நமது சூரிய குடும்பத்தின் 'தலை'யான சூரியன் எனும் சூரனை பற்றியும் அது வேலை செய்யும் விதம் பற்றியும் சில தகவல்களை தான் நாம் இன்று பார்க்க போகிறோம்.
முதலில் இந்த பூமியின் மொத்த ஆற்றல்காண ஆற்றல் மூலம் சூரியன் தான் என்று நாம் கேள்வி பட்டு இருந்தாலும் அது எப்படி என்பதை இன்னும் பல பேர் முழுதாக புரிந்து கொள்வதில்லை.
அதாவது நாம் அன்றாடம் பல செயல்கள் செய்கிறோம் படிக்கிறோம் எழுதுகிறோம் ஒடுகிறோம்.. பேசுகிறோம் பாடுகிறோம் இது எல்லாவற்றிற்கும் ஆற்றல் தேவை படுகிறது அல்லவா... அந்த ஆற்றலை நமக்கு கொடுத்ததே சூரியன் தான்.
அதாவது சூரியனில் இருந்து நேரடியாக ஆற்றல் தாவரங்களுக்கு கடத்த படுகிறது (சூரியனில் இருந்து நேரடியாக ஆற்றலை உள்வாங்க உலகில் இரண்டு உயிரினங்களால் தான் முடியும் ஒன்று தாவரம். இனொன்று கற்பனை கதாபாத்திரமான சூப்பர் மேன்) அந்த ஆற்றல் தாவரத்தை உண்ணும் மனிதனுக்கு அல்லது அதை உண்ணும் விலங்குக்கு கடத்த படுகிறது. இந்த உலகம் மனிதனின் சிந்தனையில் உண்டானது என்றால் அந்த சிந்தனையை சிந்திக்க மனிதனுக்கு ஆற்றலை கொடுத்ததே சூரியன் தான்.
அடுத்ததாக நீங்கள் ரோட்டில் பார்க்கும் வாகனங்கள் அனைத்தும் இயங்க ஆற்றல் தேவை அல்லவா அந்த ஆற்றல் அதுக்கு எப்படி கிடைக்கிறது . பெட்ரோல் டீசல் போன்ற எரி பொருளில் இருந்து. அந்த எரி பொருளுக்கு அந்த ஆற்றல் எப்படி வந்தது.?
லட்ச கணக்கான ஆண்டுகளுக்கு முன் சூரிய ஆற்றலை உள்வாங்கி தேக்கி வைய்த்த மரம் செடி கொடிகள் பூமியில் புதைந்து அதீத வெப்பம் மற்றும் அழுத்தத்தில் உருவானதே பெட்ரோல் டீசல் போன்றவை. இவர்களுக்கான கச்சா எண்ணையில் ஒளிந்திருக்கும் சூரிய ஆற்றலால் தான் எல்லா வாகனங்களும் ஓடு கின்றன.
இந்த பூமியில் உயிரினங்கள் வாழ்வது தாவரங்களால் உற்பத்தி செய்பட்ட ஆக்சிஜனால் தான். அந்த ஆக்சிஜனை தாவரங்கள் சூரிய ஒளியை கொண்டே உற்பத்தி செய்கின்றன.
எனவே அவன் இல்லையேல் காற்று இல்லை.. செடி கொடி இல்லை... உலகில் எந்த ஆற்றலும் இல்லை எந்த உயிரினங்களும் இல்லை. உலகில் பல வகை ஆன்மீக சமூகங்களில் சூரியனை வணங்குவது ஏன் என்று இப்போது புரிகிறதா?
நீங்கள் சூரியனை பூமி யுடன் ஒப்பிடுவதாய் இருந்தால் பூமியை விட பல்லாயிரம் கணக்கான மடங்கு பெரியவன் சூரியன். ஒரு சூரியனில் மொத்தம் 13 லட்சம் பூமிகளை அடக்க முடியும் என்றால் கற்பனை செய்து கொள்ளுங்கள். இதன் எடை பூமியை போல 333000 மடங்கு பெரியது. இதன் விட்டம் 1391000 கிமி. மேலும் இதன் சுற்றளவு 4,366,813 கிமி.
