06/04/2017

பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் - 1...


நள்ளிரவில் பிரமிடுக்குள்....

எகிப்தும் இந்தியாவைப் போன்றே இன்னொரு சித்தர்கள் தேசம் என்றால் அது மிகையாகாது. இந்தியாவைப் போன்றே மிகப்பழமையான நாகரிகம் வாய்ந்த எகிப்து ஆன்மீகத் தேடல்களிலும் சிறந்தே விளங்கியது. இன்றும் ஸ்பிங்க்ஸம், பிரமிடுகளும் எத்தனையோ ஆன்மீக ரகசியங்களைத் தங்களுள் மறைத்து வைத்திருக்கின்றன என்பது பலருடைய ஆழ்ந்த நம்பிக்கை.

அதுவே பால் ப்ரண்டனை அங்கும் ஈர்த்தது. பால் ப்ரண்டன் இன்னொரு தேடலை எகிப்தில் தொடர்ந்தார்.

எகிப்தில் பிரமிடுகளைக் காக்கும் காவல் தெய்வமாகக் கருதப்படும் ஸ்பிங்க்ஸ் மனிதத்தலையும், சிங்கத்தின் உடலையும் கொண்ட பிரம்மாண்டமான அமைப்பு. அது எப்போது கட்டப்பட்டது என்பதை இன்றும் யாராலும் சரியாக ஊகிக்க முடியவில்லை.

கிறிஸ்து பிறப்பதற்கும் முன் சுமார் 2500 ஆண்டுகளிலிருந்து 3000 ஆண்டுகளுக்கு முன்பிற்குள் கட்டப்பட்டிருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் அனுமானிக்கிறார்கள்.

மிகப்பழமை வாய்ந்த அந்த ஸ்பிங்க்ஸ் தேவதை மனிதனின் நுண்ணறிவையும், சிங்கத்தின் தேகபலத்தையும் பெற்றிருப்பதாகக் கருதப்படுகிறது. அது ஏழு முறை பாலைவன மணலால் புதையுண்டது என்றும் ஏழு முறை அந்த மணல் விலகி மீண்டது என்றும் சொல்லப்படுகிறது

பால் ப்ரண்டன் ஸ்பிங்க்ஸ் மற்றும் பெரிய பிரமிடு இரண்டிலிருந்தும் ஞானச் செய்தி பெற வேண்டும் என்று விரும்பினார். ஸ்பிங்க்ஸ் முன் பாலைவன மணலில் ஒரு நாளிரவு முழுவதும் தனியாக அமர்ந்து தியானம் செய்த பால் ப்ரண்டன் கடைசியில் அதிகாலை நேரத்தில் ஸ்பிங்க்ஸிடமிருந்து ஒரு செய்தி கிடைத்ததாகக் கூறுகிறார். நீ உருவாகி அழியும் சதைகளால் ஆன உருவமல்ல மனிதனே. நீ அழிவில்லாத ஆத்மா.. உன்னுடைய இதயத்தில் அது நீ கண்டடையக் காத்திருக்கிறது, இந்தப் பாலைவன மண்ணில் நான் காத்திருப்பதைப் போல். அதனால் உன்னையே நீ அறிவாய்...

அடுத்ததாக உலக அதிசயங்களில் ஒன்றான பெரிய பிரமிடின் உள்ளே ஒரு நாள் இரவைக் கழிக்க எண்ணினார் பால் ப்ரண்டன். இங்கே பிரமிடுகளைப் பற்றி சில தகவல்களை அறிந்து கொள்வது நல்லது.

பெரிய பிரமிடு ஒவ்வொரு புறமும் 756 அடி நீளமும், 450 அடி உயரமும் கொண்டது. சுமார் இரண்டரை டன் எடையுள்ள கற்கள் 23,00,000 பயன்படுத்தி கட்டப்பட்ட பிரம்மாண்டமான அமைப்பு அது. சுமார் 4700 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமை வாய்ந்தது. அக்காலத்தில் பிரம்மாண்டமான அமைப்புகளை அளக்க சரியான அளவுகோல் இல்லை என்றாலும் எவ்வளவு கச்சிதமாகக் கட்டப்பட்டிருக்கிறது என்றால் ஒரு பக்கத்திற்கும் மறுபக்கத்திற்கு இடையே உள்ள வித்தியாசம் எட்டு அங்குலங்களுக்கும் குறைவாகவே இருக்கிறது. இது இன்றைக்கும் கட்டிட வல்லுனர்களை வியக்க வைக்கிறது.

