நாத்திகவாதிகள் ஒரு விடயத்தில் தெளிவாக இருக்கின்றார்கள். கடவுள் இல்லை. இதற்கு மாற்றுக் கருத்தே அவர்களிடம் கிடையாது.
ஆனால் ஆத்திகவாதிகள் தான் குழப்புகின்றார்கள். கடவுள் இருக்கின்றார்… ஆனால் என் கடவுள் மட்டுமே இருக்கின்றார்… அடுத்தவன் கூறும் கடவுள் வெறும் பொய், பித்தலாட்டம் என்னும் இதேக் கருத்தைத் தான் அனைத்து மதத்தினரும் சுருதி மாறாமல் கூறுகின்றனர்.
மேலும் ஒரு சிலர் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றக் கோட்பாட்டினைக் கொண்டவர்களாக இருக்கின்றார்கள்.
இன்னும் சிலர் இதற்கு எல்லாம் ஒருப் படி மேலே போய் நான் கடவுள் என்றும் கூறிக் கொண்டு இருக்கின்றனர்.
இப்படி கடவுள் இருக்கின்றார் என்றுக் கூறும் நபர்கள் வெவ்வேறு கருத்துக்கள் கூறுவதினால் ‘கடவுள் இருக்கின்றாரா? என்றக் கேள்வி மெய்யாகவே நம்முள் எழுகின்றது.
கடவுள் இருக்கின்றாரா?
அப்படி இருந்தால் அவர் எந்த மதத்தினைச் சார்ந்தவர்?
மனிதன் என்பவன் யார்?
அவன் படைக்கப்பட்டானா அல்லது ஒரு விபத்தினால் உருவானானா? போன்றக் கேள்விகளுக்கு விடையினைத் தேடும் ஒரு வரலாற்றுத் தேடல் முயற்சியே இந்தப் தொடர் பதிவு.?
உங்களுக்குத் தெரியுமா?
உலகில் உள்ள மதங்கள் யாவும் ஆசிய கண்டத்திலேயே தங்களது பிறப்பினைக் கொண்டு இருக்கின்றன. அவை கிருத்துவம், இசுலாம், சைவம், வைணவம், சமணம் மற்றும் பௌத்தம்.
இதில் சமணம் மற்றும் பௌத்தம் ஆகியவை நாத்திக மதங்கள். அவை கடவுள் இல்லை என்றக் கொள்கையினை உடையவை.
மற்ற சமயங்கள் முழுவதும் ஆத்திக சமயங்கள்.
இதில் நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியத் தகவல் என்னவென்றால் உலகில் நாத்திக சமயங்கள் இந்தியாவினால் மட்டுமே தோன்றி இருக்கின்றன.
புத்தரால் தோற்றுவிக்கப் பட்டதும் அசோகரால் நாடு முழுக்கப் பரப்பப் பட்ட புத்த மதம், இலங்கையில் இருக்கின்றது சீனத்தில் இருக்கின்றது சப்பானில் இருக்கின்றது.. ஆனால் அது பிறந்த இடமான இந்தியாவில் இன்று அது பெரிய அளவில் இல்லை.
இதே நிலை தான் சமணத்திற்கும்…
ஏன்? இன்று இந்தியா என்றால் அது இந்து நாடு என்கின்றார்களே பெரும்பான்மையினர்…
அந்த நிலை எதனால் வந்தது?
வட நாட்டில் தோன்றிய பௌத்த மற்றும் சமண மதங்கள் தமிழகத்தில் கூட வேருன்றி இருந்த சூழ்நிலையில் எவ்வாறு தங்கள் செல்வாக்கினை இழந்தன?
இந்து மதம் என்றால் என்ன?…இது தான் உலகில் மிகவும் பழமையான மதம் என்கின்றார்களே… உண்மையா?
இந்தக் கேள்விகளுக்கு பதிலினைக் காண நாம் முதலில் இந்து மதத்தினை சற்று வரலாற்று சம்பவங்களை வைத்துப் பார்ப்போம்..
1794 … கொல்கத்தா - பிரிட்டுசு இந்தியாவின் அன்றைய தலைநகரம்…
தங்களின் ஆளுமைக்குட்பட்ட இந்தியாவின் மக்களை அவர்களின் மதங்களுக்கு உரிய சட்டங்களை வைத்துப் பிரித்து அவர்களுக்கு சட்டங்களை இயற்ற அப்போதைய பிரிட்டுசு உச்ச நீதி மன்றத்தின் நீதிபதி சர் வில்லியம் சோன்ஸ் (sir William Jones) முயன்றுக் கொண்டு இருக்கின்றார். அவருக்கு முன்னே ஒரு சோதனை.
