மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின். - (குறள் 942 - அதிகாரம் - 95)..
உலகப் பொதுமறையான திருக்குறள் எக்காலங்களுக்கும் எந்நிலைக்கும் பயன் படும் ஒரு அற்புத நூலாகும்.
மனித வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திருக்குறளில் மருந்து என்ற அதிகாரத்தில் அய்யன் திருவள்ளுவர் மருத்துவம் பற்றி 10 பாடல்களை எழுதியுள்ளார். இது ஒரு மருத்துவப் பெட்டகம் நிறைந்த அதிகாரமாகும்.
“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.”
தான் முன்பு உண்ட உணவு செரித்துவிட்டது என்பதை அறிந்து அடுத்தவேளை உண்பானேயானால் அவனுக்கு மருந்து என்ற ஒன்று தேவையில்லை என்பதே வள்ளுவர் நமக்கு அருளிய இந்த திருக்குறளின் பொருள்.
பசித்துப் புசி என்பது சான்றோர் வாக்கு..
பசித்த பின்பே உணவருந்த வேண்டும். பசியாமல் உண்பது அஜீரணத்துக்கு வழிவகுக்கும். அஜீரணத்தால் உடல் இயக்கம் தடைபடும். இது பல நோய்கள் உருவாக காரணமாகிறது.
பஞ்சுப் பொதியல்ல நம் வயிறு. வயிறு முட்ட சாப்பிடுவது நல்லதல்ல. அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர். மீதி கால் வயிறு காற்றோட்டத்திற்கு. இப்படி இருந்தால் மட்டுமே சிறப்பு.
மூன்று வேளை கண்டிப்பாக சாப்பிட்டே ஆகவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் பலர். வயிறு செரிமானமாகாமல் இருப்பின் அடுத்த வேளை உணவை தவிர்த்து விடலாம். அதுவும் இரவு உணவு உண்பதில் எச்சரிக்கை வேண்டும். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இரவு உணவில் மாமிசத்தைத் தவிர்ப்பது நல்லது.
உலக மக்கள் இருவகை எண்ணம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
ஒன்று உயிர் வாழ்வதற்காக உண்பவர்கள். இரண்டாம் வகையினர் உண்பதற்காகவே உயிர் வாழ்பவர்கள். இந்த இரண்டாம் வகையினர் சாப்பாட்டுப் பிரியர்கள். இவர்கள் எப்போதும் எதாவது ஒன்றை சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள்.
தினமும் விருந்தும், கேளிக்கையுமாக உள்ளவர்கள் தங்கள் வாழ்வை அவர்களே குறுக்கிக் கொள்கிறார்கள்.
உணவு உண்பதில் ஒரு வரைமுறை வேண்டும். ஒரு கட்டுப்பாடு வேண்டும். கால இடைவெளி வேண்டும்.
“ஒருவேளை உண்பான் யோகி
இருவேளை உண்பான் போகி
முப்போதும் உண்பான் ரோகி
எப்போதும் உண்பான் துரோகி”
இப்பாட்டிலிருந்து நாம் அறிவது என்ன-
எப்போதும் சாப்பிட்டுக்கொண்டே ஒருவன் இருப்பானேயானால் அவன் தனக்குத்தானே துரோகம் செய்து கொள்கிறான். எப்போதும் எதையாவது உண்டு கொண்டே இருந்தால் வயிறு ஒரு அரவை இயந்திரமாகிப் போகிறது. அதன்பின் அதற்கு ஓய்வில்லாமல் போகிறது. இது வயிற்றில் சுரக்க வேண்டிய சுரப்பி நீர்களை அதிகமாகவோ, குறைவாகவோ நேரம் கெட்ட நேரத்தில் சுரக்க வைக்கிறது.
இதனால் நமக்கு தேவையில்லாத அஜீரணக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இது பல நோய்கள் உருவாக அடித்தளமாகிறது. அதனால் எவன் ஒருவன் தான் உண்ட உணவு செரிமானமாகிவிட்டது என்பதை உணர்ந்து சாப்பிடுகிறானோ அவனை எந்த நோயும் அணுகாது. மருந்துகளும் அவன் உடலுக்குத் தேவையில்லை. இதனை நம் திருவள்ளுவர் காலத்திலேயே எடுத்துத்துரைத்திருந்தாலும் நாம் இதுவரை உணரவில்லை. இனியாவது இதனை பின்பற்றுவோமாக...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.