26/09/2018

தமிழகத்தில், திராவிடர் ஆட்சி - சில வரலாற்றுச் சான்றுகள்...


கடந்த 2000 ஆண்டுகால வரலாற்றில், தமிழகத்தைத் தமிழர்கள் ஆட்சி செய்த காலம் மிகக் குறைவு.

கி.பி.2 முதல் 9 வரை, ‘களப்பிரர், பல்லவர் ஆட்சிகள்.

கி.பி. 14 முதல் 17 வரை, விஜயநகர, நாயக்க, மராட்டிய, சுல்தானிய ஆட்சிகள்.

பின்னர் பிரிட்டிஷ் மற்றும் இந்திய ஆட்சிகள்.

பிற்காலச் சோழர்களின் மொத்த ஆட்சிக் காலமும் 300 ஆண்டுகளுக்கும் குறைவே. இராசராசச் சோழர் ஆண்ட காலமோ 27 ஆண்டுகளே.

தமிழகத்தின் சாதிய, ஆணாதிக்க, நிலவுடைமைச் சிக்கல்களுக்கு எல்லாம் ‘இராசராசச் சோழர்’ காலம்தான் அடிப்படை என்ற பிம்பம் மிக வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளது.

அல்லது தமிழர்களின் வரலாறே இவ்வாறான சீரழிவுகளின் வரலாறு தான் என்ற ‘கருத்து’ நிலைப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2000 ஆண்டுகளில் தமிழகத்தை அந்நியர்கள் ஏறத்தாழ 1700 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளனர்.

இவர்களது அரசியல் கொள்கைகளை விமர்சனம் செய்யும் ஆய்வுகளில் ‘முற்போக்கு’ அமைப்புகள் ஆர்வம் காட்டுவதில்லை.

அதேவேளை, பிற்காலச் சோழர் காலம் குறித்த விமர்சன நூல்களோ கணக்கில் அடங்காது. கட்டுரைகளோ கணக்கிடவே இயலாது எனும் அளவுக்கு எழுதப்பட்டுவிட்டன.

ஆக, தமிழ்நாட்டின் இன்றைய சமூகச் சீரழிவுகளுக்கெல்லாம் காரணம், தமிழர்கள் ஆட்சியில் இருந்த காலம் மட்டுமே. ’அந்நியர் ஆட்சியில் இருந்த காலத்தைப் பற்றிச் சிந்திக்கவே தேவை இல்லை’ என்ற முடிவில் தமிழக ‘முற்போக்கு’ அமைப்புகள் இயங்கிக் கொண்டுள்ளன.

குறிப்பாக, மிகச் சமீபத்தில் தமிழகத்தைக் கட்டியாண்ட விஜயநகர, நாயக்க. மராட்டிய மன்னர் காலம் பற்றி இந்த அமைப்புகள் கண்டு கொள்வதே இல்லை. இந்த வகையான கருத்துத் திணிப்புகள் தமிழகத்தில் கடந்த 100 ஆண்டுகளாகத் தொடர்ந்து நிகழ்த்தப்படுகின்றன.

விஜயநகரப் பேரரசின் கீழ் தமிழகம் இருந்த காலத்தின் நிலைகளைக் காணலாம்.

விஜயநகர ஆட்சியிக் காலத்தில், ‘பெண்கள் தங்கள் கணவனைத் தேர்ந்தெடுக்கப் பெரும்பாலும் அனுமதிக்கப்படவில்லை. பெற்றோரே தெரிவு செய்தனர்.

ஆணும், பெண்ணும் காதலித்து மணம் புரிவது மிகவும் அரிதாக இருந்தது. பலதார மணம் சமூகத்தில் மலிந்து இருந்ததால் அன்பும் காதலும் அரிதாகக் காணப்பட்டது. பெண்கள் கணவனின் கட்டுப்பாட்டில் முழுவதும் அடைக்கப்பட்டனர். பெண்களுக்குக் கணவனே எல்லாம் என்று மனுதர்மக் கொள்கை போதிக்கப்பட்டது.

(தமிழகத்தில் விஜயநகர ஆட்சி/சரசுவதிமகால் வெளியீடு 2007/ பக் – 106, 107).

