சிங்களர்கள் எல்லாம் வங்காளத்தில் இருந்து குடியேறியவர்கள். துடுக்கும் துட்டத்தனமும் மிக்க விசயசிம்மன் என்ற வங்க இளவரசன் தன் தந்தையிடம் சண்டையிட்டுக் கொண்டு, தன்னைப் போன்ற சிலரை கப்பலில் ஏற்றினான் சென்று சேர்ந்தது இலங்கை தீவில்.
பெடூயின்சு(ஸ்) என்று இப்போது அறியப்படுவோரின் முன்னோராகிய புனோ என்ற ஆதிவாசிகள் அப்போது இந்த நாட்டில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் இந்த விக்கிரசிம்மனை வரவேற்று அவனுக்கு தனது மகளையும் திருமணம் செய்து வைத்தனர்.
அவனும் சிலகாலம் ஏதோ ஓழுங்காக இருந்தான். பிறகு மனைவியுடனும் நண்பர்களுடனும் சதிசெய்து, திடீரென ஒரு இரவில் புனோ அரசனையும் அவளை சார்ந்தவர்களையும் கொன்று இலங்கையை கைப்பற்றி, மன்னனாக பட்டம் சூட்டிக்கொண்டான்.
அவனது கொடுமை அத்துடன் நிற்கவில்லை, காலம் செல்லச் செல்ல வங்காளத்திலிருந்து பல ஆண்களையும் பெண்களையும் வரவழைத்தான்.
ஆதிவாசி பெண்ணை புறக்கணித்து விட்டு அனுராதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டான். பிறகு ஆதிவாசி இனத்தையே அழிக்க முற்பட்டான், அவர்களில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டார்கள்.
தப்பிப்பிழைத்த ஒருசில சந்ததியினரை இன்னும் காடுகளில் காணலாம். இவ்வாறு இலங்கை சிங்களம் ஆகியது, வங்காள குண்டர்களின் இருப்பிடம் ஆகியது.
காலம் செல்லச் செல்ல அசோகப் பேரரசின் காலத்தில் அவரது மகன் மகேந்திரனும் சங்கமித்திராவும் துறவு மேற்க்கொண்டு, மதபிரச்சாரத்திற்காக இலங்கைக்கு வந்தனர்.
இங்கே மக்கள் காட்டுமிராண்டிகளாக வாழ்வதைக் கண்டார்கள். அவர்களை நாகரீகம் உடையவர்களாக மாற்றி அவர்களுக்காக தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தார்கள்.
அவர்களை புத்தமதத்திற்கு மாற்றினர். இலங்கையின் நடுவில் ஒரு நகரத்தை உருவாக்கி அதை அனுராதபுரம் என்று பெயரிட்டனர். இன்று பாழ்பட்டு கிடக்கும் அந்த நகரத்தை காண்பவர்கள் திகைத்து நிற்பர்.
வேலைப்பாடுகள் கொண்ட உயரமான தூண்கள் பாழ்பட்டுகிடக்கும் இடிந்த கருங்கல் கட்டிடங்களும் பல மைல்துரம் இன்றும் காணப்படுகிறது. மழித்த தலையுடன் மஞ்சள்நிற ஆடையுடன் ஆண் பெண் துறவிகள் பிச்சைப் பாத்திரத்துடன் இலங்கைமுழுவதும் காணப்பட்டனர்.
மாபெரும் கோவில்கள் எழுந்தன.உள்ளே புத்தரின் தியானநிலை, நீதிநெறியை போதிப்பது போன்ற நிலை மற்றும் மகா நிர்வாண நிலை என பல்வேறு விக்கிரகங்கள் உ்ள்ளன.
இலங்கை வாசிகளும் தங்கள் கைவண்ணத்தை காட்டியுள்ளார்கள். தீங்கு செய்பவர்களுக்கு தண்டனை கொடுப்பது, வாளால் அறுப்பது, சாட்டையால் அடிப்பது, கொதிக்கும் எண்ணையில் போடுவது, தோலை உரிப்பது போன்ற சித்திரங்கள் சுவர்களில் வரையப்பட்டுள்ளன.
அகிம்சையை போதிக்கும் மதத்தில் இத்தகைய கொடுமைகளுக்கு இடம் இருக்கும் என்றால் யாராவது நம்ப முடியுமா?
சீனாவிலும், யப்பானிலும் கூட இதேபோல் தான் அவர்கள் பேசுவதோ அகிம்சை ஆனால் அவர்கள் கொடுக்கும் தண்டனைகளைப் பார்த்தால் ரத்தம் உறைந்துபோகும்.
பௌத்தர்கள் மிகவும் சாதுவானவர்கள், எல்லா மதங்களையும் மதிப்பவர்கள் என நாம் கேள்விப்படுகிறோம். ஆனால் உண்மையில் அவ்வாறு இல்லை, அவர்கள் நம்மைகண்டால் பழிக்கிறார்கள்.