Mass (நிறை) என்று வரும் போது நிஜமாவே மாஸ் காட்டுவது சூரியன் தான் காரணம் மொத்த சூரிய குடும்பத்தின் மொத்த மாஸில் 99.8 % சூரியனின் உடையது. மீதமுள்ள 0.2 % நிறை தான் சூரிய குடும்பதின் மொத்த கிரகங்களின் நிறை. (தலைவன் என்பவன் தனது கூட்டத்தின் அதிக பட்ச சுமையை தான் தான் சுமக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறானா சூரியன்.).
சூரியனின் மொத்த ஆயுட்காலம் 1000 கோடி ஆண்டுகள் அதில் 500 கோடி ஆண்டுகள் கடந்த நிலையில் இப்போது ஒரு நடுத்தர வயது ஆளாக இருக்கிறான் சூரியன். நமது பால் வெளியில் மிதக்கும் பல கோடி நட்சத்திரங்களில் ஓன்றான சூரியனை அதன் வெப்பம் மற்றும் அளை நீளத்தை பொருத்து அதை G2 வகை என அடையாள படுத்தி இருக்கிறார்கள்.
என்ன தான் பெரிய சைஸ் என்றாலும் தொடர்ந்து எரிவதால் இது சில ஆயிரம் ஆண்டுகளில் எரிந்து போய் இருக்க வேண்டுமே... எப்படி 1000 கோடி ஆண்டுகள் சூரியானால் தொடர்ந்து எரிய முடியும். இங்கே தான் பொருளை ஆற்றலாக மாற்றும் ஐன்ஸ்டைன் சமன் பாடு E=mc 2 ஐ நினைவு கூற வேண்டும்.
ஒரு கிலோ நிலக்கரியை கொண்டு சில மணிநேரம் எரிக்கலாம் என்றால்.. அந்த ஒரு கிலோ நில கரியை முழுதாக ஆற்றலாக மாற்ற முடிந்தால் அதை வைத்து ஊருக்கே சப்ளை கொடுக்கலாம்... அதுவும் பல ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக. இதுதான் பொருள் ஆற்றல் விதி இதை விளக்க தான் அந்த சமன்பாடு. (ஹிரோஷிமா அணுகுண்டில் பயன்படுத்த பட்டது சில அவுன்ஸ் யுரேனியம் தான் . அதை வைத்து தான் அவ்வளவு பெரிய பேராற்ற எடுத்தார்கள் என்பதை அறிக).
ஆனால் இது ஒரு மிக மிக மெதுவாக ஆமை கூட அல்ல அடிபட்ட ஆமை வேகத்தில் நடக்கும் ஒரு ஸ்லோ ப்ராஸஸ். அதாவது முன்பு சொன்ன ஒரு கிலோ நில கரியை கொண்டு இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஒரு கிளாஸ் தண்ணீரை சுட வைக்க சொன்னால் அதற்கு குறைந்தது 100 ஆண்டுகளலாவது ஆகும். அதனால் தான் இவ்வளவு பொறுமையாக சூரியனில் இது நடக்கிறது.
சூரியனில் ஆற்றல் அணுக்கரு இணைவு எனும் செயல் மூலம் உண்டாகிறது. சூரியன் ஒரு மிக பெரிய ஹைட்ரஜன் பாம்முக்கு சமம். இரண்டிலும் ஒரே வழிமுறை தான் நடக்கிறது. சூரியன் ஒரு மகா மெகா ராட்சத நியூக்லியர் ரியாக்டர்.
வாருங்கள் அந்த ரியாக்டருக்குள் என்ன நடக்கிறது அது எப்படி வேலை செய்கிறது என்று கொஞ்சம் எட்டி பார்க்கலாம். (எதற்கும் கொஞ்சம் உஷாராக எட்டி பாருங்கள் தன்னை நேருக்கு நேர் உற்று பார்ப்பவர்களின் விழிதிரை செல்களை கொன்று அவர்களை நிரந்தர குருடாக மாற்றும் ஆற்றல் பெற்றவன் அல்லவா அவன்).