பெருமளவிலான பிராமணர்கள் முழு நிலவுடைமையாளராக்கப்பட்டது ’திராவிட’ விஜயநகரப் பேரரசர் மற்றும் நாயக்கர் ஆட்சிக் காலத்தில் தான் என்பதே உண்மை வரலாறு.

கிருக்ஷ்ணதேவராயர் காலத்தில் பிராமணர் மேலும் தழைத்து ஓங்கினர். பல பிராமணர்கள் ’நாயக்கர்’ பட்டம் பெற்று, தமிழகத்தை ஆட்சி செய்யத் தொடங்கினர்.

கிருக்ஷ்ண தேவராயரது சாதனைகள் சில..

தேவதான நிலங்களின் வரியைத் தள்ளுபடி செய்தார்.

கிருக்ஷ்ணராயபுரம் என்ற கிராமத்தை ஏற்படுத்தி பிராமணர்களைக் குடியேற்றினார்.

கன்னடம் தாய்மொழி என்றாலும் தெலுங்கில் எழுதும் ஆற்றல் படைத்தவர்.

இவர் ஆட்சிக் காலத்தில் பிராமணர்கள் நன்கு மதிக்கப் பெற்றனர். எந்தக் குற்றங்கள் செய்தாலும் பிராமணர்கள் தண்டிக்கப்படவில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக, கிருக்ஷ்ணதேவராயர் தன் மகன் திருமலாவைக் கொன்ற சாளுவ திம்மா என்ற பிராமண அமைச்சரைக் கொல்வதற்கு ஆணை பிறப்பிக்கவில்லை.

பேரரசை நிர்வகிக்க, பிராமண அமைச்சரின் ஆலோசனைகள் கேட்டார். இது குறித்து அவர் கூறிய விளக்கம், ’பிராமணர்கள் அரசுக்கு நெருக்கடி வரும் சமயத்திலும் போர்க்காலங்களிலும் விசுவாசமான முறையில் நடந்து கொண்டனர். சில சமயம் அவர்களைச் சத்திரியர்களுக்கும், சூத்திரர்களுக்கும் கீழ் அதிகாரிகளாக நியமித்தாலும் பொறுப்புடன் செயல்பட்டனர்’ என்றார்.

இந்த வாக்குமூலம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பிராமணர்கள் சிறுபான்மையினர். ஆகவே அவர்கள் அரசனுக்கு எதிரான கலகங்களில் ஈடுபட மாட்டார்கள் என்பது இதன் உட்பொருள். அர்த்த சாத்திரமும் இதை மறைமுகமான விதியாக வலியுறுத்தியது.

அமார்த்யர் எனப்படும் மேல்தட்டு பிராமணர் மட்டுமே அரசனுக்கு நெருக்கமாக இருக்க வேண்டும்  என்பதற்காக ஏராளமான விதிகளை அர்த்த சாத்திரம் வகுத்தது.

அரசர்கள் இந்த விதியைக் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டால், ஆட்சியதிகாரம் முழுக்க பிராமணர்வசம் வந்துவிடும் என்பதே இதன் கருத்து.

அர்த்த சாத்திரத்தின்படி, அமார்த்யர்களே உண்மையான ஆட்சியாளர்கள் அல்லது மறைமுக ஆட்சியாளர்கள்.

விஜயநகரப் பேரரசின் உண்மையான அல்லது மறைமுகமான ஆட்சியாளர்களாக இருந்தவர்கள் பிராமணர்களே ஆவர். அவர்களுளிலும், படைத் தலைவர்களாக இருந்த ’நாயக்க’ பிராமணர்களே ஆவர்.

இன்று, ‘நாயக்கர்’ என்பது ஒரு சாதி. அக்காலத்தில் அது அரசரால் வழங்கப்பெறும் பட்டம். இப்பட்டம், கணிசமாக பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட்டது.

ஒரு சான்றைக் காண்போம்.

கிருக்ஷ்ண தேவராயர் காலத்தில் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மூவரில் ஒருவர் செல்லப்பா என்கிற வீரநரசிம்ம நாயக்கர். இவரது தந்தை காஞ்சிபுரம் பிராமணர். அவர் பெயர் தழுவக் குழைந்தான் பட்டர் என்பதாகும்.

(தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு – குடவாயில்.பாலசுப்ரமணியன்/சரசுவதி மகால் வெளியீடு 1999/ பக் – 50).

