07/09/2017

தமிழகத்தில் படையெடுத்து வரும் வெளிமாநில மக்கள்...


தமிழகத்தில் படையெடுத்து வரும் வெளிமாநில மக்கள். உரிமைகளை பாதுகாக்க திணறும் தமிழினம்...

இந்தியா பிரித்தானியா அரசிடம் இருந்து விடுதலை பெற்ற பின்னர் மொழி வழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது.

இவ்வாறு பிரிக்கப்பட்டதற்கு முக்கியமான காரணம் ஒவ்வொரு மொழிவழி தேசிய இனங்களும் தங்களுக்கான அடையாளத்துடன் வாழவும், தங்கள் மொழி , இனம், வாழ்வாதாரம் மற்றும் உரிமைகளை தாங்களே பாதுகாக்க முடியும் என்ற அடிப்படையில் இவ்வாறு உருவாக்கப்பட்டது.

ஆனால் இப்போது இந்த நோக்கம் சிதைக்கப்பட்டு வருகிறது.

முதலில் தமிழகத்தில் குடியேறிய மார்வாடிகள் இங்கு ஏழைகளை சுரண்டி செல்வந்தர்கள் ஆனார்கள்.

தமிழ் மக்களின் நிலங்கள் அவர்கள் கைக்கு மாறத் தொடங்கின.

பின்பு அவர்களை சார்ந்த இனக் குழுக்கள் தமிழகத்தை நோக்கி படையெடுத்து வந்தன. அவர்கள் அனைவரும் தமிழகத்தில் நிரந்தரமாக தங்கும் வகையில் பல அடிக்கு மாடிகளை கட்டிக் கொண்டனர் .  அந்த குடியிருப்பில் தமிழர்களுக்கு இடமில்லை என்று அறிவித்தனர்.

சென்னை சௌகார்பேட்டை மார்வாடிகள் மற்றும் வடநாட்டவர்களின் கோட்டையாக மாறியது . இந்த வடநாட்டு மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் மொழியை சொல்லிக் கொடுப்பதில்லை. இவர்கள் பிள்ளைகள் படிப்பதற்கு வசதியாக தனியார் பள்ளிகள் இந்தியை இங்கு அறிமுகப்படுத்தியது .

பின்பு நாளடைவில் அப்பள்ளிகளில் தமிழே இல்லை என்ற நிலை வந்து அந்த பள்ளிகள் தமிழ் மொழிப் பாடத்தையே நீக்கி விட்டது.

நடுவண் அரசின் பள்ளிகள் பற்றி கேட்கவே வேண்டாம். அப்பள்ளிகள் முற்றிலும் தமிழை புறக்கணித்து வருகிறது. தமிழக அரசு தமிழ் மொழியை இப்பள்ளிகளில் கட்டாயமாகத் தவறியது.

அதுமட்டுமில்லாமல் இப்போது தமிழக அரசு தமிழ் வழிக்கல்விக்கு மூடுவிழா காணும் நடவடிக்கை எடுத்துள்ளது. இது வடநாட்டு மக்களுக்கு சாதகமான நிலையை உருவாக்கி உள்ளது.

வடநாட்டு மக்கள் இனி அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை பயிலலாம் என்ற நிலையிருக்க வடநாட்டில் இருந்து தற்போது வரும் கூலித் தொழிலாளரும் தமிழ் வழியில் படிக்காமல் ஆங்கில வழிக் கல்வியை தொடரலாம்.

மேலும் அவர்கள் விரும்பினால் அவர்கள் தாய் மொழியிலேயே பாடங்களை படிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. தமிழர்கள் மட்டும் தாய் மொழியில் படிக்க முடியாத நிலையில் வெளி மாநிலத்தில் இருந்து வந்து குடியேறியவர் அவர்கள் சொந்த தாய் மொழியில் கல்வி பயிலலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் வடநாட்டவர் குடியேற்றம் இப்போது கட்டுக்கு அடங்காமல் போய் விட்டது.

தமிழர்களின் நிலங்கள் பல பகுதிகள் அவர்களுக்கு சொந்தமாகி வருகிறது. இங்கு வாழும் வடநாட்டவர் யாரும் தமிழ் படிப்பதில்லை தமிழ் பேசுவதும் இல்லை.

தமிழ் நாட்டில் உள்ளவர்கள் இந்தி படித்தால் தான் வெளி மாநிலம் போய் பிழைக்க முடியும் என்ற மாயையை ஆளும் அதிகார வர்க்கம் தமிழகத்தில் உருவாக்கியது.

