சனவரி புத்தாண்டு தமிழருக்கு எவ்விதம் அந்நியமோ அதேபோல சித்திரைப் புத்தாண்டும் தமிழருக்கு அந்நியமே.
சித்திரை முதல் நாளில் பிறக்கும் மாதங்களின் பெயர்கள் ஒன்றேனும் தமிழாக இல்லை.
சித்திரை முதல் நாள் தமிழர்களின் புத்தாண்டென்றால் ஏன் மாதங்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக இல்லை? தமிழில் மொழிக்கு முதலில் வராத எழுத்துகள் பல இடம் பெற்றுள்ளன.
அனைத்துச் சொற்களும் தமிழ் மொழிக்கும் மரபுக்கும் பண்புக்கும் மாறான வடமொழி வடிவங்களே!
அறுபது ஆண்டு கதை :
இப்போது வழங்கும் பிரபவ தொடங்கி விய ஈறாக 60 ஆண்டுப் பெயர்கள் சாலிவாகனன் என்பவனால் அல்லது கனிஷ்ஷனால் கி.பி 78-இல் ஏற்பட்டவை. இவை வடநாட்டு அரசனால் ஏற்பட்டவையால் தாலின் வடமொழிப் பெயர்களாய் உள்ளன. (பக்கம் 7 தி ஹிந்து 10-03-1940).
அறுபது ஆண்டுச் சக்கரம் சுற்றிச் சுற்றி வருவத னாலும் அது மிகக் குறுகிய காலத்தைக் (60ஆண்டுகள்) கொண்டுள்ளதாலும் வரலாற்று ஆசிரியர்களுக்குப் பயன்படாது.
ருத்ரோத்காரி ஆண்டில் ஒருவர் பிறந்தார் என்று கூறினால் எந்த ருத்ரோத்காரி என்று அறியமுடியாது'. (பக்கம் 163 - பாவாணரின் ஒப்பியன் மொழி நூல்-1940) மேற்குறிப்பிட்டவை மூலமாக 60 ஆண்டு வந்தவழி, அது நடைமுறைக்கு நாட்டில் வந்த ஆண்டு, வரலாற்று ஆசிரியர்களுக்குப் பயன்படாமை ஆகியன பற்றிய செய்திகளை நாம் அறிய முடிகிறது.
கண்ணனும் நாரதரும் கலவி செய்து பெற்றெடுத்த குழுந்தைகள்தாம் 60 தமிழ் ஆண்டுகள் என்பது புராணக் கதை. இந்தக் கதையே அருவருக்கத்தக்கது. ஆபாசமானது. அறிவுக்கும் அறிவியலுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தம் இல்லாதது. கருத்துக்கும் காலத்துக்கும் ஒத்துவராதது.
மானமும் அறிவும் உள்ள மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாதது. இந்தக் குழப்ப ஆண்டு முறையால் குடும்பம், குமுகாயம் (சமுதாயம்), நாடு, உலகம் ஆகியவற்றின் வாழ்க்கை, வரலாற்று நிகழ்ச்சிகளை 60 ஆண்டுகளுக்கு மேல் கணக்கிட முடியாது.
புராணக் கதையின்படி கிருஷ்ண பரமாத்மா நாரதரைப் பெண்ணாக்கி அவரோடு கலந்து அறுபது குழந்தைகளைப் பெற்றார் என புராணங்கள் கூறுகிறது. இந்த அறுபது ஆண்டுகளின் பெயர்களை அலசிப் பார்க்க வேண்டும்.
பிரபவ முதல் அட்சய வடமொழிப் பெயர்களாவது தமிழர்கள் பெருமை கொள்ளத் தக்கவாறு உள்ளதா என்றால் அப்படியும் இல்லை.
எடுத்துக்காட்டாக மூன்றா வது ஆண்டின் பெயரான "சுக்கில' ஆண் விந்தைக் குறிக்கிறது. இருபத்து மூன்றாவது ஆண்டான "விரோதி' எதிரி என்ற பொருளைத் தருகிறது. முப்பத்தெட்டாவது ஆண்டு "குரோதி' இதன் பொருள் பழி வாங்குபவன் என்பதாகும். முப்பத்து மூன்றாவது ஆண்டின் பெயர் "விகாரி' பொருள் அழகற்றவன், ஐம்பத்து ஐந்தாவது ஆண்டான "துன்மதி' கெட்டபுத்தி என்று பொருள்.
இப்படிப்பட்ட அருவருக்கத்தக்க வரலாற்றைக் கொண்டு வந்து தமிழனின் தலையில் கட்டிவைத்து இதுதான் தமிழ்ப் புத்தாண்டு என்று பறைசாற்றுவதில் உண்மையும் நேர்மையும் இருப்பதாகத் தோன்றவில்லை.
வரலாற்றில் மாபெரும் சறுக்கல் ஏற்பட்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக உள்ளங்கை நெல்லிலிக்கனி போல் தெரிகிறது.
