நெடியதொரு வரலாற்றின் சின்னமாய் விளங்கும் மதுரைநகர் தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகர் என்பதை உலகறியும்.
அந்த மதுரையின் பெயர் காரணங்களையும் அது சம்மந்தமான கதைகளையும், சற்றே நீண்ட இப்பதிவில் காணலாம்.
மதுரையை உருவாக்க குலசேகரப் பாண்டியன் என்ற மன்னனின் கனவில், ஒரு கார்த்திகை சோமவாரத்தன்று தோன்றிய சிவபெருமான் அருள்பாலித்தார். பாண்டியனுக்கு ராஜதானியாய் விளங்கிய மணவூர் என்ற நகரில் வசித்த தனஞ்ஜெயன் என்ற வணிகர், வியாபாரத்தை முடித்து விட்டு கடம்ப மரங்கள் நிறைந்த வனம் ஒன்றிற்கு வந்தார்.
இருளாகி விட்டதால் காட்டிலேயே தங்கினார். அவர் அமர்ந்த இடத்தின் அருகே ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவனை வணங்கி விட்டு சற்று தள்ளி அமர்ந்து கொண்டார். சிறிது நேரத்தில், வானிலிருந்து தேவர்கள் பலர் வந்தனர். அவர்கள் லிங்கத்திற்கு பூஜை செய்து வழிபட்டனர்.
மறுநாள் தான் கண்ட காட்சியை மன்னனிடம் சென்று கூறினார். மன்னனும் தான் கண்ட கனவுக்கு ஏற்ப, சிவலிங்கம் கடம்பவனத்தில் இருப்பதை அறிந்து அந்த இடத்தில் ஒரு கோயில் எழுப்பி லிங்கத்தை பிரதிஷ்டை செய்தான். கோயிலைச் சுற்றி அழகிய வீதிகளும் அமைக்கப்பட்டன.
அப்போது, சிவபெருமான் தனது ஜடாமுடியில் இருந்த சந்திரக்கலையில் இருந்த மதுரமான அமிர்தத்தை, கங்கா ஜலத்துடன் கலந்து அந்த நகரின் மீது தெளித்தார்.
மதுரமான அமுதம் சிந்தியதால் அவ்வூருக்கு மதுரை என பெயர் சூட்டப்பட்டது என்று ஒரு சிலர் கூறுகின்றனர்.
மருத மரங்களும் நிறைந்திருந்த காரணத்தால் மருதை என்றழைக்கப்பட்டு, பிற்காலத்தில் மதுரை என்று திரிந்தது. கிராமப்புற மக்கள் இன்றைக்கும் கூட மதுரையை ‘மருதை’ என்றழைப்பதும் குறிப்பிடத்தக்கது.
கடம்ப மரங்கள் அதிகமாய் இருந்ததால் கடம்ப வனம் என்றும், சிறப்பு வாய்ந்த கோவில்கள் இந்நகரைச் சுற்றி அமைந்திருக்கும் படியால் கோவில் நகரம் என்றும் மதுரை அழைக்கப்படுவது வழக்கம்.
ஆலவாய் என்ற மற்றொரு பெயராலும் மதுரை அழைக்கப் பெற்றது. ‘ஆலம்’ என்ற சொல்லுக்கு நீர்நிலை என்று பொருள். பழம் மதுரையில் வைகையில் எப்போதும் நீர்நிறைந்து ஓடியதால் ‘நீர் நிலைகளுக்கு நடுவே அமைந்த ஊர்’ என்ற பொருள்பட இப்பெயர் வழங்கப்பெற்றது.
சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக் கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது என்றும் ஒரு வரலாறு கூறுகிறது.
நான்மாடக்கூடல் என்னும் பெயரே கூடல் என மருவியுள்ளது. திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர் ஆகிய நான்கு திருக்கோவில்கள் சேர்ந்தமையால், நான்மாடக்கூடல் என்னும் பெயர் வழங்கலாயிற்று என்பர்.
‘கன்னிகோவில்’, ‘கரியமால் கோவில்’, ‘காளிகோவில்’, ‘ஆலவாய்க் கோவில்’ ஆகிய நான்கு திருக்கோவில்களும் மதுரைக்குக் காவலாக அமைந்ததால், நான்மாடக்கூடல் என்னும் பெயரமைந்தது என்பாரும் உளர்.