சூரியனில் எட்டி பார்த்தால் அந்த மொத்த பந்து அதன் மைய்ய பகுதி வரை மூன்று அடுக்குகளாக பிரிக்கலாம். சூரியன் வேலை செய்யும் விதத்தை புரிந்து கொள்ளும் முன் அதில் உள்ள அடுக்குகளை பற்றி தெரிந்து கொள்வது இன்றியமையாதது.
ஒரு உதாரணத்திற்கு ஒரு சப்போட்டா பழத்தை எடுத்தது கொள்ளுங்கள். அதன் மைய்ய பகுதியில் கொட்டை ... பிறகு அதற்கு மேல் உள்ள சதை பகுதி ... பிறகு மேலே போர்த்த பட்டுள்ள தோல் பகுதி என 3 அடுக்கை காணலாம் அல்லவா.
கிட்ட தட்ட அதே போல சூரியனின் மையத்தில் உள்ளது கோர் பகுதி (அந்த கொட்டை பகுதி போல) அதற்கு மேலே உள்ள பகுதி ரேடியேட்டிவ் ஜோண். (Radiative zone) (சப்போட்டா சதை பகுதி ) .பிறகு கடைசி மேல் அடுக்கில் உள்ளது கன்வக்டிவ் ஜோன்.( Convective zone)(தோல் பகுதி).இதில் கோர் பகுதி சூரியனின் ஆரத்தில் 25 சதம் ஆகும் அடுத்ததாக சொன்ன R. A ஜோன் 45 சத பகுதியையும் கடைசியாக உள்ள கன்வக்ட்டிவ் ஜோன் 30 சத ஆரத்தையும் கொண்டது.
இந்த கோர்... அப்புறம் ரேடியோ ஆக்டிவ் ஜோன் ..மற்றும் கன்வக்ட்டிவ் ஜோன் தவிர சூரியனின் வலிமண்டலத்தை எடுத்து கொண்டால் அதுவும் மூன்று அடுக்கு உண்டு.
சூரியனை சுற்றி உள்ள முதல் அடுக்கு
போடோஸ்பியர்.
அதற்கு அடுத்த லேயரின் பெயர் குரோமோஸ்பியர்.
கடைசி அடுக்கில் உள்ளது பெயர் கொரோனா.
இந்த கோரோனா வில் வெப்ப நிலை ஆச்சர்யமாக சூரியனை விட பல மடங்கு அதிகம்.
இப்போது சூரியனில் ஆற்றல் உற்பத்தி எப்படி நடக்கிறது என்பதை பார்கலாம்.
சூரியனில் ஆற்றல் உற்பத்தி என்பது கற்பனை செய்யவே பிரமிப்பாக இருக்கும் அளவு சக்தி வாய்ந்தது. அதாவது ஒரு லட்சம் கோடி மெகா டன் அணுகுண்டுகளை ஒரு சேர வெடிக்கும் அளவு ஆற்றல் சூரியனில் இருந்து ஒவ்வொரு வினாடிக்கும் வெளி பட்டு கொண்டிருக்கிறது என்றால் பார்த்து கொள்ளுங்கள். அதன் மைய்ய பகுதி 10 கோடி டிகிரி செல்ஸியஸும் ஓரங்களில் 6 கோடி டிகிரி செல்ஸியஸும் இருக்கிறது.
சூரியன் முழுக்க முழுக்க ஹைட்ரஜென் எரிபொருளை முதன்மையாக கொண்டு இயங்கும் ஒரு ரியாக்டர். 9 கோள் களையும் இழுத்து பிடித்து சுற்றி கொண்டிருக்கும் அதன் சக்திவாய்ந்த ஈர்ப்பு விசை அதன் மைய்ய பகுதியான கோர் இல் இருந்து உண்டாகிறது. அந்த கட்டுகடங்கா ஈர்ப்பு விசையால் மையத்தை நோக்கி அது அனைத்தையும் ஈர்த்த வண்ணம் இருக்க அதன் எரி பொருளான ஹைட்ரஜன் அணுவில் ஈர்ப்பு காரணமாக ஒன்றை ஒன்று அணுக்கள் இணைவு நடக்க காரணமாக உள்ளது.
