வயதுப் பொருத்தமில்லாமலும், மணமக்கள் விருப்பம் இல்லாமலும் பெற்றோர் அவர்களாகவே நடத்தும் திருமணங்கள் சுயமரியாதையற்ற திருமணங்கள் என்பது ஈ. வெ. ரா அவர்களின் கருத்து.
இதைத் தன் மேடைப் பேச்சுக்களிலும், ’குடியரசு’ பத்திரிகையிலும் அவர் கூறியிருக்கிறார்.
தன் இயக்கத்துத் தொண்டர்களுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் நூற்றுக்கணக்கான சுயமரியாதைத் திருமணங்கள் நடத்தி பெரிதும் ஊக்கமளித்து வந்த ஈ. வெ. ரா.
09-07-1949 அன்று தன் 72-ஆவது வயதில், தன்னை விட 46 வருடங்கள் சிறியவரான 26 வயதான மணியம்மையைப் பதிவுத் திருமணம் செய்துகொண்டது இயக்கத்தின் மற்ற தலைவர்களையும், தொண்டர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பலர் நிலைகுலைந்து போயினர்.
வயது பொருத்தமில்லாத திருமணங்கள் சுயமரியாதையற்றவை என்று மேடைகள் தோறும் முழங்கி வந்த சுயமரியாதை இயக்கத்தலைவர், சுயமரியாதையற்ற பதிவுத் திருமணம் செய்துகொண்டது அவருடைய உண்மையான சுயரூபத்தையே காண்பித்ததாக பலர் எண்ணலாயினர்.
ஈ. வெ. ராவின் இரண்டாவது திருமணத்தைக் கடுமையாக எதிர்த்தவர்களுள் அண்ணாவும் ஒருவர்.
அந்தத் திருமணத்திற்குப் பிறகு ‘திராவிட நாடு’ பத்திரிகையில், அதைக் கண்டித்தும், அதைப் பற்றிப் புலம்பியும், ஈ. வெ. ராவின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியும் பல கட்டுரைகள் தொடர்ந்து எழுதியுள்ளார் அண்ணா. (”ஈ. வெ. ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்” – ம. வெங்கடேசன் – பக்கம் 118-137)
மற்றும் ஒரு தலைவரான திரு இராம அரங்கண்ணலும் ஈ. வெ. ராவின் இடண்டாவது திருமணத்தைச் சகியாதவர். ”மனச்சாட்சியின்படி நடக்க விரும்பியவர்களில் ஒருவர் இராம. அரங்கண்ணல். அவர் தன்னுடைய எதிர்ப்பை நூதனமான முறையில் தெரிவித்தார். ‘வயதானவர்கள் இளம் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளக்கூடாது’ என்ற பொருள்பட ஈ. வெ. ரா பல மேடைகளில் முழங்கியிருந்தார். அந்தப் பேச்சுக்களைத் தொகுத்து ஈ. வெ. ரா-வுக்குத் தெரியாமல் இந்த (அ)சந்தர்ப்பத்தில் விடுதலை இதழில் அச்சேற்றிவிட்டார் அரங்கண்ணல்.
அவர் விடுதலை இதழில் துணையாசிரியராக இருந்தார். விடுதலை இதழின் உரிமையாளர் ஈ. வெ. ரா. அதில் வெளிவந்ததோ ஈ. வெ. ராவின் பேச்சு.
தன்னுடைய கையால் தன் கண்ணைக் குத்துகிறார்களே என்ற கோபம் ஈ. வெ. ராவுக்கு; அரங்கண்ணல் வெளியேற்றப்பட்டார். பகுத்தறிவாளர்களின் பயணத்தில் இது இன்னொரு மைல்கல்” என்று தன்னுடைய ”போகப் போகத் தெரியும்” தொடர் கட்டுரையில் தெரிவிக்கிறார் மூத்த பத்திரிகையாளர் சுப்பு அவர்கள்.