பிரமிடுகளில் அரசர்கள், அரசிகளின் சவங்களை, ஏராளமான செல்வங்களுடன் புதைத்து வைத்திருந்ததால் பிற்காலத்தில் பலரும் உள்ளே நுழைந்து அந்த செல்வங்களை சூறையாடிச் செல்ல ஆரம்பித்தனர்.

எகிப்துக்குப் படையெடுத்தவர்கள், உள் நாட்டவர்கள் என பல்லாண்டுகள் வந்து கொள்ளையடித்துச் சென்ற பின் மிஞ்சியது விலை போகாத சவங்களும், சில பொருள்களும், எடுத்துச் செல்ல முடியாத பிரமிடுகளின் கட்டிடங்கள் மட்டுமே. ஆனால் பிரமிடுகளில் இருந்து கொள்ளையடித்துச் செல்ல முடியாத ஆன்மீக ரகசியங்கள் இன்னும் ஏராளமாக அவற்றில் உள்ளன என்பது உலகப் பெரியோரின் கருத்து.

எனவே தான் பால் ப்ரண்டன் பெரிய பிரமிடினுள்ளே ஒரு நாள் இரவைக் கழித்து அந்த ரகசியங்களை அறிய விரும்பினார்

பெரிய பிரமிடு அரசாங்கத்தின் சொத்தாக இருந்ததால், நுழைவுக் கட்டணம் செலுத்தி சென்று பார்த்து வரும் உரிமை பார்வையாளர்களுக்கு இருந்தாலும் அங்கு ஒரு இரவு முழுவதும் தங்க வேண்டுமானால் அரசாங்க உத்தரவு வேண்டும் என்று அவருக்குச் சொல்லப்பட்டது.

எனவே அரசாங்கத்தின் பழங்காலக் கலைப் பொருள் காப்பகத்தில் சென்று தன் விருப்பத்தை அவர் தெரிவித்தார். அந்த அதிகாரி நிலவுக்குச் செல்ல பால் ப்ரண்டன் ஆசைப்பட்டது போல் அவரைத் திகைப்போடு பார்த்தார். பின் அவரை ஒரு மனநோயாளியைப் பார்ப்பது போல் பார்த்து சொன்னார். நான் இது வரை இது போன்ற கோரிக்கையைக் கேட்டதில்லை. ஆனால் இதற்கு அனுமதி வழங்கும் அதிகாரம் என் கையில் இல்லை. உயர் அதிகாரியைப் பாருங்கள்.

அந்த உயர் அதிகாரி அனுமதிக்க முடியாது என்று உறுதியாகச் சொன்னார். அவருடைய பணிக்காலத்தில் இது போன்ற ஒரு கோரிக்கை வந்ததோ, அனுமதிக்கப்பட்டதோ இல்லை என்றார். பால் ப்ரண்டன் தன் கோரிக்கையில் விடாப்படியாக நிற்க அவர் இரவு வேளையில் தங்குவது போலீசார் அதிகாரத்தில் தான் வருகிறது. அவர்களைப் போய்ப் பாருங்கள் என்றார்.

போலீசாரும் இந்த வினோத கோரிக்கையை ஏற்க முடியாமல் தங்கள் தலைமை அதிகாரியிடம் அனுப்ப அவரும் திகைத்து முடிவெடுக்க ஒரு நாள் தேவை என்றும் மறுநாள் வந்து பார்க்கும் படியும் சொன்னார். மறுநாள் அவர் மறுபடியும் பழங்கால கலைப் பொருள் காப்பகத்தையே அணுகச் சொன்னார். கடைசியில் கெய்ரோ நகர ஜென்ரல் கமாண்டண்டைச் சென்று பால் ப்ரண்டன் தன் கோரிக்கையைச் சொல்ல அவர் பிரமிடுகளைக் காக்கும் போலீஸ் உயர் அதிகாரிக்கு அனுமதி வழங்குமாறு எழுதி அனுப்பினார்.

அந்தப் போலீஸ் அதிகாரி நாங்கள் தினமும் மாலையில் பிரமிடின் நுழைவாயிலைப் பூட்டி வருகிறோம். நீங்கள் உள்ளே செல்ல வேண்டுமென்றால் மறுநாள் காலை வரை உள்ளேயே இருக்க வேண்டி வரும். சுமார் 12 மணி நேரம் உள்ளே இருக்க ஒத்துக் கொள்கிறீர்களா?

