இல்லாவிட்டால் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் இனி ஆண்டில் இரண்டு முறை நடத்தப்படும் என்று அறிவித்திருப்பது ஏன்?
சமூக நீதி, சம வாய்ப்பு மற்றும் மாநில உரிமைக்கே எதிரான எந்த நுழைவுத் தேர்வுமே தேவையில்லை என வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
”கல்வி” என்றால் “கற்றல்” என்று பொருள்.
கற்றலுக்கு அதாவது கற்பதற்குத் தகுதி உடையோர், தனி உரிமை படைத்தோர் இன்னார்தான் என்று யாரைச் சொல்ல முடியும்?
எல்லோருக்கும் கல்வி வேண்டும்; எனவே பாஸ் மார்க் வாங்கிய எல்லோருமே தாம் விரும்பும் உயர்கல்வியைக் கற்கத் தகுதி உடையவரே, உரிமை படைத்தவரே.
இதில் அதிக மார்க் வாங்கியிருந்தால் இடம் கிடைப்பது எளிது; குறைந்த மார்க் என்றால் இடம் அரிது; இது புரிந்துகொள்ளக்கூடியதே.
ஆனால் இதில் நுழைவுத் தேர்வைப் புகுத்தி கல்வி கற்பதற்கான வாய்ப்பையே மறுப்பது என்ன ஞாயம்?
இது ஏற்ற தாழ்வு சாதி பேதம் உள்ள சமூகம்; இந்த அவலம் கல்வி கற்கும் வாய்ப்பிலும் குறுக்கிடுவது எப்படி ஞாயமாகும்?
அதனால்தான் நுழைவுத் தேர்தவே வேண்டாம் என்கிறோம்.
ஆனால் மத்திய அரசு தமிழக மக்கள் உயர்கல்வி பயிலக் கூடாது என்று நுழைவுத் தேர்வுகளைக் கொண்டுவந்தது.
ஆனால் தமிழக அரசின் உயர்கல்வி நிலையங்கள் மார்க் அடிப்படையில் மாணவர்களைச் சேர்த்து கல்வியில் புரட்சியே நிகழ்ந்தது.
இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாமல்தான் மருத்துவம் படிக்க “நீட்” நுழைவுத் தேர்வைத் திணித்தது மத்திய பாஜக மோடி அரசு.
இப்படி தீய உள்நோக்கத்தில் புகுத்தப்பட்ட நீட் தேர்வு தீமையானதாகவே இருக்கிறது; தகிடுதத்தங்களும் தில்லுமுல்லுகளும் நிரம்பியதாக உள்ளது.
இரண்டாண்டு நீட் தேர்வுகள் கணிசமான தமிழக மாணவர்களை மருத்துவம் படிக்கவிடாமல் செய்துவிட்டன.
இருந்தும் மனம் ஆறவில்லை மோடி அரசுக்கு; இப்போது நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் இனி ஆண்டில் இரண்டு முறை நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறது.
”மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வை நடத்தாது. நீட், ஜேஇஇ, யுஜிசி நெட், சிமேட் தேர்வுகளை தேசியத் தேர்வுகள் முகமைதான் (National Testing Agency) இனி நடத்தும். இந்த நுழைவுத் தேர்வுகள் அனைத்தும் கணினி முறையில் (computer-based) நடத்தப்படும். அதோடு 2019 முதல் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும். ஜேஇஇ மெயின் தேர்வு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களிலும் நீட் தேர்வு பிப்ரவரி மற்றும் மே மாதங்களிலும் நடைபெறும். தேர்வு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்” என்றார் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.
இப்படி ஆண்டுக்கு இரண்டு முறை நுழைவுத் தேர்வை நடத்துவது மற்ற தேர்வுகளுக்கும் மாணவர்களைப் படிக்கவிடாமல் செய்து எதிலும் பாஸாகாமல் அவர்களின் படிப்பையே பாழாக்குவதாகும்.
மேலும், இரண்டு முறை நீட்டுக்கு ஃபீஸ் கட்டியழ வேண்டும்; இதற்கு வசதியில்லாத மாணவர்கள் நீட் தேர்வுக்கே கும்பிடு போட நேரிடும்.
ஆக, மோடி அரசின் நோக்கம் இரண்டு வகைகளிலும் வெற்றி பெறும்; தமிழக மாணவர்களை உயர்கல்வியிலிருந்தே அப்புறப்படுத்த முடியும் மற்றும் கார்ப்பொரேட்டுகளை மேலும் வளப்படுத்த முடியும்.
கல்வித் தரம் என்பதெல்லாம் சும்மா பேச்சு; கார்ப்பொரேட்டுகள் கல்லா கட்டத்தான் நீட் மற்றும் அதன் பயிற்சி மையங்கள் என்பதுதானே நடைமுறை உண்மை.
அதனால்தான் நாம் கேட்கிறோம்; மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை கார்ப்பொரேட் வள மேம்பாட்டுத் துறையாக மாற்றப்பட்டுவிட்டதா என்று.
இல்லாவிட்டால் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் இனி ஆண்டில் இரண்டு முறை ஏன் நடத்தப்பட வேண்டும்?
சமூக நீதி, சம வாய்ப்பு மற்றும் மாநில உரிமைக்கே எதிரான எந்த நுழைவுத் தேர்வுமே தேவையில்லை என வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
எனவே, இனியும் தயங்காமல் தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய நீட்-விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் பெறுவதுடன், கல்வியை பழையபடி மாநிலப் பட்டியலுக்கே கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறோம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.