உணவு : மனிதன் உயிர்வாழ இன்றியமையாத பொருள் உணவாகும்.
பண்டை மனிதனது முதல் தொழிலே உணவுத் தேடலாயிருந்தது.
அவன் இயற்கையாய்க் கிடைத்த காய்களையும் விதைகளையும் கிழங்குகளையும் உண்டான்.
பின்னர் பறவைகளையும் விலங்குகளையும் வேட்டையாடி அவற்றின் இறைச்சியைப் பதப்படுத்தாமலே உண்டு வந்தான்.
அறிவும் ஆராய்ச்சியும் பெருகப் பெருகத் தீயை உண்டாக்க அறிந்தான்.
அதன் பின்னரே தான் அதுகாறும் பச்சையாய் உண்டுவந்த பொருட்களைப் பக்குவப்படுத்தி உண்ணத் தொடங்கினான்.
உணவு வாயிலாகவே சமுதாய உணர்ச்சியும் வளர்ந்தது. குடும்பத்தினர் சேர்ந்து பயிற்தொழிலைச் செய்யலாயினர்.
இம்முயற்சியால் சிற்றூர்கள் தோன்றின. உணவுப் பொருட்களை உண்டாக்கி உண்ணும் முறைகள் மாற மாற உணவுடன் சுவையும் நாகரிகமும் பிறவும் வளரத் தொடங்கின.
சமையல் தொழில் ஒரு கலையாய் மாறியதென்பதற்கு "நளபாகம்", "பீமபாகம்" எனும் தொடர்களே ஏற்ற சான்றாகும். பீமபாகம் பற்றிய சிறுகுறிப்பு சிறுபாணாற்றுப்படையில் இடம்பெற்றுள்ளது. இனி, பத்துப்பாட்டுள் கூறப்பட்டுள்ள உணவுப் பொருட்களைக் காண்போம்.
பொருநர், பாணர், கூத்தர் எனும் கலைவாணர் பேரரசர்களையும் சிற்றரசர்களையும் கண்டு தம் கலைகளை இனிய முகத்துடன் வரவேற்று நல்லுடைகளையும் பலவகை உண்டி வகைகளையும் வழங்கி உபசரித்தார்கள். வேண்டிய பொருளுதவி புரிந்தார்கள்.
குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் நிலப் பொதுமக்களும் அக்கலைவாணரைத் தம்மால் இயன்றவரை உணவு தந்து உபசரித்தனர். இவ்விவரங்கள் வருமிடங்களில் அக்காலத் தமிழர் உணவு வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
மதுரையில் ஆதுலர் சாலை இருந்தது. அங்கு வழங்கப்பட்ட உணவு வகைகள் மதுரைக் காஞ்சியில் கூறப்பட்டுள்ளன.
இவற்றுடன் பல குடிவகைகளும் கூறப்பட்டுள்ளன. இனி, இவை பற்றிய விவரங்களைக் கீழே காண்போம்...
குறிஞ்சி நிலத்தவர் உணவு...
சோழநாட்டுக் குறிஞ்சி நிலமக்கள் தேனையும் கிழங்கையும் உண்டார்கள். பிற நிலத்தார்க்கும் விற்று மீன், நெய்யையும் நறவையும்(தேன்) வாங்கிச் சென்றார்கள் (பொ.ஆ.படை அடி:214-15).
சிறப்பு நாள்களில் நெய் மிக்க உணவு உட்கொள்ளப்பட்டது. (குறிஞ்சிப்பாட்டு அடி: 304).
நன்னனுக்குரிய சவ்வாது மலையில் அடிவாரத்தில் இருந்த சிற்றூர்களில் வாழ்ந்த மக்கள் திணைச்சோறும் நெய்யில் வெந்த இறைச்சியையும் உண்டார்கள். (மலைபடுகடாம் அடி:168-169).
நன்னனுடைய மலைகளைச் சேர்ந்த குறிஞ்சி நிலத்தார் பெண் நாய் கடித்த உடும்பின் இறைச்சியையும் கடமான் இறைச்சியையும் பன்றி இறைச்சியையும் உண்டனர். நெல்லால் சமைத்த கள்ளையும் தேனால் செய்து மூங்கிற்குழையுள் முற்றிய கள்ளையும் பருகினர். பலாக்கொட்டை, மா, புளிநீர், மோர் ஆகியவற்றைக் கொண்டு தயாரித்த குழம்பையும் மூங்கிலரிசிச் சோற்றையும் உண்டனர். (எ-கா: மலைபடுகடாம் அடி: 171-183).
மலைநாட்டைக் காவல் புரிந்த வீரர் இறைச்சியையும் கிழங்கையும் உண்டனர். அடி:425-26. மலைமீது நடந்து சென்ற கூத்தர் திணைப்புனத்துக் காவலனால் கொல்லப்பட்ட காட்டுப் பன்றியின் மயிரைப்போக்கி மூங்கில் பற்றியெரியும் நெருப்பில் வதக்கி அப்பன்றியின் இறைச்சியைத் தின்றனர். தின்று எஞ்சிய பகுதியை வழியுணவுக்காக எடுத்துச் சென்றனர். அடி:243-249.
பாலை நிலத்தார் உணவு...
ஓய்மானாட்டுப் பாலைநில மக்களான வேட்டுவர், இனிய புளிங்கறி எனப்பட்ட சோற்றையும் ஆமாவின் சூட்டிறைச்சியையும் உண்டனர். (சி.ஆ.படை அடி:175-177).