பால் ப்ரண்டன் ஒத்துக் கொண்டார். மறுநாள் மாலை பால் ப்ரண்டன் டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டு பிரமிடினுள் நுழைந்தார். ஆயுதம் தாங்கிய போலீஸ்காரர் ஒருவர் அவர் உள்ளே சென்றவுடன் நுழைவாயிலைப் பூட்டிக் கொண்டு வெளியே பூட்டிக் கொள்ள தன்னந்தனியனாய் பால் ப்ரண்டன் தன் பயணத்தைத் தொடங்கினார். அந்தப் பிரமிடுக்குள் பல பாதாளச் சுரங்கங்கள் இருந்தன. சில மிகவும் குறுகலாய் இருந்தன. சில இடங்களில் அவர் தவழ்ந்து போக வேண்டி இருந்தது. உள்ளே சில இடங்களில் வௌவால்களும், எலிகளும் அவருக்குத் துணையாய் இருந்தன. வேறொருவராக இருந்திருந்தால் அந்த சூழ்நிலையில் இருந்து தப்பித்து வெளியேற நினைத்திருப்பார். ஆனால் பால் ப்ரண்டன் மனம் தளராமல் அரசனுடைய உடலை வைத்துள்ள பிரபலமான சேம்பரை அடைந்தார்.

அங்கு சென்ற அவர் அங்கு சென்றதும் தான் கொண்டு வந்திருந்த தொப்பி, தேனீர் நிறைந்த ·ப்ளாஸ்க், தண்ணீர், நோட்டுப்புத்தகம், பேனா எல்லாவற்றையும் கீழே வைத்து விட்டு சம்மணமிட்டு அமர்ந்து தன் டார்ச் லைட்டை அணைத்து விட்டார். உடனே இருள் சூழ்ந்தது. மயான அமைதி அங்கு நிலவியது. நேரம் செல்லச் செல்ல குளிர் அதிகரிக்க ஆரம்பித்தது. ஆனால் அதைப் பொருட்படுத்தாது அமைதியாகக் காத்திருந்தார். நேரம் செல்லச் செல்ல ஏதோ அமானுஷ்ய சக்திகள் தன்னைச் சுற்றி உலவுவதை அவரால் உணர முடிந்தது. அவர் அந்த இருட்டில் விழிப்புணர்வோடு சூட்சுமமாகக் கவனித்த போது அது கற்பனையல்ல நிஜம் என்பதை அவரால் உணர முடிந்தது. பயத்தில் அவர் உடல் மேலும் சில்லிட்டது.

பிரமிடின் உள்ளே தனிமையில் நள்ளிரவின் கும்மிருட்டில் அமர்ந்திருந்த பால் ப்ரண்டனுக்கு ஏதோ சக்திகளின் நடமாட்டம் இருப்பதை உணர முடிந்தது. சில நாட்கள் விரதமும் தியானமும் இருந்து அவன் தன் புலன்களை கூர்மைப்படுத்தி இருந்ததால் அந்த சக்திகள் துஷ்ட சக்திகள் என்பதையும் அவரால் மிகத் தெளிவாக உணர முடிந்தது.

இப்போது அவர் தனிமையில் இல்லை, உடன் துஷ்ட சக்திகளும் உள்ளன என்பதை உணர்ந்த போது அவர் பிரமிடுக்குள்ளே போகப் போவதாகச் சொன்ன போது ஒரு இளம் அரபு நண்பன் எச்சரித்தது நினைவுக்கு வந்தது. அங்கு ஒவ்வொரு அங்குலமும் தீய சக்திகளாலும் ஆவிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது. அவை ஒன்றல்ல இரண்டல்ல ஒரு பட்டாளமே இருப்பதால் இந்த விஷப் பரிட்சைக்கு நீங்கள் போகாமல் இருப்பது நல்லது...

சிறிது நேரத்தில் அவரால் அந்த துஷ்ட சக்திகளின் மாய உருவங்கள் கூட அலைகளாய், நிழலாய் தென்படத் துவங்கியது. ஓரிரு உருவங்கள் அவர் முகத்தின் வெகு அருகில் வந்து அவரை உசுப்புவது போல் தோன்றியது. பால் ப்ரண்டன் இரவின் தனிமைக்குப் பெரிதும் பழக்கப்பட்டவர் என்றாலும் இந்த அனுபவம் அவர் இரத்தத்தை உறைய வைத்தது. அந்த சக்திகள் அவரை உட்கார்ந்த இடத்தை விட்டு எழுப்புவதற்கு முயற்சிப்பதாக அவருக்குத் தோன்றியது. ஒரு கட்டத்தில் பக்கத்தில் வைத்திருந்த டார்ச் விளக்கைப் போட்டு அந்த சக்திகளை விரட்டுவது நல்லது என்று தோன்றினாலும் பிரமிடுகளின் உள்ளே என்ன தான் இரவில் நிகழ்கின்றது என்பதை அறியும் வாய்ப்பை இழந்து விடுவோம் என்ற எண்ணம் அவரை அவ்வாறு செய்யாமல் தடுத்தது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.