வருணன், மதுரையை அழிக்க ஏழு மேகங்களை அனுப்பினான். அதைப்பற்றி இறைவனிடம் பாண்டியன் முறையிட, இறைவன் நான்கு மேகங்களை மதுரையைக் காக்க அனுப்பினார். அந்நான்கும் நான்கு மாடங்களாகக் கூடி மதுரையைக் காத்தமையால் நான்மாடக்கூடல் என்னும் பெயர் ஏற்பட்டதாகப் பரஞ்சோதியார் கூறியுள்ளார்.
எந்நாட்டவரும் எவ்வூரினரும் வந்துகூடும் வளமான நகர் என்பதால், கூடல் மாநகர் என்னும் பெயர் பெற்றது என்பர். சங்கம் வைத்துச் செந்தமிழை வளர்க்க, புலவர் எல்லாரும் கூடியதால், கூடல் என்னும் பெயர் ஏற்பட்டதாகவும் அறிஞர் கூறுவர்.
மாநகர் மதுரை எப்போதும் மணக்கோலம் பூண்டது போன்ற தோற்றத்துடன் திகழ்வதாக இளங்கோவடிகள் ‘மணமதுரை’ என்ற சொல்லாடல் மூலமாக விளக்குகிறார். ‘விழாமலி மூதூர்’ எனும் சிறப்புப் பெற்ற மதுரை, ஆண்டின் அனைத்து மாதங்களிலும் விழாக்கோலம் பூண்டு திகழ்கிறது.
மதுரை நகரின் கட்டிடக் கலையும் நகரமைப்பும் கிரேக்க நாட்டின் தலைநகரைப் போன்று இருந்ததால் ‘கிழக்கு நாடுகளின் ஏதென்ஸ்’ என்று மதுரையைப் பற்றி கிரேக்க யாத்திரிகர் மெகஸ்தனிஸ் கி.மு.3ஆம் நூற்றாண்டு தனது இண்டிகா எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
உலகமே உறங்கிக் கொண்டிருக்கும் வேளையிலும் சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருப்பதால் இது தூங்காநகரம் என்ற பெயரையும் பெற்றுள்ளது.
மதுரையைக் குறிப்பிடும் பலமொழிகளும் ஏராளம் உண்டு. மதுரையைச் சுற்றிய கழுதை மதுரையை விட்டுப் போகாது என்பர். இது மதுரையின் ஈர்ப்புத்தன்மையும், வசீகரமும், அழகும் மதுரையை விட்டுச் செல்ல மனம் ஏற்காது என்பதை சுட்டிக்காட்டுகிறது.
அதே போல “முதல் நாள் இரவில் நிச்சயம் செய்தால் மறு நாள் காலையில் திருமணம் நடத்திவிடலாம் மதுரையில்” என்றும் கூறுவதுண்டு. அதாவது திருமணத்திற்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் ஓரிரவில் வாங்கி விட முடியும் என்பதாலும் ஒரு வீட்டின் விழாவிற்கு ஊர் கூடி உழைக்கும் என்பதாலும் சொல்லப்பட்டது.
தாய் தந்தையைத் தவிர மதுரையில் எது வேண்டுமோ கிடைக்கும் என்பர். மதுரை பண்டைய காலம் முதலே மிகப் பெரிய வர்த்தக் நகர் என்பதால் இப்படி சொல்லப்படுகிறது.
இந்நகரைச் சுற்றியுள்ள பெரும்பாலான இடங்களின் பெயர்களுக்கு காரணம் உண்டு. இந்த காரணங்களில் பல மொழி சிதைவால் அழிந்து வருகின்றன. இவற்றில் சிலவற்றை இங்கே பட்டியலிட்டுல்லோம்.
மதுரை வீதிகள்..
உலகின் மிகப்பழைய நகரங்களான ரோம், வெனீசு, மொகஞ்சதரோ போல மதுரையும் நன்கு திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட நகரம். தாமரைப் பூவைப் போல இந்நகரின் வடிவமும் அதன் இதழ்களைப் போல தெருக்களும் அதன் நடுவில் உள்ள மொக்கினைப் போல கோயிலும் இருப்பதாக பழந்தமிழ் இலக்கியமான பரிபாடல் கூறுகிறது.