தொண்டைநாட்டுப் பாலைநில மக்கள் புல்லரிசியைச் சேர்த்து நில உரலில் குற்றிச் சமைத்த உணவை உப்புக் கண்டத்துடன் சேர்த்து உண்டார்கள். விருந்தினர்க்கு தேக்கு இலையில் உணவு படைத்தார்கள். (பெ.ஆ.படை அடி:95-100).
மேட்டு நிலத்தில் விளைந்த ஈச்சங்கொட்டை போன்ற நெல்லரிசிச் சோற்றையும் உடும்பின் பொரியலையும் உண்டார்கள். (பெ.ஆ.படை அடி:130-133).
முல்லை நிலத்தார் உணவு...
தொண்டை நாட்டு முல்லை நிலத்தார் பாலையும் திணையரிசிச் சோற்றையும் உண்டனர். (பெ.ஆ.படை அடி:167-168).
முல்லை நிலத்துச் சிற்றூர்களில் இருந்தவர் வரகரிசிச் சோறும் அவரைப்பருப்பும் கலந்து செய்த "கும்மாயம்" எனப்பெயர் பெற்ற உணவை உண்டனர். (பெ.ஆ.படை அடி:192-195). நன்னனது
மலைநாட்டு முல்லை நிலத்தார் சிவந்த அவரை விதைகளையும் மூங்கிலரிசியையும் மேட்டு நிலத்தில் விளைந்த நெல்லின் அரிசியையும் புளி கரைக்கப்பட்ட உலையிற்பெய்து குழைந்த புளியங்கோலாக்கி உட்கொண்டனர். அடி:434-436. பொன்னை நறுக்கினாற்போன்ற நுண்ணிய ஒரே அளவுடைய அரிசியை வெள்ளாட்டு இறைச்சியுடன் கூட்டி ஆக்கிய சோற்றையும் திணை மாவையும் உண்டனர். அடி: 440-445.
மருத நிலத்தார் உணவு...
சோழ நாடு சோற்றுவளம் மிகுந்தது. நல்ல காய்கறிகள் மிக்கது. ஆதலின், சோணாட்டார் நல்ல அரிசிச் சோற்றையும் காய்கறிகளையும் நிரம்ப உண்டிருத்தல் வேண்டும். ஆயினும், சிலவே இந்நூலுள் குறிக்கப்பட்டுள்ளன.
மருத நில மக்கள் கரும்பும் அவலும் குறிஞ்சி நிலத்தார்க்குக் கொடுத்து மான் தசையையும் கள்ளையும் பெற்றுக் கொண்டனர் என்பது பொருநராற்றுப்படையில் கூறப்பட்டுள்ளது. அடி:216-217.
ஓய்மானாட்டு மருத நிலத்தார் வெண்சோற்றையும் நண்டும் பீர்க்கங்காயும் கலந்த கலவையை(கூட்டை)யும் உண்டனர். (சி.ஆ.படை அடி:193-195).
தொண்டை நாட்டு மருத நிலத்துச் சிறுபிள்ளைகள் (காலையில்?) பழைய சோற்றை உண்டனர்; அவலை இடித்து உண்டனர். (பெ.ஆ.படை அடி:223-226).
தொண்டை நாட்டு மருத நிலத்தார் நெற்சோற்றை பெட்டைக்கோழிப் பொரியலோடு உண்டனர். (பெ.ஆ.படை அடி:254-56).
தொண்டைநாட்டுத் தோப்புக் குடில்கள் பலாப்பழம், இளநீர், வாழைப்பழம், நுங்கு, வள்ளிக்கிழங்கு, சோறு முதலியவற்றை உண்டனர். (அடி:356-66).
நெய்தல் நிலத்தார் உணவு...
ஒய்மானாட்டு நெய்தல் நிலத்தார் நுளைச்சி அரித்த கள்ளையும் உலர்ந்த குழல் மீனின் சூட்டிறைச்சியையும் உட்கொண்டனர். (சி.ஆ.படை அடி:156-163).
தொண்டை நாட்டுப் பட்டினத்தில் (இக்கால மாமல்லபுரத்தில்) நெல்லை இடித்த மாவாகிய உணவை ஆண் பன்றிக்கு இட்டுக் கொழுக்க வைத்தனர். அங்ஙனம் கொழுத்த ஆண் பன்றியைக் கொன்று அதன் இறைச்சியைச் சமைத்து உண்டனர். களிப்பு மிகுந்த கள்ளைப் பருகினர். (பெ.ஆ.படை அடி:339-345).
காவிரிப்பூம்பட்டினத்து மீனவர் கடல் இறா, வயல் ஆமை ஆகிய இரண்டையும் பக்குவம் செய்து உண்டனர். (ப.பாலை அடி:63-64). பனங்கள்ளை உட்கொண்டனர். (அடி:89). நெல்லரிசிக் கள்ளையும் பருகினர். (அடி:93). கள்ளுக்கடைகளில் மீன் இறைச்சியும் விலங்கு இறைச்சியும் பொரிக்கப்பட்டு விற்கப்பட்டன. (அடி:176-178).
மறையவர் உணவு...
பாற்சோறு, பருப்புச்சோறு, ஆகுதி பண்ணுதற்கேற்ற இராசான்னம் என்னும் நெல்லின் சோறு, மிளகின் பொடியுடன் கலக்கப்பட்டு கருவேப்பிலையிடப்பட்டு பசு நெய்யிற்கிடந்து வெந்த கொம்மட்டி மாதுளங்காய், மாவடு ஊறுகாய் என்பவற்றைத் தொண்டைநாட்டு மறையவர் உண்டனர். (பெ.ஆ.படை அடி:304-310)...