அதாவது, பிறப்பால் பிராமணர் தமக்கான பட்டத்தால் ‘நாயக்கர்’ ஆனார். இவ்வாறான பிராமண நாயக்கர்களே திராவிட விஜயநகர, நாயக்கர் காலத்தில் நிர்வாகிகளாகக் கோலோச்சினர்.

நாயக்கர் காலம் என்றால் அது ஏதோ ‘சூத்திரர்’ ஆட்சிக் காலம் என எண்ணிவிடக் கூடாது. அவ்வாறான பிம்பம் தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அதை ஏன் உருவாக்கினார்கள் என்பது விரிவான ஆய்வுக்குரியது.

விஜயநகரப் பேரரசு காலத்தில் நடந்த பிராமண ஆதரவு மாற்றங்களில் அடிப்படையானது, பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட ’சர்வமானிய’ நிலங்களாகும். இப்பெயரே உரைப்பது போல, நிலங்கள் பிராமணருக்கு முழு உரிமை உடையவையாக மாற்றித்தரப்பட்டன. எண்ணற்ற சர்வமானிய கிராமங்கள் உருவாக்கப்பட்டன.

ஆந்திரத்திலிருந்தும் கன்னடத்திலிருந்தும் பிராமணர்கள் வந்து குவியத் தொடங்கினர். அவர்களுக்கு, விஜயநகர அரசர்கள் தமிழகக் கிராமங்களை வாரி வாரிக் கொடுத்தனர். இக் கிராமங்களுக்குத் தணிக்கையும் கிடையாது. கணக்கு வழக்கும் இல்லை. பிராமண சாதிக்குத் தமிழகத்தில் நிலவுடைச் சாதி என்ற பெரும் வளர்ச்சி ஏற்பட்டது விஜயநகரப் பேரரசு மற்றும் நாயக்கர் ஆட்சிக் காலங்களில் தான்.

மனு நீதி கூறியபடி, கிராம ஆட்சியாளராக /தேசங்களின் ஆட்சியாளராக’ பிராமணர் மாற்றப்பட்டனர். பிராமணர்களுக்கு திராவிட அரசர்கள் வழங்கிய சலுகைகளையும் உரிமைகளையும் அவர்களால் தமிழகத்தில் ஏற்பட்ட தீய விளைவுகளையும் பட்டியலிட்டு அடங்காது.

குறிப்பாகச் சிலவற்றைக் காணலாம்.

பிராமணர்கள் கல்வி மையங்கள் ஆரம்பித்தனர். அவற்றில் வேதங்களும் சமய இலக்கியங்களும் கற்பிக்கப்பட்டன.

நான்கு வகைச் சாதிகளில் பிராமணர் உயர் சாதியினராகக் கருதப்பட்டனர்.

பல பிராமணர்கள் அரசியல் வாதிகளாகவும், அரசியல் அறிஞர்களாகவும், படைத் தலைவர்களாகவும் செயல்பட்டனர்.

அரண்மனைகளில் இரண்டாயிரம், மூவாயிரம் புரோகிதர்கள் பல்வேறு பொறுப்புகளில் இருந்தனர்.

பிராமணரிடையே இருந்த பழக்கங்களான, ’குழந்தைப் பருவ மணம், சீதனம் (வரதட்சிணை) போன்றவற்றைப் பிற சமுதாயத்தவரும் பின்பற்றத் தொடங்கினர்.

எந்தக் குற்றம் செய்தாலும் பிராமணருக்குத் தண்டனை இல்லை.

(தமிழகத்தில் விஜயநகர ஆட்சி /முனைவர் அ.சிங்காரவேல்/ சரசுவதி மகால் நூலக வெளியீடு 2007).

இக் காலத்திற்குப் பிறகு, சோழர் காலத்தில் பிராமணர்களுக்கு விதிக்கப்படிருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டன.

இவை ஏன் நடந்தன?

விஜயநகரப் பேரரசு உருவாக்கப்பட்டதே, ஆரிய வேத மரபை நிலை நிறுத்துவதற்காகத்தான். முகலாயர் ஆதிக்கத்தைத் தடுத்து, இந்துத்துவ / பிராமணிய அரசைக் கட்டியெழுப்புவது தான் அவ்வரசின் முதல் கடமையாக இருந்தது.