மீனாட்சியம்மன் கோயிலுக்குள் இருக்கும் வீதிகளுக்கு ஆடி வீதி என்று பெயர். அதைத் தாண்டி கோயிலுக்கு வெளியில் சித்திரை வீதிகள், சித்திரை வீதீகளுக்கு அடுத்த வீதிகள் ஆவணி வீதிகள், அதைத் தாண்டி வெளியே வந்தால் மாசி வீதிகள். அதையும் தாண்டி வெளி வீதிகள் என மதுரை நகர் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தெருக்களுக்கு தமிழ் மாதங்களின் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கும் ஒரு காரணம் உள்ளது. மன்னர்கள் காலத்தில் குறிப்பிட்ட மாதங்களில் நடைபெறும் விழாக்கள் அந்த மாதங்களின் பெயரிலான தெருக்களில்தான் நடைபெறும்.
திருபரங்குன்றம்..
இது தமிழ் கடவுளான முருகப் பெருமானின் அறு படை வீடுகளுள் ஒன்று. நக்கீரர் திருமுருகாற்றுப் படையில் போற்றியிருக்கும் தலம். இது மதுரைக்குத் தென் மேற்கில் சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. முருகன் இந்திரனின் மகளாகிய தெய்வானையை மணம் செய்து கொண்ட பதியாகும். சங்கநூல்கள் பலவற்றில் குறிக்கப் பெற்ற தொன்மைச் சிறப்புடையது.
முருகன் மணவிழாக் கோலத்தில் இக்கோவிலில் காட்சி தருகிறார். விநாயகர் கனியும் கரும்பும் கரங்களில் ஏந்தி மணவிருந்தினைச் சுவைத்து நிற்கும் கோலத்தில் காணப்படுகிறார்.
இக்கோயிலில் முருகன் உருவத்திற்கு அபிஷேகம் செய்வதில்லை. முருகன் கைவேலுக்கே அபிஷேகப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
திருபரங்குன்றம் எனும் சொல் சிவபெருமானுக்கு உரிய மலை என்றும் பொருள் தரும். அதாவது திரு + பரன் (ஈஸ்வரன்) + குன்றம் (மலை).
சோழவந்தான்..
ஒரு முறை சோழ மன்னன் மதுரைக்கு பாண்டியமன்னனை சந்திக்க இந்த ஊர் வழியாக செல்லும் பொது, இங்கு காணப்பட்ட பசூமையை கண்டு வியந்தமையல் சோழன் வந்து உவந்தான் என்று ஆனது பின் மறுவி சோழவந்தான் ஆனது.
சோழமன்னர் இங்கு இரண்டு நாள் தங்கி பின் சென்றுள்ளார். அவருடன் வந்த போர்வீரர்கள் ஆலமரத்தின் கீழ் கொட்டம் ஆமைத்து தங்கி இடம் இன்று ஆலங்கொட்டாரம் என்று அழைக்கப்படுகிறது.
திருப்புவனம்..
திருப்புவனத்தின் உண்மையான பெயர் திருப்பூவனம் ஆகும். தமிழகத்தில் கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னர் சமணமும் புத்தமும் தலையெடுத்து வளர்ந்தோங்கி இருந்தன,
நந்தி மறைக்காத சிறப்புடைய கோயில்..
மதுரை ஆண்ட பாண்டிய மன்னனை மீண்டும் சைவத்திற்கு மாற்றும் பொருட்டு, மங்கையர்க் கரசியார் திருஞான சம்பந்தரை அழைத்து வரச் செய்தார்.திருஞான சம்பந்தர் மதுரைக்குச் செல்லும் முன்னர் மதுரையின் கிழக்கு எல்லையான திருப்பூவணத்திற்கு வருகிறார், வைகை ஆற்றின் வடகரையில் திருக்கோயில் உள்ளது, தென் கரையில் அம்பாள் ஆடிமாதம் தவம் செய்த இடம் உள்ளது, இந்த இடத்திற்கு வந்த திருஞானசம்பந்தர் அங்கிருந்து வடகரையில் உள்ள திருப்பூவணநாதரை வணங்கி வழிபடுகிறார்.