நான் ஒருமுறை தமிழர்களிடையே அனுராதபுரத்தில் சொற்பொழிவு செய்து கொண்டிருந்தேன். நிகழ்ச்சி நடைபெற்றது ஒரு திறந்த மைதானத்தில். யாருடைய சொந்த இடத்திலும் இல்லை.
நான் பேச ஆரம்பித்தது தான் தாமதம் புத்தமதத்தின் பிட்சுக்களும் மற்றவர்களும் ஆண்களும் பெண்களும் அங்கே தம்பட்டங்களையும் தாளங்களையும் தட்டி பெருத்த ஆரவாரம் செய்தனர்.
அதில் என்னால் பேச முடியவில்லை. ரத்தக்களறி ஏற்படுகின்ற சூழ்நிலை. நாமாவது அகிம்சையை கடைபிடித்து அமைதியாக போவோம். என்று கூறி தமிழர்களை சமாதானப்படுத்தினேன். பிறகு எப்படியோ எல்லாம் அமைதியானது.
நாளடைவில் தமிழர்கள் மெல்ல மெல்ல வடக்கிலிருந்து இலங்கையின் மற்ற பகுதிகளில் குடியேறினர். பாதகமான சூழ்நிலை ஏற்படுவதைக்கண்ட பௌத்தர்கள் தலைநகரை (அனுராதபுரத்தை) விட்டுவெளியேறி கண்டி என்றும் மலைப்பகுதியில் குடியேறினர்.
சிறிது காலத்தில் தமிழர்கள் அந்த இடத்தை கைப்பற்றி, அங்கே ஓர் இந்து மன்னனுக்கு பட்டம் சூட்டினர். அதன் பிறகு ஸ்பானியர், போர்ச்சுக்கீசியர், டச்சுக்கார்கள் என ஐரோப்பிய கூட்டம் வரத்தொடங்கியது.
இறுதியாக ஆங்கிலேயர்கள் வந்து அரசை கைப்பற்றினர். கண்டியிலிருந்த அரச பரம்பரையினர் தஞ்சாவுருக்கு நாடு கடத்தப்ட்டார்கள். அங்கு அவர்கள் ஓய்வுதியம் பெற்றுவருகிறார்கள்.
வட இலங்கையில் இந்துக்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்து வருகிறார்கள். தென்பகுதியில் பௌத்தர்களும் பல்வேறு வகைப்பட்ட ஐரோப்பிர்களும் வசித்துவருகின்றனர். பௌத்தர்களுடைய தற்போதைய தலைநகரம் கொழுப்பு..
இந்துக்களின் தலைநகரம் யாழ்ப்பாணம். குலக்கட்டுப்பாடுகள் (ஜாதி) இந்தியாவில் உள்ளதுபோல் இங்கே இல்லை. இந்து குலங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரே குலமாகிவிட்டது. இவர்கள் எந்த குலத்தைச் சேர்ந்த பெண்களையும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
ஐரோப்பிய பெண்களை திருமணம் செய்யவும் தடையில்லை. அவர்களின் பிள்ளைகள் கோவிலுக்கு சென்று நெற்றியில் விபூதி அணிந்து சிவசிவ என்று சொல்கிறார்கள். இந்துவை மணக்கும் ஜரோப்பியர்களும் சிவசிவா என்று கூறி இந்துக்களாகி விடுகிறார்கள்.
இதனால் கிறித்தவ பாதிரிகள் இந்துக்கள் மேல் கோபத்தில் உள்ளார்கள். இலங்கைக்கு வந்த பல ஐரோப்பியர்கள் இவ்வாறு இந்துக்களாகி விட்டார்கள்.
இங்குள்ள மக்கள் அத்வைதம், வீர சைவம் ஆகிய நெறிகளை பின் பற்றுகிறார்கள். ஆனால் இந்து என்று சொல்வதற்கு பதிலாக சைவம் என்று சொல்ல வேண்டும். இலங்கைத் தமிழ் துாயதமிழ். இலங்கை மதம் துாயதமிழ் மதம்.
இலங்கையில் மக்கள் ஆயிரக்கணக்கில் ஒன்றுகூடி பக்தி மேலிட குழுப்பாடல் (பஜனை) செய்வதும், சிவபெருமானைப் பற்றி பக்தி பாடல்களைப் பாடுவதும், ஆயிரக்கணக்கான மிருதங்களின் ஓசையும், பெரிய பெரிய தாளங்கள் எழுப்பும் ஒலியும், சிவந்த கண்களுடன் நல்ல உடற்கட்டுடன் காட்சியளிக்கும் தமிழர்கள் மகா பக்தனான அனுமனைப் போல கழுத்தில் உருத்திராட்சை மாலை அணிந்து விபூதி பூசிக்கொண்டு மெய் மறந்து நடனம் ஆடுவதும், காணக்கண் கொள்ளாக் காட்சி.
அதனை கற்பனை செய்து பார்க்க முடியாது. அவ்வளவு அழகு...