காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கும் மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து, திருப்பூரில் ரயில் மறியல் போராட்டம் நடத்த முயன்ற விவசாயிகள் கைதுசெய்யப்பட்டனர்.
மத்திய அரசின் அலட்சியத்தால், தமிழக மக்களின் காவிரி உரிமை முடக்கப்பட்டிருக்கிறது. தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. காவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், இன்னும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்திக் கொண்டிருப்பது தமிழர்களை வஞ்சிக்கும் செயலாகும். இதைக் கண்டித்தும், உடனடியாகக் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி அமைப்பினர் சார்பாக திருப்பூரில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்த முயன்றனர்.
காலை 11 மணி அளவில், திருப்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள குமரன் நினைவகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கிய விவசாயிகள், கூட்டமாக ரயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர். அப்போது, காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்றபோது, இரு தரப்புக்கும் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது கூச்சலிட்ட விவசாயிகள், "சார்... எங்களைப் போராட்டம் நடத்தவிடாமல் தடுத்து நிறுத்துறீங்க... உங்களுக்கும் சேர்த்துதானே போராடிக்கிட்டிருக்கோம். போலீஸ்காரங்களுக்கு எல்லாம் இனி குடிக்க தண்ணீர் வேண்டாமா என்றவாறு முழக்கமிட்டனர். அதைத் தொடர்ந்து, ரயில் மறியல் செய்ய முயன்ற அனைத்து விவசாயிகளும் கைதுசெய்யப்பட்டு, அருகில் உள்ள மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.