ஆனால் வடநாட்டவர்கள் தமிழ் படித்தால் தான் தமிழகத்தில் வாழ முடியும் என்பதை மட்டும் அதிகார வர்க்கம் சொல்லத் தவறியது.

இதனால் இங்கு வரும் இந்தி மொழியினத்தவர் எங்கும் யாரிடமும் இந்தி பேசித் திரிகின்றனர்.

இன்னொரு மாநிலத்திற்கு சென்றால் அந்த மாநில மொழியை தான் படித்து பேச வேண்டும் என்ற எந்த சிந்தனையும் இல்லை இவர்களுக்கு.

இவர்களை வேலை வாங்கும் தமிழ் முதலாளிகளும் இவர்களிடம் இந்தி பேசுவதால் இவர்களுக்கு எந்த மொழி சிக்கலும் இல்லை.

அதே தமிழர்கள் வடநாடு சென்றால் எந்த வடநாட்டு முதலாளியும் தமிழ் பேசுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்ய ஒப்புக் கொள்ளும் இவர்கள், நியாயமாக கூலி கேட்கும் தமிழர்களை ஓரம் கட்டுகிறார்கள். முதலாளிகளும் குறைந்த சம்பளம் கொடுத்து அதிக லாபம் பார்க்கிறார்கள். இந்த நிலையில் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பு பறிபோகிறது.

கட்டிடத் தொழில். உணவகம், சிறப்பங்காடி, உழவுத் தொழில், நெசவுத் தொழில் என அனைத்து துறையிலும் வடநாட்டவர்கள் இப்போது பணியில் அமர்ந்துள்ளனர். தமிழகத் தமிழர்கள் வேலை வாய்ப்பை இழந்து தவிக்கின்றனர்.

தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் வெளி மாநிலத்தவரின் எண்ணிக்கை மிகை வேகத்தில் உயர்ந்துள்ளது.

இன்னொன்று இந்த வெளியார் நுழைவு சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்கள் கோவை திருப்பூர் மாவட்டங்கள், கடலூர் மாவட்டம் சிவகங்கை, மதுரை, தேனி மாவட்டங்கள் என தமிழகத்தின் எல்லா திசைகளிலும் அதிகரித்து வருகிறது.

வெளிமாநிலத்தவரின் இவ்வாறான மிகை நுழைவு தமிழர் தாயகத்துக்கு தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. சமூகம் குற்றமயமாகி வருவதை இது அதிகரிக்கிறது.

தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பையும் தொழில் வாய்ப்பையும் கடுமையாக வெட்டிக்குறுக்கி வருகிறது.

இப்போது சிக்கல் என்னவென்றால் , அவர்கள் அனைவரும் குடும்ப அட்டை , வாக்காளர் அட்டை என அனைத்தையும் பெற்று விடுகின்றனர்.

வடநாட்டவர்களின் நுழைவு இதே போல் தொடர்ந்தால் தமிழக வாக்காளர் பெருமக்களில் இவர்களே அதிக அளவில் இருப்பார்கள். சில தொகுதிகளில் இந்தி மக்களே வேட்பாளராக நியமிக்கப்படுவர் .

வாக்கு வங்கி வடநாட்டவர் கையில் இருக்கும் போது வடநாட்டு வேட்பாளர்களே சட்ட மன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்படுவர். ஏற்கனவே தமிழக சட்டமன்றத்தில் தமிழர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

இப்போது வடநாட்டவர்கள் சட்ட மன்ற உறுபினர்களாக தேர்வு செய்யப்பட்டால் தமிழக சட்டமன்றத்தில் இந்தி மொழியில் விவாதம் நடந்தாலும் வியப்பதற்கு இல்லை.

மேலும் தமிழக தாயகம் தன்னுடைய அடையாளங்களை இழப்பதுடன் , தங்கள் மொழி பண்பாடு ஆகியவற்றையும் இழக்க நேரிடும்.

இப்போது ஆங்காங்கே தமிழர்களுக்கும் வடநாட்டு மக்களுக்கும் இடையே வெடிக்கும் சண்டைகள் , பிற்காலத்தில் மிகப்பெரிய இனக்கலவரத்தில் கொண்டு போய் முடியும் .

தமிழர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக மாறும் நிலையும் ஏற்படும் .