ஆகவே, காலங்காலமாக அறிவாராய்ச்சி இன்றி குருட்டுத்தனமாகத் தமிழர்கள் சித்திரையைப் புத்தாண்டாகக் கொண்டாடி வந்திருக்கின்றனர் என்பது புலப்படுகிறது. இன்று, நிலைமை அவ்வாறு இல்லை. தமிழ்ப் புத்தாண்டு தொடர்பில் பல்வேறு ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் நடைபெற்று மறைந்துகிடந்த உண்மைகள் வெளிப்பட்டுவிட்டன.
இனியும் தமிழ் மக்களை மடையர்கள் என்று எண்ணிக் கொண்டு ஆதிக்க (ஆரிய)க் கூட்டம் ஆட்டம் போடாமல் அமைதியாகப் போவதுதான் நல்லது.
ஆரிய வழிசார்ந்தவர்கள் தங்களுக்கு எந்த ஆண்டு வேண்டுமோ வைத்துக்கொள்ளட்டும்; எந்த நம்பிக்கை வேண்டுமோ வைத்துக் கொள்ளட்டும்; சமஸ்கிருத மொழி வேண்டுமானால் வைத்துக்கொள்ளட்டும்; கிரந்தம் வேண்டுமானால் வைத்துக்கொள்ளட்டும்; ஆரிய வாழ்க்கை முறையை வைத்துக் கொள்ளட்டும். இவை அனைத்தையும் அவர்களுடன் வைத்துக் கொள்ளட்டும்.
ஆரியக் கூட்டத்தின் மூடத்தனங்களை எந்த நிலையிலும் "எந்தச் சூழலிலும்' எந்த வடிவத்திலும் "எந்த முறையிலும்' எந்த ஊடகத்திலும் உலகின் நனிசிறந்த இனமாகிய தமிழ் இனத்தின் மீது திணிக்க வேண்டாம்! தமிழர் மீது திணிக்க வேண்டாம்! காரணம், அவ்வாறு திணிப்பது ஆதிக்க மனப்பான்மை மட்டுமன்று மனித உரிமை மீறல் என்பதை எவரும் மறக்கலாகாது.
இந்த 60 ஆண்டு முறையால் தமிழர் மொழி, மரபு, மானம், பண்பு, வாழ்வு முதலிலியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அழிவும் இழிவும் எண்ணிப் பார்த்து, உணர்ந்து தெளிந்த தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921-ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிய மாநாட்டில் ஆராய்ந்தார்கள். பேராசிரியர் கா. நவச்சிவாயர் அந்த மாநாட்டைத் தொடக்கி வைத்தார்.
திருவள்ளுவர் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பு தைத் திங்கள் முதல் நாள் பிறந்தவர் என்றும் அவர் பெயரில் தொடர் ஆண்டை பின்பற்றுவது என்றும் அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது என்றும் முடிவு செய்தார்கள.
இந்த முடிவுகள் எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டன என்ற கேள்விக்கு முத்தமிழ்க் காவலர் முனைவர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் "மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அறிஞர்களின் அறிவு, ஆராய்ச்சி, பட்டறிவு ஆகியவையே அடிப்படை என்று குறிப்பிடுங்கள் போதும்' என்று விளக்கம் தந்தார்.
இந்த முடிவு செய்தவர்களில் தலையான தமிழ் அறிஞர்கள் தமிழ்க் கடல் மறைமலை அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி கலிலியாண சுந்தரனார், தமிழ்க் காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு வேங்கடசாமி, நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ விசுவநாதம் ஆகியோர் அடங்குவர்.
திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை. இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் கிழமைகள் வழக்கில் உள்ளவை. திருவள்ளுவர் காலம் கி.மு 31. எனவே, ஆங்கில ஆண்டுடன் 31 கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு 2038. தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ்நாடு அரசிதழிலும், 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.
தமிழ் புத்தாண்டு..
பழந்தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது. பின்னர் ஆவணி ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது. பின்பு சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது. எனவே இழந்த தொன்மைச் சிறப்புக்குரிய தை மாதம் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் ஆகும்.தை முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாடுவதற்கு வானியல் அடிப்படையும் உண்டு. அன்றுதான் ஞாயிறு தனது தென் திசை நோக்கிய செலவை முடித்துக் கொண்டு வட திசை நோக்கிய செலவை மகர இராசியில் இருந்து மேற்கொள்கிறது.
தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட கழக இலக்கியங்களில் காணப் பெறும் சான்றுகள் சில:
1. தைஇத் திங்கள் தண்கயம் படியும் (நற்றிணை).
2. தைஇத் திங்கள் தண்ணிய தரினும் (குறுந்தொகை).
3. தைஇத் திங்கள் தண்கயம் போல் (புறநானூறு).
4. தைஇத் திங்கள் தண்கயம் போல (ஐங்குறுநூறு).
5. தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ (கலிலித்தொகை).
தைப் பிறந்தால் வழி பிறக்கும், தை மழை நெய் மழை, முதலான பழமொழிகள் இன்றும் தமிழ் மக்கள் நாவில் பயின்று வருகின்றன.
இவை வாழையடி வாழையாக வாய்மொழிச் சான்றாக அமைந்துள்ளன...