சூரியன் எதனால் ஆனது என்று பார்த்தால். இன்றைய நிலவர படி சூரியனில் 70 சதம் ஹைட்ரஜன் , 28 சதம் ஹீலியம் உள்ளது மேலும் 1.5 சதம் கார்பன் ,நைட்ரஜன், ஆக்சிஜன் உள்ளது அப்புறம் 0.5 சதம் நியான் ,இரும்பு,
மெக்னிசியம்,மற்றும் ஸல்பர் தொடங்கி இதர கனமான தனிமங்கள் உள்ளது.
சூரியனின் அதீத ஈர்ப்பு விசையால் ஹைட்ரஜனின் மற்றும் ஹீலியத்தின் அணுக்கள் ஒன்ரோடு ஒன்று இணையும் அந்த நிகழ்வு கீழ் வரும் சில படிகளாக... வரிசையாக நடக்கிறது.
(அடுத்த பாரா கொஞ்சம் கெமிஸ்ட்ரி பாட புத்தகத்தை படித்ததை போல கொஞ்சம் 'ரா' வாக இருக்க போகிறது அனுசரித்து படிங்க).
முதல் நிலை :
ஹைட்ரஜன் அணுவில் ஒரு புரோட்டானை ஒரு எலக்ட்ரான் சுற்றி வரும் என்று நமக்கு தெரியும் அல்லவா... அப்படி இரண்டு ஹைட்ரஜனின் புரோடான்கள் ஒன்று சேர்ந்து முதல் நிலையில் ஒரு டியுடேரியம் (deuterium) அணு உண்டாகிறது .
(டியுடேரியம் அணு என்றால் என்ன? Heavy hydrogen என்று அழைக்க படும் இது ஒரு ஹைட்ரஜன் ஐசோடோப் அதாவது ஒரு புரோட்டானும் மையத்தில் ஒரு நியுட்ரானும் கொண்ட ஹைட்ரஜன் அணு தான் அது. சாதா ஹைட்ரஜன் அணுவின் மையத்தில் நியூட்ரான் இருப்பது இல்லை. நமது கடல் தண்ணீரில் 6420 ஹைட்ரஜன் அணுவிற்கு ஒரு deuterium உள்ளது. ).
அடுத்ததாக இந்த முதல் நிலை யில் பாசிட்ரானை (positron)உண்டு பண்ணுகிறது.
இந்த பாசிட்ரான் என்பது என்ன?
இதை ஒரு எதிர் எலக்ட்ரான் என்று சொல்லலாம். எலெக்ட்ரானின் அதே எடை கொண்ட எலக்ட்ரான் போலவே உள்ள ஆனால் அதே சமயம் பாசிட்டிவ் சார்ஜ் இல் உள்ள ஒரு துகள் தான் இந்த பாசிட்ரான். மேலும் இது ஒரு பக்கா ஆண்ட்டி மேட்டர் துகள் . அதாவது தனக்கு நிகரான எலெக்ட்ரானை இது நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தால் இரண்டும் ஒன்றோடு ஒன்று அடித்து மாய்ந்து கடைசியில் தடயம் தெரியாமல் முழுக்க முழுக்க ஆற்றலாக மாறி போகும் தன்மை கொண்டவை.
இந்த முதல் நிலை யில் இது தவிர கூடுதலாக ஒரு துகள் வெளி வருகிறது. அது நமது தமிழ் நாட்டில் போராட்டத்தில் மிக பரிச்சியமான பெயர் ...நியூட்ரினோ.