அப்போது வைகை ஆற்றின் மணல்கள் எல்லாம் சிவ லிங்கங்களாகக் காட்சியளித்துள்ளன, எனவே ஆற்றுமணல்களை மிதிக்க அஞ்சிய திருஞான சம்பந்தர் அங்கிருந்தபடியே பதிகம் பாடி இறைவனை வழிபடுகிறார், பாடல் கேட்ட சிவபெருமான். நந்தியைச் சற்றே சாய்ந்திருக்கச் சொல்லி ஆற்றின் மறுகரையில் நின்றுபாடும் திருஞான சம்பந்தருக்குக் காட்சியருளியுள்ளார்,
இதனால் திருப்பூவணத்தில் இன்றும் நந்தி மறைக்காது, ஆற்றின் வடகரையில் உள்ள ஆடித் தபசு மண்டபத்தில் இருந்தபடியே தென் கரையில் உள்ள சிவ லிங்கத்தை வழி படலாம்,
மதுரை மாநகரம் இந்திரனுடனான போரினாலும். கண்ணகி இட்ட தீயினாலும். வையை ஆற்றுப் பெருக்கினாலும் அழிந்தழிந்து மீண்டும் மீண்டும் உயிர் பெற்றது, ஆனால். திருப்பூவணத் திருத்தலம் தொன்மைக் காலம் முதல் அழிவிற்கு உட்படாமல் அப்படியே பழமையுடன் உள்ளது.
திருவேடகம்..
மதுரைக்கு மேற்கே சோழவந்தானுக்கு முன் இந்த ஊர் அமைந்துள்ளது, இதன் பெருமை: சைவ சமயத்தை மீண்டும் மதுரையில் தழைக்க காரணம், சைவ பெரியார் திருநாவுகரசர் சமண மதத்தலைவர்களின் புணல் வாதம் நடந்த போது திருநாவுகரசரின் சைவ ஏடுகலை வைகை ஆற்றில் விட்ட போது இந்த ஊரில் ஏடு கரை ஏறியதால் திரு+ஏடு+அகம் மறுவி இந்த பெயர் வந்தது. இந்த கிராமத்தில் ஒரு சிவன் கோவில் உள்ளது.
கோச்சடை புட்டுத்தோப்பு அரசரடி..
புட்டு திருவிழா மதுரையில் நடக்கும் பிரபலமான விழா. சொக்கநாதர் பாண்டிய மன்னனிடம் பிரம்படி வாங்கிய கதை நடந்தது இங்கு தான் . கோபம்+சடையன் (சிவன் கோபத்துடன் வந்து படுத்த இடம்) தான் கோச்சடை என்று பெயர் பெற்றது.
அதற்கு ஆதாரம் கோச்சடையில் வைகை கரையோரம் இருக்கும் மீனாட்சி கோவிலில் இருக்கும் பிரம்பு வடிவம் வடிக்கப்பட்டுள்ள சிவலிங்கம்.
ஆவணி மாதத்தில் வைகை ஆற்றில் புட்டுத் திருவிழா நடைபெறுகிறது. தற்போது தெய்வங்கள் வைகைக்கரைக்கே வருகின்றன. அங்கு தங்கியருளுகின்றன. அன்றைய நாளில் மதுரையில் அந்த தெய்வங்கள் நிகழ்த்திய திருவிளையாடல்கள் இன்றும் நடித்துக் காட்டப் படுகின்றன.
ஈசன் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டகதை..
சைவ சமயக்குரவர்களுல் ஒரவரான மாணிக்க வாசகர் மதுரையில் அமைச்சராக இருந்தார். அவர் மிகச்சிறந்த சிவபக்தர் என்பதை நான் சொல்லி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது இல்லை.
ஒரு முறை குதிரைகள் வாங்க வேண்டி மிகுந்த பணம் கொடுத்து மாணிக்க வாசகரை அனுப்புகிறான் பாண்டியன். ஆனால் சிவமயத்தில் மூழ்கிய மாணிக்கவாசகர், அந்தப் பணத்தை எல்லாம் ஒரு சிவன் கோயில் கட்டுவதில் செலவழித்துவிடுகிறார். அந்தக் கோயில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயிலில் இருக்கிறது. பணத்துடன் காணமல் போன மாணிக்கவாசகர் பால் கடுப்பாய் இருந்த மன்னவன், அவர் மதுரைக்கு வந்தவுடன், பொதுப்பணத்தை விரயம் செய்ததாக அவரைச் சிறையில் தள்ளுகிறான்.