கிருத்துவத்தை பின்பற்றுபவர்கள் கிருத்துவர்கள்…. அவர்களுக்கு நீதிநூல் விவிலியம்.
இசுலாம் மதத்தினை பின்பற்றுபவர்கள் இசுலாமியர்கள்…. அவர்களுக்கு நீதிநூல் திருக்குரான்.
ஆனால் மற்ற மக்களை என்ன செய்வது… அவர்களுக்குரிய நீதிநூல் என்ன? - இந்தக் கேள்விக்குத் தான் அவர் விடைத் தேடிக் கொண்டு இருந்தார்.
இந்த மக்களை எவ்வாறு அழைப்பது?
சரி… இந்த மக்கள் அனைவரும் சிந்து சமவெளி நாகரீகத்தில் தோன்றியவர்கள் எனவே அவர்களை சிந்து மக்கள் என்று அழைக்கலாம்… என்று அவர் ஒரு வழியாக முடிவு செய்தாலும் இன்னும் அந்த நீதி நூலுக்கு அவருக்கு விடைக் கிடைத்தப்பாடில்லை.
அந்த நிலையில் தான் சில இந்தியர்கள் (ஆரியர்கள் - இவர்களைப் பற்றி நாம் விரிவாகப் பார்ப்போம்) தங்கள் மதத்தின் நீதி நூல் என மனு தர்ம சாசுதிரத்தை எடுத்து அவரிடம் தருகின்றனர்.
ஆ.. விடை கிடைத்தாயிற்று என்று அவரும் பெருமூச்சினை விட்டவாறே இந்த இந்து மக்களுக்கு (சிந்து என்பதை ஆங்கிலத்தில் சொல்லத் தெரியாமல் இந்து என்று அவர் பெயர் இட்டு விட்டார்) உரிய நீதி நூல் மனு தர்ம சாசுதிரம் என்றுக் கூறி சட்டத்தை இயற்றி விட்டார்.
இந்த நிகழ்வுக்கு முன்னர் வரையிலும் இந்து என்ற சொல் எந்த இலக்கியத்திலோ அல்லது கல்வெட்டுகளிலோ இடம் பெற்றதுக் கிடையாது. 1794 ஆம் வருடத்தில் தான் இந்து என்றச் சொல் பிறப்பெடுக்கின்றது.
சரி… அதனால் என்ன கெட்டு போய் விட்டது என்கின்றீர்களா… நிச்சயம் ஒன்றுமில்லை… ஆனால் வரலாறு முக்கியம் அமைச்சரே..
சரி … இப்பொழுது ஒரு கேள்வி…
இந்து மதம் எங்கே தோன்றியது…?
வட நாட்டில்… இமாலயத்தில் என்கின்றீர்களா..
இல்லை என்கின்றேன் நான்.
என்னுடைய கூற்றிற்கு நான் ஆதாரங்களைக் கூறும் முன் நாம் சற்று இந்து மதத்தை விரிவாகப் பார்ப்போம்..
பயணிப்போம் வரலாற்றினுள்…
பி.கு :
மதம்… இறைவன்… ஆகிய இரண்டும் உணர்ச்சிமிகு தலைப்புகள். இதை நான் யார் மனதையும் புண்ணாக்கும் எண்ணத்திலோ அல்லது யார் நம்பிக்கையினையும் குலைக்கும் எண்ணத்திலோ எழுத வில்லை.
நான் அறிந்த கருத்துக்களை சரி பார்க்கவும், நான் கூறுவன உண்மையாய் இருக்கும் பட்சத்தில், அதை மற்ற நண்பர்களும் அறிய உதவும் வண்ணம் என்னால் முடிந்த கடமையாக இருக்கட்டுமே என்று தான் எழுதுகிறேன்.
இந்தச் செய்திகளை நான் மா.சோ.விக்டர் அவர்கள் எழுதிய ’குமரிக்கண்டம்’ மற்றும் ’தமிழர் சமயம்’
என்ற நூல்களில் இருந்தும்,
தெய்வநாயகம் அய்யா அவர்களின் ஆராய்ச்சியில் இருந்தும் அறிந்துக் கொண்டவையே.
அந்தச் செய்திகளை என்னுடைய நடையில் என்னுடைய பார்வையினையும் சேர்த்து
தொகுத்து எழுதுவதே இந்தப் பதிவு...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.