இரண்டாவது நிலை :
இரண்டாவது நிலையில் ஒரு ப்ரோட்டான் மேலே சொன்ன அந்த ஒரு டியுடேரியம் அணுவுடன் இனைந்து ஹீலியம் 3 என்ற அணுவை உண்டு பண்ணுகிறது (இதில் இரண்டு புரோட்டான் ஒரு நியூட்ரான் இருக்கும்.) இதில் கூடுதலாக காமா கதிர்கள் வெளிவருகின்றன.
மூன்றாவது நிலை :
இதில் இரண்டு ஹீலியம் 3 அணுக்கள் ஒன்று சேர்ந்து ஹீலியம் 4 அணுக்களை உண்டு பண்ணுகிறது. (ஹீலியம் 4 என்பது 2 புரோட்டான்.. 2 நியூட்ரான்களை கொண்டது.) மேலும் இரண்டு 2 புரோடங்களை வெளியிடுகிறது.
மேலே சொன்ன மூன்று நிலைகள் மூன்று நிகழ்வுகள் சூரியனின் 85 சத ஆற்றலை உண்டு பண்ணுகிறது. மீதி 15 சத ஆற்றலை பின் வரும் 3 நிலைகள் மூலமாக உற்பத்தி செய்கிறது. வாங்க இன்னுமொரு 3 நிலையை பார்ப்போம்.
நிலை ஒன்று :
ஒரு ஹீலியம் 3 அணுவும் ஒரு ஹீலியம் 4 அணுவும் இனைந்து பெரிலியம் 7 என்பது உண்டாகிறது. (இவை 4 ப்ரோட்டான் 3 நியூட்ரான் கொண்டது)
மேலும் இதில் கூடுதலாக காமா கதிர்கள் வெளிவருகின்றன.
நிலை இரண்டு :
ஒரு பெரிலியம் 7 அணுவானது ஒரு எலெக்டரா அணுவை பிடித்து வைத்து கொண்டு லித்தியம் 7 என்ற அணுவாக மாறுகிறது (இது 3 ப்ரோடானை யும் 4 நியூட்ரானையும் கொண்டது. மேலும் இதில் கூடுதலாக நியூட்ரினோ வெளிவருகிறது.
நிலை மூன்று :
லித்தியம் 7 ஆனது ஒரு புரோட்டான் உடன் இனைந்து இரண்டு ஹீலியம் 4 அணுவை உண்டு பண்ணுகிறது.
இங்கு தான் ஒன்றை கவனிக்க வேண்டும். கதை ஆரம்பிக்கும் போது இரண்டு ஹைட்ரஜன் அணுவில் தானே தொடங்கினோம். அப்போ முடிவில் நமக்கு கிடைக்கும் ஹீலியம் 4 ...எப்படி பார்த்தாலும் ஆரம்பத்தில் நாம் எடுத்து கொண்ட எடைக்கு சமமாக தானே இருக்க வேண்டும் ஆனால் அப்படி இல்லாமல் 7 சத எடை இழப்பு நடக்கிறது . எங்கடா போச்சி அந்த 7 சதம் என்றால் அது ஐன்ஸ்டைன் பார்முலா படி முழுக்க முழுக்க ஆற்றலாக மாறி விட்டது. அந்த ஆற்றல் தான் சூரியனில் இருந்து நமக்கு பல வடிவங்களில் கிடைக்கிறது. கண்ணால் பார்க்க கூடிய ஒளியாக.... x rey வாக ,அல்ட்ரா வைலட்டாக, இன்பிரா ரெடாக, மைகிரோ வேவ் ஆக,ரேடியோ வேவ் ஆக, காமா வேவ் ஆக இப்படி பல ரூபங்களில்..
ஒளி போட்டான் எனும் பொட்டளங்களாக பூமியை அடைய 8 நிமிடம் எடுத்தது கொள்கிறது ஆனால் அவைகள் சூரியனின் கருவில் (core) உருவாகி நகர்ந்து அதன் மேல் பாகத்தை அடைய 40000 ஆண்டுகள் எடுத்தது கொள்கிறது என்பது ஆச்சர்யமதான். அதன் உருவாக்கம் அவ்வளவு ஸ்லோ ப்ராஸஸ்...
