09/04/2018

மக்கள் போராட்டங்களை கண்டுக் கொள்ளாத தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்ய வேண்டும் சமூக ஆர்வலர் திரு.அக்ரி பரமசிவன் கோரிக்கை...


முதலமைச்சர் மற்றும் தலைமை செயலருக்கு கடிதம்...

1 மாநகராட்சி , 2 நகராட்சிகள், 3 வருவாய் கோட்டங்கள் , 9 தாலுகாக்கள் , 12 ஊராட்சி ஒன்றியங்கள் , 19 பேரூராட்சிகள், 437 கிராம நிர்வாக அலகுகளை கொண்ட தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 05.06.2017அன்று 24வது மாவட்ட ஆட்சியராக திரு.வெங்கடேஷ் ஐஏஎஸ் அவர்கள் பொறுப்பேற்றார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை முதன்மையாகவும் முழுவதுமாகவும் தீர்ப்பேன் என உறுதியளித்தார்.

ஆனால் இன்று வரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில்(328 கிராமங்களில் ) குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது.

விவசாயிகள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய பயிர்க்காப்பீடு தொகைக்காக கோவில்பட்டி மற்றும் பிற பகுதி விவசாய பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி கிடைக்க வேண்டி போராடி வருகின்றனர்.

திங்கள் குறைத்தீர் கூட்ட மனு நாளில் தினசரி பல நூறு வயதான முதியவர்கள் மற்றும் ஊனமுற்றோர்கள் உதவித்தொகை கேட்டு மனு வழங்கி வருகின்றனர்.

கிடைப்பது என்னவோ அலைச்சலும் அலைகழிப்பும் தான்.

அதுமட்டுமன்றி கடந்த 2017அக்டோபர் மாதம் முதல் பல்வேறு தாலூகா அலுவலர்களின் நிர்வாக தவறுகளால் முதியோர் மற்றும் ஊனமுற்றோர் உதவித்தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த வண்ணம் உள்ளது.

விவசாய நீர் தேவைகளை கொள்ளையடித்து நிலத்தடி நீரை உறிஞ்சி வியாபார நோக்கத்தில் தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டுமென கடந்த 2017 ஜூலை மாதம் முதல் பல மனுக்கள் அளித்தும் சமூக ஆர்வலர்களின் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் கண்டுக்கொள்ளாமல் தொழிற்நிறுவனங்களுக்கு சாதகமாக மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

தமிழக அரசாணை நிலை எண்:233 எம்எம்சி2 ன் படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 625 குளங்களில் கரம்பை மண்/சவுடு மண் எடுக்க விவசாயிகளின் பெயரை பயன்படுத்தி பல்வேறு இடங்களில் மண் திருட்டு நடைப்பெற்றது இதனை எதையும் பெரிதுப்படுத்தாமல் ஊமையாகிவிட்டது தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்.

மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்களின்  கோரிக்கை மனுக்களை ஜனநாயக வழியின் அகிம்சை போராட்ட வடிவில் மனு கொடுக்க வரும் நபர்கள் மீது பொய்வழக்கு போட்டு மிரட்டுவதாக உள்ளது மாவட்ட ஆட்சியரின் செயல்பாடு.

தூத்துக்குடி மாவட்டத்தில் நிலவும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் சுகாதார சீர்கேடுகளை கண்டுக் கொள்ளாததால் கடந்த ஆண்டு டெங்கு பாதிப்பில் தூத்துக்குடி மாவட்டம் முதலிடம்.

பல ஆண்டுகளாக தூத்துக்குடி மையப்பகுதியான விவிடி சிக்னல் அருகே ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் அமைக்க வலியுறுத்தியும் பழைய பேருந்து நிலையத்தில் இலவச கழிப்பறை வசதி செய்துகொடுக்க பலமுறை மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொண்டும் பலனில்லை.

நலத்திட்ட உதவிகளை வழங்கியும், விழிப்புணர்வு பேரணி துவக்கி வைத்தும்,கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்தும் பத்திரிக்கை மற்றும் ஊடகத்திற்கு பேட்டி கொடுப்பது மட்டுமே பணியாக உள்ளது.

 ஒவ்வொரு மனுநீதிநாள் முகாம் ,அம்மா முகாம் ,கிராம சபை கூட்டம்,மற்றும் பொதுமக்களின் போராட்ட களங்களுக்கு மாவட்ட ஆட்சியர் நேரடியாக சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை  களைய  நடவடிக்கை மேற்க்கொண்டதில்லை.

சட்டம்ஒழுங்கு மற்றும் குற்றவியல் நிகழ்வுகளை நேர்முக உதவியாளர் (குற்றம்) மூலம் அறியும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாவட்டத்தில் தினசரி நிகழ்கின்ற செயின்பறிப்புகள்,வீடு புகுந்து கொள்ளை ,கொலைக்குற்ற சம்பவங்கள் இவற்றை தடுக்க மாவட்ட நிர்வாகம் மேற்க்கொண்ட நடவடிக்கைகள் என்னவாக உள்ளது.

வருவாய் கோட்டாச்சியர் , கலால் உதவி ஆணையர் முதல் கிராம நிர்வாக அலுவலர் வரையிலான லஞ்ச முறைகேடு  பல்வேறு தரப்பினரிடமிருந்து புகார் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

தூய்மை இந்தியா திட்டத்தில் கழிப்பறை கட்டியதில் பல கோடி முறைகேடு ,குளம் பராமரிப்பில் பல கோடி மோசடி இவை யாவும் அறிந்தும் விசாரணை மேற்கொள்ளாமல் மூடி மறைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 1730க்கும் மேற்பட்ட தொழிற்சாலை இருக்கின்றன.இதில் மக்களுக்கும், கால்நடை உயிரினங்களுக்கும்,நீர் நிலம் காற்று மற்றும் வளிமண்டலங்களை சீர்கெடுக்கும் 8 அபாயகரமான தீங்கு விளைவிக்கக்கூடிய சிகப்பு வகையிலான தொழிற்சாலைகளை அகற்ற தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் எவ்வித முன்முயற்சியும் எடுக்க வில்லை.

நாசகார ஸ்டெர்லைட் தொழிற்சாலையினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க அத்தொழிற்சாலையை மூட வலியுறுத்தி பல மாதங்களாக தன்னெழுச்சியுடன் போராடி வரும் பொது மக்களை நேரிடையாக சென்று சந்திக்காமல் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவான தனது போக்கை கடைபிடித்து வருகிறார்.

மேலும் பல்வேறு நிர்வாக திறமையின்மை காரணமாக பல மாதங்களாக தூத்துக்குடி மக்களுக்கு கிடைக்க வேண்டிய பல நலத்திட்ட உதவிகள் கிடைக்காமலும் பொது மக்கள் தங்களின் அடிப்படை தேவைகள் மற்றும் பிரச்சினைககளுக்காக போராடி வரும் சூழலை கண்டுக்கொள்ளாமல் இருக்கும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை உடனடியாக பணி மாறுதல் (இட மாற்றம்) செய்திட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களையும் மதிப்பிற்குரிய தலைமைச்செயலர் அவர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
அக்ரி.எஸ்.பரமசிவன்.
(சமூக ஆர்வலர்)
தூத்துக்குடி. செல்:9787305625...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.