தொலை நோக்கில் பார்த்தல் தமிழர்கள் தமிழகத்தில் சிறுபான்மை மக்களாக மாறும் அபாயமும் உள்ளது.

இதற்கு இன்னொரு முக்கிய காரணம் விவசாய நிலங்கள் அனைத்தும் மனை வணிகம் செய்யும் பெரு நிறுவனத்திடம் சிக்கி வருகின்றன.

இந்த பெரு முதலாளிகள் வடநாட்டு மக்களிடம் இந்த விவசாய நிலங்களை விற்று வருகின்றனர்.

இதனால் தமிழக நிலங்கள் அதிகாரப் பூர்வமாக வடஇந்திய மக்களின் நிலமாக மாறிவருகிறது.

காஸ்மீர் மாநிலத்தில் வெளிமாநில மக்கள் நிலங்களை வாங்க முடியாது . காரணம் 370 பிரிவு நில உரிமை சிறப்பு சட்டம் அங்கு உள்ளது. இதனால் காஷ்மீர் மக்களின் நிலங்கள் அவர்களிடமே உள்ளது.

ஆனால் தமிழகத்தில் அவ்வாறு இல்லை. யார் வேண்டுமானாலும் இங்கு நிலங்கள் வாங்கலாம் என்ற நிலையில் மிக வேகமாக நிலங்கள் தமிழர்களை விட்டு பறிபோய் கொண்டுள்ளது.

சென்னை போன்ற நகரங்களில் உள்ள கடைகளை வடநாட்டு மக்களே நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை இருக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தாலும் இவர்கள் அதை மதிப்பதில்லை . ஆங்கிலத்திலும் இந்தியிலும் தான் இவர்கள் பெயர் பலகைகள் வைக்கின்றனர் .

மேலும் இப்போது வடநாட்டு விழாவான ஹோலி , ரச்க்ஷா பந்தன் போன்ற விழாக்களை தமிழகத்தில் அதி வேகமாக பரவி வருவதை காண முடிகிறது.

தமிழர்களும் தங்களை வடநாட்டவர்களாக எண்ணிக் கொண்டு இவ்விழாக்களை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

தமிழர் விழாக்களான பொங்கல் , ஆடிப்பெருக்கு , கார்த்திகை தீபம் , தைப்பூசம் போன்ற விழாக்களை இப்போது தமிழர்கள் கொண்டாதுவது இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.

தமிழர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் யாருக்கும் தமிழ் பெயர்களே இல்லை என்ற நிலையும் இப்போது வந்துவிட்டது .

வடஇந்திய மக்களை பார்த்து தமிழ் மக்களும் தங்கள் குழந்தைகளுக்கு புரியாத இந்தி மொழியில் பெயர்களை சூட்டி மகிழ்கின்றனர்.

இவ்வாறாக மொழி அழிப்பு, பண்பாட்டு அழிப்பு, இந்தித் திணிப்பு முழுவேகத்தில் தமிழகத்தில் நடைபெறுகிறது.

இலங்கையில் தமிழர் பகுதிகளில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் நடைபெறுகிறது. இதை உலகத் தமிழர்கள் கண்டித்து வருகின்றனர்.

ஆனால் அதை விட வேகமாக தமிழகத்தில் வடஇந்திய குடியேற்றம் நடைபெறுகிறது . இதை யாரும் கண்டு கொள்வதில்லை.

தமிழினம் இப்போது மறைமுகமாக அழிக்கப்பட்டுக் கொண்டு வருகிறது. கலப்பின தாயகமாக தமிழகம் மாறி வருகிறது.

நாளை தமிழினம் தன்னுடைய பண்பாட்டு, வரலாற்று, மொழி , வாழ்வாதார உரிமைகளை கோர முடியாத நிலைக்கு தள்ளப்படும் என்பதில் ஐயமில்லை.

இவற்றை தமிழக அரசும் தமிழக அரசியல் வாதிகளும் கருத்தில் கொண்டு எதிர்கால தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்க இப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நில உரிமை சட்டம், மொழி உரிமை சட்டம், கட்டாய தமிழ் வழிக் கல்வி , மாநில சுயாட்சி போன்ற திட்டங்கள் இப்போது தமிழகத்திற்கு மிகவும் தேவையாக உள்ளது.

இதை நடைமுறைப் படுத்தத் தவறினால் நாளை தமிழ்நாடு தமிழர்களின் கைகளை விட்டு போய் விடும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.