மேலும் இது தவிர charged particals சிலதை சூரியன் தொடர்ந்து உமிழ்ந்து கொண்டே இருக்கிறது உதாரணம் நியூட்ரினோ, மற்றும் புரோட்டாண்கள்.
சூரியனின் மேற்பரப்பு நெருப்பு வில்லைகளை உண்டு பண்ணி கொண்டே இருக்கும் ஒவொன்றும் கிட்ட தட்ட பூமி அளவு பெரியது சில நேரம் அவைகள் பூமியை நோக்கி அதை பீச்சுவதுண்டு.
2003 இல் ஒரு சக்திவாய்ந்த சூரிய புயல் ஒன்று பூமியை அடைந்து அணைத்து தொலை தொடர்புகளையும் தர்காலிகமாக துண்டித்து பதம் பார்த்தது.
சூரியன் பூமியை போல் இல்லாமல் ஒரு கச்சிதமான வடிவம் கொண்ட ஒரு மிக துல்லியமான உருண்டை வடிவம் கொண்டது. இதன் மேல் பகுதியில் பள்ளமான இருண்ட ..குளிர்ந்த பகுதியும் காண படுவதுண்டு அதற்க்கு பெயர் (sun spot ) சூரிய புள்ளிகள். இவைகள் பெரும்பாலும் தீவிரமான காந்த புலத்தை கொண்டவை (பூமியை விட 5000 மடங்குஅதிகம்) இவை ஒரு ஸ்பாட் இல் நுழைந்து அடுத்த ஸ்பாட்டில் வெளிவரும். பொதுவாக இந்த காந்த புலம் சூரியனுக்குள் சுழலும் வாயுகளால் உண்டாகிறது. இந்த சன் ஸ்பாட் கள் 11 ஆண்டுகள் ஒரு முறை இடைவெளியில் காண கிடைக்கிறது.
மேலே சொன்ன 6 நிலைகளில் என்ன நடக்கிறது என்பதை எளிமையாக சொல்லவேண்டும் என்றால் லேசான தனிமங்கள் ஒன்று சேர்ந்து கனமான தனிமங்களாக உருவாகி கொண்டிருக்கின்றன .அந்த நிகழ்வில் தொடர்ச்சியாக ஆற்றலை வெளியிட்டு கொண்டிருக்கும் முயற்சியில் ஒருபக்கம் எரிபொருள் அழிந்து கொண்டே வர சூரியனுக்கு உள்ளே மேலும் மேலும் கனமான தனிமங்கள் உண்டாகி கொண்டே போகிறது. சூரிய அழிவுக்கு பின்னாளில் காரணமாக இருக்க போவது இந்த கனம் கூடிய விஷயங்கள் தான்.
என்ன தான் சூரியன் பெரிய சூரனாக இருந்தாலும் அது நம்மை பொறுத்த வரை மட்டும் தான். இந்த பறந்து விரிந்த பால் வெளி திரளில் அந்த பிரமாண்ட பிரபஞ்சத்தில் இது ஒரு தூசு... இதை விட அளவிலும் சக்தியிலும் 10000 மடங்கு பெரிதான நட்சத்திரங்கள் நமது பால் வெளியில் உண்டு.
ஒளியே ஒரு முறை குறுக்கே கடந்து போக ஒரு லட்சம் ஆண்டுகள் எடுத்து கொள்ளும் இந்த பிரமாண்ட பால் வெளி திரளில் ஒரு ஓரமாக தனது குடும்பத்துடன் சுற்றி வருகிறான் சூரியன். அவன் பால் வெளியை ஒரு முறை சுற்றி வரவே 22 கோடி ஆண்டுகள் எடுத்தது கொள்கிறான் (ஆண்டு பயணம்!!).தனது வாழ்நாளில் இதுவரை 20 சுற்றுகள் தான் வந்திருக்கிறான். இதே இடத்தில தனது போன சுற்றின் போது நம்ம பூமியில் டைனோசர்கள் நடமாடி கொண்டிருந்தன.
