய என்னும் சொல்லினை பயன் படுத்தவில்லை.

மாணிக்கவாசகர் தென்னாடுடைய என்னும் சொல்லினை தென்னவனின் நாட்டினைச் சிறப்பாக உடைய என்னும் அர்த்தத்தினில் பயன் படுத்தி இருக்கின்றார்.

தென்னவனின் நாடா?

சற்று விளக்கமாகப் பார்ப்போம். இங்கே தான் மொழி அறிஞர்கள் நம் உதவிக்கு
வருகின்றார்கள்.

தென்னவன் என்றச் சொல் பாண்டியனைக் குறிக்கும். பாண்டியன் என்பதின் அர்த்தம் பழைய நாட்டினை ஆண்ட மன்னன் என்பதே ஆகும்.

பாண்டி என்றால் பழைய என்றும் தமிழில் அர்த்தம் இருக்கின்றது.
எனவே தென்னாடு என்றால் பாண்டியனால் ஆளப்பட்ட பழைய நாடே ஆகும். சிவன் அந்த நாட்டினில் சிறப்பாக இருக்கின்றார் என்றே மாணிக்கவாசகர் கூறுகின்றார்.

பழைய நாடா? - பாண்டியன் மதுரையை அல்லவா ஆண்டான் என்று கூறுபவர்களுக்கு, இப்பொழுது இருக்கும் மதுரை மூன்றாவது மதுரை. இதற்கு முன்னர் இருந்த இரு மதுரைகள் கடற்கோள்களினால் அழிந்துப் போயின. அது வரலாறு. குமரிக்கண்ட வரலாறு.. மாணிக்கவாசகர் தென்னாடு என்றுக் குறிப்பிடுவதும் இந்த குமரிக் கண்டத்தையே தான்.

ஏன் சிவனை குமரிக்கண்டத்தை சிறப்பாக உடையவன் என்று மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார்.

ஏனெனில், இறைவன் மனிதனை முதன் முதலில் படைத்தது இக்கண்டத்திலேயே தான்.

ஏன் இறைவனைப் பற்றிய எழுச்சி தமிழகத்தில் தமிழில் எழுந்தது?

ஏனெனில், உலகின் முதல் மனிதன் தமிழன். அவன் இறைவனிடம் பேசிய மொழி தமிழ். இவை தான் அந்தக் கேள்விகளுக்கு பதில்… நிற்க..

இப்பொழுது புதிதாய் பல கேள்விகள், மறுப்புக் கருத்துக்கள், விமர்சனங்கள் நிச்சயம் உங்கள் மனதில் தோன்றி இருக்கும்.

அவற்றிற்கு அறிவியல் பூர்வமாகவும், வரலாற்று செய்திகள் மூலமாகவும் விடையினை நாம் மெதுவாகப் பார்க்கப் போகின்றோம். அதற்கு முன்னாள் நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய விடயங்கள் சில இருக்கின்றன.

ஒன்று: இன்று அறிவியல், மனிதகுலம் தோன்றி இருக்க கூடும் என்று எண்ணும் இடம், இன்றைக்கு ஆப்பிரிக்காவிற்கும் ஆசுதிரேலியாவிற்கும் இடையில் இருக்கும் இந்து மகாக்கடலே ஆகும். உயிர் தோன்ற அங்கே இருந்த சூழலே சரியாக இருந்து இருக்கும் என்று அறிவியல் எண்ணுகின்றது. அந்த இடம் நம் தமிழ் இலக்கியச் செய்திகளில் குமரிக்கண்டம் எங்கே இருந்தது என்றுக் கூறப்படுகின்றதோ அதே இடத்துடன் ஒத்துப் போகின்றது.

குமரிக்கண்டம், இந்தியா- ஆசுதிரேலியா-ஆப்பிரிக்கா ஆகிய இந்த மூன்று நிலங்களையும் இணைத்துக் கொண்டு இருந்த ஒரு மாபெரும் நிலப்பரப்பு என்பது ஒருக்கருத்து.

இந்தக் கருத்து சில ஆராய்ச்சிகளால் நிரூபணம் ஆகிக் கொண்டு இருக்கின்றது. உதாரணமாய் ஆசுதிரேலியாவில் உள்ள பழங்குடி மக்களின் மொழியினைப் பற்றிய ஆராய்ச்சியில் அம்மொழி தமிழினை ஒத்து இருக்கின்றது என்பது நிரூபணம் ஆகி இருக்கின்றது. அவர்கள் ஒரு பெண்ணினைக் கூப்பிட பூனங்காஇங்கவா என்றுக் கூறுகின்றார்கள்.

இது பூ நங்கையே இங்கே வா என்பதின் மருவு தான் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இரண்டு: எந்த ஒரு சமயத்திற்கும் மட்டும் உரியதாக இல்லாமல் அனைத்து சமயங்களையும் அரவணைத்துக் கொண்டு நிற்கும் மொழி உலகில் தமிழன்றி வேறு இல்லை. தமிழில் மட்டுமே அனைத்து சமயங்களுக்கும் மூல நூல்கள் தோன்றியுள்ளன. மொழிப்பெயர்ப்பது வேறு. அந்த மொழியினைக் கற்றுக் கொண்டு அம்மொழியினில் தங்களின் சமயத்தினைப் பற்றி எழுதுவது வேறு.
தமிழில் உலகில் உள்ள பெரு மதங்கள் அனைத்திற்கும் மூல நூல்கள் உள்ளன.

சைவம் - பன்னிரு திருமுறை

வைணவம் - நாலாயிர திவ்ய பிரபந்தம்

சமணம் - சிலப்பதிகாரம்

பௌத்தம் - சீவக சிந்தாமணி

கிருத்துவம் - தேம்பாவணி

இசுலாம் - சீறாப்புராணம்

உலகில் உள்ள வேறு எந்த மொழிக்கும் இந்தப் பெருமை இல்லை. மேலும் தமிழ் ஆன்மீக மொழியாக மட்டும் இல்லாமல் அறிவியல் மொழியாகவும் திகழும் பாங்கும் இங்கு கவனிக்கத்தக்கது.

சரி… இப்பொழுது உலகின் முதல் மனிதன் தமிழன்- அவன் படைக்கப் பட்டது குமரிக்கண்டத்தில் என்ற செய்தியினை நாம் ஆராய வேண்டி இருக்கின்றது. அதற்கு உலகம் முதலில் எவ்வாறு தோன்றிற்று என்பதனை நாம் பார்க்க வேண்டும்.

உலகத்தின் தோற்றம் பற்றிய செய்திகளை பலக் கதைகளும் நூல்களும் விளக்கிக் கொண்டு இருக்கின்றன.

வடநாட்டுக் கதை
விவிலியம்
பரிபாடல் (தமிழ் சங்க இலக்கிய நூல்)
கூடவே அறிவியலும் ஒரு விளக்கத்தினைக் கொடுத்துக் கொண்டு நிற்கின்றது.

அடுத்தப் பதிவுகளில் நாம் இவற்றினைப் பற்றித் தான் பார்க்கப் போகின்றோம். அதுவும் குறிப்பாக விவிலியத்தினைப் பற்றி.

கடவுள் உலகினைப் படைத்தாரா? இல்லை உலகம் அதுவாக ஒரு விபத்தினால் உருவாயிற்றா? முதல் மனிதன் யார்… முதன் மொழி என்ன?
காண்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.