திருப்பூரில், போலி ஆவணங்களைக் கொடுத்து வங்கியில் 20 கோடி ரூபாய் வரை கடன் மோசடிசெய்த வழக்கில், மேலும் ஒருவரை காவல் துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் செந்தில்குமார் - பிரியா தம்பதியர். இவர்கள், திருப்பூர் ஆலங்காடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்துவந்தனர். செந்தில்குமார், திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவந்தார். இவர், திருப்பூர் ஏ.பி.டி. சாலை அருகே உள்ள கார்ப்பரேஷன் வங்கியில் எந்தவித உரிய ஆவணங்களும் சமர்ப்பிக்காமலேயே, சுமார் 10.25 கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்றுள்ளார். அத்துடன், மேலும் சில நபர்களின் பெயர்களில் அதே வங்கியில் கடன் பெறுவதற்கான வேலைகளிலும் அவர் இறங்கியிருக்கிறார்.
அந்த வகையில் ராமசாமி, நடராஜ் மற்றும் ஹாரூண் ரஷித் ஆகிய 3 நபர்களின் பெயர்களில் ரூபாய் 18 கோடி கடன் பெற்றுள்ளார் செந்தில்குமார். இந்த நிலையில் சில மாதங்கள் கழித்து ராமசாமி உட்பட 3 பேருக்கும் வங்கியிலிருந்து கடன் தொகையை செலுத்தவேண்டி முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அப்போதுதான் தாங்கள் மூவருமே செந்தில்குமாரால் ஏமாற்றப்பட்ட விவரம் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.
பின்னர், இந்தக் கடன் மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள், திருப்பூர் மாநகர மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து, புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி பிரியா ஆகியோரைக் கைது செய்தனர். அத்துடன், சம்பந்தப்பட்ட வங்கியின் அந்நியச் செலாவணிப் பிரிவில் பணியாற்றும் சீனியர் மேனேஜர் சங்கர், சோமையாஜுலு ஆகியோரும் கைதுசெய்யப்பட்ட நிலையில் தற்போது, மோசடியில் செந்தில்குமாருக்கு உதவிபுரிந்ததாக அவரது நண்பர் ராஜேஷ்கண்ணா என்பவரையும் கைதுசெய்திருக்கிறது காவல் துறை.
திருப்பூர் வேலம்பாளையம் பகுதியில் வசித்துவந்த ராஜேஷ்கண்ணா, தான் தங்கியிருந்த வீட்டை காலி செய்துவிட்டு, கடந்த சில மாதங்களாகத் தன்னுடைய சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வசித்து வந்திருக்கிறார். காவல் துறையினர் தேடுதல் வேட்டை நடத்தி, அவரையும் தற்போது கைது செய்திருக்கிறார்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.