சூரியனின் அழிவு:
சாதாரணமாக சூரியனின் அளவும் வெப்பமும் அதன் ஆரம்ப நாளில் இருந்தே படி படியாக அதிகரித்து கொண்டே தான் செல்கிறது.
எல்லா நட்சத்திரமும் ஒரே மாதிரியான முறையில் தான் அழிகின்றன. நமது சூரியன் அதற்கு விதி விலக்கல்ல..
ஒரு காலத்தில் தனது எரிபொருள் தீர்ந்து போய் இதன் மேல் பகுதி உப்ப தொடங்கும் அந்த நிலையில் இதன் பெயர் ரெட் (red giant )சிகப்பு அரக்கன். அது எவ்வளவு பெரிதாக உப்பும் என்றால் சனி கிரகம் வரை அது அடைத்து கொள்ளுமாம் இதன் ஆரம்... இப்போ இருப்பதை விட 100 மடங்கு பெரிதாக இருக்கும் என்கிறார்கள்.
அதன் பின் அதன் எரி பொருட்கள் தீர்ந்து போய்.. வெளி பகுதி வெடித்து சிதறி உள் பகுதி இறுகி வெள்ளை குள்ளன் (white, dwarf,) நிலையை அடையும் பிறகு மேலும் குளிர்ந்து கிட்டத்தட்ட கண்ணுக்கே தெரியாத கருப்பு குள்ளன் (black dwarf) நிலையை அடையும்.
பொதுவாக பெரிய அளவு நட்சத்திரங்கள் அழியும் போது ஈர்ப்பு விசையால் தனக்குள் தானே இருக தொடங்கி.. ஒரு கட்டத்தில் நிறையும் ஈர்ப்பும் முடிவிலியாக மாறி ப்ளாக் ஹோல் ஆக மாறுகிறது.
அளவில் கொஞ்சம் சின்னதாக இருக்கும் நட்சத்திரங்கள் பிளாக் ஹோளாக மாறாது அவை நியூட்ரான் குண்டுகளாக நின்று விடும். நியூட்ரான் குண்டு என்பது அதீத நிறை கொண்ட ஒரு இறந்த நட்சத்திரம். அதில் ஒரு குண்டூசி முனை அளவு மண்ணை ஒட்டி எடுத்தால் அதன் எடை கிட்ட தட்ட எவரெஸ்ட் சிகரம் அளவு இருக்கும் . அவ்வளவு அடர்த்தியை கொண்டது நியூட்ரான் குண்டு.
நமது சூரியன் பிளாக் ஹோளாக மாற இப்போது இருப்பதை விட 10 மடங்கு இன்னும் பெரிதாக இருந்திருக்க வேண்டும் இல்லையேல் இதன் ஈர்ப்பு விசை பிளாக் ஹோளாக மாறுவதற்கு போதுமானது அல்ல.
பிரபஞ்சத்தில் சூரியன் ஒரு தூசாக இருக்கலாம் ஆனால் நம்ம சூரிய குடும்பத்திற்கு அவன் தான் ஆற்றல் மூலம் ..ஆதிமூலம் .. எல்லாம். அதாவது அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து இயக்கி கொண்டிருக்கும் சூரன்.
பின்னிணைப்பு:
SUN FACTS
Average distance from Earth: 93 million miles (150 million kilometers)
Radius: 418,000 miles (696,000 kilometers)
Mass: 1.99 x 1030 kilograms (330,000 Earth masses)
Makeup (by mass): 74 percent hydrogen, 25 percent helium, 1 percent other elements
Average temperature: 5,800 degrees Kelvin (surface), 15.5 million degrees Kelvin (core)
Average density: 1.41 grams per cm3
Volume: 1.4 x 1027 cubic meters
Rotational period: 25 days (center) to 35 days (poles)
Distance from center of Milky Way: 25,000 light years
Orbital speed/period: 138 miles per second/200 million years
பதிவு - ரா.பிரபு
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.