28/04/2017

சித்தராவது எப்படி - 40...


தெய்வீகம் ஊட்டப் பட்ட சுவாசம்...

நிஜத்தை நகல் ஆக்குவதும், நகலை நிஜமாக்குவதும், உண்மையை பொய் ஆக்குவதும் பொய்யை உண்மை ஆக்குவதும் ஆகிய செயல்களை மட்டுமே செய்கின்ற அமைப்புகள் இருக்கின்றன..

இந்த அமைப்பின் ஏமாந்த உறுப்பினர்கள் உலகில் நூற்றுக்கு தொன்னூற்று ஐந்து பேர் எனலாம்...

இன்று மனித வர்க்கம் ஏறக்குறைய முழுமைக்கும் நிலைகுழைந்து போய் சீரழிந்து போய் மன அளவில் மிகப் பெரிய பாதிப்புக்கு உண்டானது என்றால், அதற்கு இந்த அமைப்புகளே காரணம்..

நாளைய மிக பெரிய உலக சீரழிவுக்கு இன்றே இந்த அமைப்புகளால் வித்திடப் படுகிறது..

நிலைமை இப்படியே நீடித்தால் உலகம் நாளைய பெரும் சீரழிவிலிருந்து தப்பிக்கவே முடியாது என்பது உறுதியாக தெரிகிறது...

இந்த நகலை நிஜமாக்கும் தந்திரத்தில் ஒரு மனிதன் தன்னையே தெய்வம் என பறை சாற்றி கொள்ளும் அளவிற்கு மிக கீழ் தரமாக போய் விட்டது.. இது ஒன்றே நிஜம் தொலைந்து போனதிற்கு சாட்சியாக உள்ளது...

சரி தொலைந்து போன அந்த நிஜம் தான் என்ன ? இந்த மனித தேகத்தில் எது ஒன்று நின்று விட்டால் சில வினாடிகள் கூட தாங்க முடியாமல் இந்த தேகம் வலு இழந்து சரிந்து விடுமோ, அந்த சத்தியத்தை மனிதன் நினைப்பது இல்லை..

வினாடிக்கு வினாடி, நொடிக்கு நொடி, நிமிடத்திற்கு நிமிடம் இந்த தேகத்தை காத்து கொண்டு இருக்கும் ஒன்று, நமது நாளைய பொழுதையும் வரும் எதிர் காலத்தையும் துளியும் காப்பாற்றாது என தவறாக நினைத்து தன்னை காப்பாற்றிக் கொள்ள அந்த நிகழ் கால நிஜத்தை விட்டு நகலை தேடி அலையும் மனிதனின் பண்பை என்னவென்று சொல்லுவது ?

அந்த நிகழ் கால நிஜம் இதுதான் என்று சொல்லும் அந்த தருணமே, ப்பூ இவ்வளவு தானா என்று முக சுளிப்போர் எத்தனை பேர்?

அத்தனை பேர்களும் அந்த நிகழ் கால நிஜம் சில வினாடிகள் கிடைக்க வில்லை யென்றால், அவர்கள் படும் தேகத் துயரம் நன்றாக அறிந்து இருந்தும், துளியும் உணராது இருப்பது எதனால் ?

காரணம் முதலில் சொன்னது போல் அந்த அமைப்புகள் மனிதனை குழந்தை முதலே நன்றாக மூளை சலவை செய்து நிஜத்தை நகல் என்றும், நகலை நிஜம் என்றும் ஆழ் மனதில் பதிய வைத்தது தான் காரணம்..

வாழையடி வாழையென அந்த பதிவுகள் இன்று சந்ததிகள் வழியாகவும் பலமாக நீடித்துக் கொண்டும் இருக்கிறது... இனி மேல் மனிதனுக்கு நிஜத்தை உணரும் சந்தர்ப்பங்களே இல்லாதது போல் தெரிகிறது...

அந்த நிகழ் நேர நிஜம் நமது சுவாசம் என்பதை மறக்கக் கூடாது.. ஒவ்வொரு சுவாசத்தை நாம் உணரும் போது அதில் உண்மையான தெய்வ நிலை இருப்பதை உணரலாம்..

எது நம்மை இந்த வினாடியில் வாழ வைக்கின்றதோ நிலை நிறுத்தி வைக்கின்றதோ அதில் ஒன்றில் மட்டுமே நிகழ் கால தெய்வம் உள்ளதை உணர வில்லையென்றால் நாம் எல்லாம் இழந்தவர்கள் ஆகிறோம்.. அதனால் முடிவில் எல்லாம் இழந்து மரணத்தை தழுவுவதே நிஜம் ஆகிறது..

தோன்றா நிலையிலே அனைத்து உயிர்களையும் காக்கின்ற நிஜம் அதாவது உண்மை இருக்கின்றது.. அதுவே அனைத்து உயிர்களையும் காப்பதால், அது தோன்றா நிலையில் இருந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம்...

இந்த உண்மையை புத்தி உள்ள எவரும் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.. அப்படி அந்த தோன்றா நிலைக்கு அழைத்து செல்லும் அல்லது காட்டும், அந்த சுவாசம் ஒன்றே தெய்வ நிலைக்கான ஒரே ஒரு நிஜம்..

திகைப்பூட்டும் இந்த உண்மையை உணர்ந்து கொள்ளும் அந்த கணமே நாம் தெய்வீக நிலை நோக்கி வேகமாக முன்னேறுகிறோம்..

அந்த சுவாசத்தில் சூரிய கலையில் முழுமையாக தோன்றாநிலை கிடைக்கின்ற போது, கிடைத்தது தொடர்கின்ற போது, தெய்வீக நிலை முழுமையாக நமக்கு கிடைக்கின்றது..

எல்லாம் செயல் கூட்டி வைக்கும் அந்த நிகழ் கால தெய்வீகத்தோடு இருக்காமல் நகலை பிடித்துக் கொள்வது, எந்த விதத்தில் சரியானது என்ற நம் தமிழ் சித்தர்களின் கூக்குரல் மனித வர்க்கத்தின் காதில் ஒலித்து உணரும் போது மட்டுமே மனித குலம் காப்பாற்றப் படும்...

அந்த நிகழ் நேர நிஜத்தை பிடித்து நாம் நிறை நிலை சித்தனாக முயலுவோமாக...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.