தன்னுடைய சுயநலத்திற்காக சற்றும் வயது பொருத்தமில்லாத சுயமரியாதையற்ற பதிவுத் திருமணம் செய்துகொண்ட ஈ. வெ. ரா அதன் பிறகும் தன் தொண்டர்கள் மத்தியில் சுயமரியாதைத் திருமணத்தைப் பற்றி பிரசாரம் செய்துவந்துள்ளார். 20-04-1962 தேதியிட்ட ‘விடுதலை’ இதழில், “பதிவுத் திருமணத்தில் ரிஜிஸ்ட்ரார் முன்னிலையில் நாங்கள் சட்டப்படிக் கணவனும், மனைவியுமாக ஏற்று நடக்க சம்மதிக்கிறோம் என்று மட்டும்தான் சொல்கிறார்கள்.
நாம் நடத்தும் திருமணத்தில் ‘நாங்களிருவரும் ஒருவருக்கொருவர் துணைவர்களாக வாழ்க்கை ஒப்பந்தம் செய்துக்கொள்வதோடு ஒருவருக்கொருவர் எல்லாத் துறைகளிலும் இன்ப-துன்பங்களில் சமபங்கு அளித்துச் சமமாக ஒத்துவாழ உறுதி கூறுகின்றோம்’ என்று சொல்லும் முறையை கையாள்கிறோம். நம்முடையது சம உரிமைத் திருமணம் அல்லவா?” என்று எழுதி, சுயமரியாதைத் திருமணத்தில் சம உரிமையும் விளங்குகிறது என்றும் கூறுகிறார். (”ஈ. வெ. ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்” – ம. வெங்கடேசன் – பக்கம் – 137)
சுயமரியாதைத் திருமணத்திற்கான சட்ட அங்கீகாரம்
1925ல் சுயமரியாதை இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு அதன் போதைமிகு பிரசாரத்தில் மயங்கிபோன அப்பாவித் தொண்டர்கள் நூற்றுக் கணக்கில் சுயமரியாதைத் திருமணங்கள் செய்து கொண்டனர். தங்கள் குடும்பத்தாருக்கும் செய்து வைத்தனர். இத்திருமணங்கள் நாற்பது வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. ஆனால் ஒரு திருமணத்திற்காகவாவது சட்ட அங்கீகாரம் கிடையாது. பகுத்தறிவுப் போதையில் மயங்கிக் கிடந்த அப்பாவித் தொண்டர்கள், தங்கள் திருமணங்கள் ச்ட்டப்படி செல்லாது என்பது தெரியாமலும், தாங்கள் கலாசாரமும் பாரம்பரியமும் கொண்ட பெரும்பான்மையான மக்களின் முன்னால் சுயமரியாதையை இழந்து நிற்கிறோம் என்பது புரியாமலும், உழன்று கொண்டிருந்தனர்.
கடைசியாக 1967-ல் தி. மு. க. தேர்தலில் வென்று ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் தான், முதலமைச்சராக இருந்த அண்ணா சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் கிடைக்க ஏற்பாடு செய்தார்.
1955 ஆம் ஆண்டில் இந்தியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்து திருமணச் சட்டத்தில் ஒரு திருத்தம் செய்ய வேண்டி, தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த அறிஞர் அண்ணா, அதற்கான மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றத்தில்கொண்டு வந்தார். இது சட்டமன்ற விவாதத்திற்குப் பின்பு அப்போதிருந்த சட்டமன்ற அவை, மேலவை ஆகிய இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு இந்தியக் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு,
17-01-1968-ல் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று, 20-01-1968-ல் அரசிதழில் வெளியிடப்பட்டு ”சுயமரியாதைத் திருமணச் சட்டம்” என்று சட்ட வடிவமாக்கப்பட்டது.
பகுத்தறிவுப் போதையில் மயங்கிக் கிடந்திருந்த அப்பாவித் தொண்டர்களுக்கு தங்கள் இயக்கம் ஆட்சிக் கட்டிலில் ஏறிய மயக்கமும் சேர்ந்துகொள்ள, தாங்கள் இழந்திருந்த சுய மரியாதையைத் திரும்பப் பெறவேண்டும் என்ற எண்ணமே ஏற்படவில்லை.
அதிர்ஷ்டவசமாக, ஆரம்பித்திலிருந்து நாற்பது ஆண்டுகளில் நடைபெற்றுள்ள அனைத்து சுய மரியாதைத் திருமணங்களுக்கும் சட்ட அங்கீகாரம் கிடைக்குமாறு வழிவகை செய்தது அண்ணாவின் அரசு...