மேலும் இந்த அரசைக் கட்டி எழுப்பியவர்களே, தென்னிந்திய பிராமணரான ‘திராவிடர்’ வித்யாரண்யர் தான் என்பதைக் கண்டோம்.

கிருக்ஷ்ணதேவராயரிடம் உயர்நிலை அதிகாரிகளாக இருந்த ’நாயக்க பிராமணர்கள்’, தமிழகத்தில் தங்களுக்கான அரசு நிறுவினர், அந்த அரசே நாயக்கர் அரசு ஆகும்.

கிருக்ஷ்ணதேவராயரின் நம்பிக்கைக்குரிய அதிகாரிகளில் ஒருவரும் படைத் தளபதியுமான, விசுவநாத நாயக்கர்தான் மதுரையில் நாயக்கர் ஆட்சி ஏற்படக் காரணமாக இருந்தவர்.

திராவிட – ஆரிய பிராமணரும், சில தமிழ்ச் சாதியினரும் பெருமளவு உழைக்கும் மக்களைச் சுரண்டிக் கொழுக்கக் காரணமாக இருந்த ’பாளையக்காரர் முறை’யை அறிமுகப்படுத்தியவர் ’இந்த விசுவநாத நாயக்கர்தான். இது இவர் செய்த ‘நிலச் சீர்திருத்தம்’ எனப் புகழப்பட்டது.

கிருக்ஷ்ணதேவராயர் இந்த விசுவநாத நாயக்கருக்கு, ’தென்னரசின் முதல்வர்’, ‘பாண்டிய நாட்டின் தலைவர்’ ஆகிய பட்டங்களை அளித்துச் சிறப்பித்தார்.
(மேலது நூல்/ பக் – 72, 73).

கிருக்ஷ்ணதேவராயரின் நிதித் திட்டம் பின்வருமாறு இருந்தது.

அரசின் வருவாய் நான்கு பங்குகளாகப் பிரிக்கப்பட்டது.

முதல் பாகம் – அறக்கொடைச் செலவுகள், மன்னனின் அந்தரங்கச் செலவுகள்.

இரண்டாம் பாகம் – குதிரைப் படைப் பராமரிப்புச் செலவுகள்.

மூன்றாம் பாகம் – வெளிநாட்டுப் படை எடுப்பிற்கான செலவுகள்.

நான்காம் பாகம் – அரசாங்க வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கான செலவுகள்.

(மேலது நூல்/பக் -80).

அரசுப் பணத்தின் பெரும்பகுதியை, பிராமணர் - சத்ரியர் - வைசியர் ஆகிய மூன்று வருணத்தாரும் பகிர்ந்து கொள்வதற்கான ஏற்பாடு இது.

பிராமணர்கள், அரசு உயர் அதிகாரிகளாகவுமிருந்தனர். படைத் தலைவர்களாகவுமிருந்தனர். நிலக் கிழார்களாகவும் இருந்தனர். கோயில் பொறுப்பளர்களாகவும் இருந்தனர்.

ஆகவே, எவ்வகைச் செலவு செய்தாலும் பிராமணர் வழியாகத்தான் செய்ய வேண்டியிருந்தது.

சத்ரியர் எனப்பட்ட பிராமணருக்கு அடுத்த நிலை அதிகாரப் படியில் இருந்தோர், படை, பாதுகாப்பு குறித்த செலவுகளில் பிராமணருடன் பங்கு போட்டுக் கொள்ள முடிந்தது.

அனைத்துச் செலவுகளுக்குமான கொள்முதல்கள் மற்றும் வருவாய் ஆதாரங்களான விவசாய விளை பொருட்கள் மற்றும் பிற உற்பத்திகளில் வைசியர்கள் கொள்ளை அடித்தனர்.

இவர்களில் பெரும்பகுதியினர் கன்னட – தெலுங்கு சாதியினர்தான். ஏனெனில், அரசு நிர்வாகமே அவர்களிடம்தான் இருந்தது.

அதாவது, இது ஒரு பரிசுத்தமான திராவிடர் ஆட்சி.. தமிழர்கள் அடிமைகளாக மாற்றப்பட்ட ஆட்சி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.