ஆனால் மாணிக்கவாசகர் பால் பரிவு கொண்ட சிவபெருமான் நரிகளைக் குதிரைகளாக்கி அரண்மனைக்கு அனுப்புகிறார். மாயத்தோற்றத்தால் ஏமாற்றப்பட்ட மன்னவன், மாணிக்கவாசகரை விடுதலை செய்கிறான். அத்துடன் முடியவில்லை இந்தத் திருவிளையாடல். எவ்வளவுதான் நரிகள் புல்லைத் தின்னும்? அங்குள்ள உண்மையான குதிரைகளையும் கடித்துக் குதறிவிட்டு ஓடி விருகின்றன. ஏமாற்றத்தால் மிகுந்த சினம் மிகுந்த பாண்டியன் மாணிக்க வாசகரைச் சித்திரவதை செய்ய ஆரம்பித்து விடுகிறான்.
அந்தச் சித்திரவதையைக் கண்டு ஆத்திர மடைந்த சிவன், வைகையில் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்துகிறார். கரை கடந்த வைகை நீர் மதுரை முழுவதுமாக மூழ்கடிக்க முயற்சி செய்தது. உடைப்பைத் தடுத்து நிறுத்த வீட்டிற்கு ஒருவர் வரவேண்டும் என்று மன்னவன் ஆணையிட்டதன் பேரில் அனைவரும் உடைப்பைத் தடுத்து நிறுத்துவதில் மும்முரமாக இருந்தனர். அப்போது புட்டு சுட்டு விற்கும் கிழவி ஒருத்தி, தன் வீட்டில் ஆண்பிள்ளை இல்லாததால் தன் பங்கை மதுரைக்குச் செலுத்த முடியாதவளாய் வருந்திக் கொண்டிருந்தாள்.
அப்போது தினக்கூலி வடிவத்தில் வருகிறார் சிவன். அந்தக் கிழவியிடம், அவள் தனக்குப் புட்டு தருவதாய் இருந்தால் அவள் வீட்டுக்குரிய ஆண்மகனாகத் தான் வெள்ளப்பெருக்கை அடைப்பதாகக் கூறுகிறார். கிழவியும் மனமகிழ்ந்த கிழவி அவருக்குப் புட்டு கொடுக்கிறாள். ஆனால் நடந்ததோ வேறு. புட்டு முழுவதையும் தின்று விட்டு அந்த இளைஞன் ஒரு மரத்தடியில் படுத்து உறங்க ஆரம்பிக்கிறான்.
இந்த இடம் தான் பின்னர் புட்டுத்தோப்பு என்றானது. அந்த நேரத்தில் பணிகளை மேற்பார்வையிட வந்த வேலையாட்கள், தூங்கிக் கொண்டிருக்கும் இளைஞனைப் பார்த்த மாத்திரத்தில் ஆத்திரம் கொண்டு, சாட்டையால் அவன் முதுகில் விளாசுகிறான்.
அந்த நேரம் அந்த இளைஞன் மறைந்து விட, அவன் எறிந்த மண்ணில் வைகையின் வெள்ளமும் கட்டுப்பட, அதற்கும் மேலாக, அந்த இளைஞனுக்குக் கொடுத்த அடி எல்லோர் முதுகிலும் படிந்தது.
இந்த அடியை மன்னவன் உட்பட அனைவரும் உணர்ந்த காரணத்தினால் மன்னர் இருந்த இடம் அரசரடி (அரசர் + அடி) என்று பெயர் பெற்றது. அப்போது வந்தவர் சொக்கநாதரே என்று அறிந்து கொண்டார்கள் அனைவரும்.
அந்த சமயத்தில் மாணிக்க வாசகரை மன்னித்து ஏற்றுக்கொள்ள பாண்டியனை வேண்டுகிறார் சிவபெருமான்.
இந்தத் திருவிளையாடலில், சிவன் நினைத்தால் மாணிக்க வாசகரை அவர் சக்தியால் விடுதலை பெற வைக்கலாம். ஆனால் அவர் பொதுப்பணத்தை சிவன் கோவில் கட்ட செலவழித்தது தவறு. அதற்கு தண்டனை கொடுத்துதானே ஆகவேண்டும்.
கடைசியில் கூட, மாணிக்க வாசகரை விடுதலை செய்ய பாண்டியனிடம் சிபாரிசு மட்டுமே செய்கிறார். ஏனென்றால் மதுரை என்றால் அரசியல் தலைவன் அரசன். அந்தப் போக்கில் சொக்கநாதப் பெருமான் தலையிட முடியாது. இவ்வாறாக கதை முடிகிறது...