‘தேரா மன்னா! செப்புவது உடையேன்; எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப,
புள் உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்,
வாயில் கடை மணி நடு நா நடுங்க,
ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட, தான் தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும் பெயர்ப் புகார் என் பதியே; அவ் ஊர்,
ஏசாச் சிறப்பின், இசை விளங்கு பெருங்கொடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி,
வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப,
சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து, இங்கு
என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி;
கண்ணகி என்பது என் பெயரே’ என- ‘பெண் அணங்கே..
'தேரா மன்னா' எதையும் ஆய்ந்து பாராமல் அவசரப்பட்டு முடிவெடுக்கும் மன்னனனே , நான் சொல்வதை கேள்.. எந்த விதமான குற்றமும் சொல்ல முடியாத தேவர்கள் வியக்குமாறு ஆட்சி செய்து ஒரு புறாவிற்காக தன் தசையை அறுத்துக் கொடுத்த மரபும், அத்தோடு வாயிலில் கட்டப்பட்டு இருந்த ஆராய்ச்சி மணியை அடித்த பசுவின் புத்திர சோகத்தை போக்க தான் பெற்ற மகனைத் தேர்க் காலில் இட்ட அறம் காத்த சோழன் ஆண்டு பெரும் பெயர் பெற்ற புகார் என்னும் ஊரைச் சேர்ந்தவள் நான் ; அந்த ஊரில் இருந்த குற்றமே கூற முடியாதவாறு வணிகம் செய்து வந்த மாசாத்துவான் என்னும் பெரிய வணிகனின் மகனைத் திருமணம் புரிந்து வீரக் கழலணிந்த மன்னனே பொருளீட்டி வாழ்க்கை நடத்த, முற்பிறவி தீவினைத் துரத்த உன்னுடைய மதுரை மாநகர் வந்து , என்னுடைய கால் சிலம்பை விற்க முயலும் போது உன்னால் கொலை செய்யப்பட கோவலனின் மனைவி நான்;
கண்ணகி என்பது என் பெயர் என்று பாண்டியனிடம் முறையிடுகிறாள்.
யாருமே நெருங்கிவிட முடியாத மன்னனை, எளியவர் அதுவும் ஒரு பெண் நேருக்கு நேராக சந்திக்கிறார். மன்னனிடம் தனக்கு நேர்ந்த அநீதியை விவரிக்கிறாள்.
சோழன் எதிர்நாட்டு மன்னன், பாண்டிய மன்னனும் சோழ மன்னனும் மாறிமாறி போரிட்டுக்கொள்ளும் வழக்கமிருந்தது. சோழனின் அரசாட்சியின் புகழை பாண்டிய நாட்டு அரசவையில் முழங்கி தன சினத்தை வெளிப்படுத்துகிறாள். பாண்டியன் சினம்கொள்ளவில்லை மாறாக தன்னால் தன்னையறியாது அநீதி இழைக்கப்பட்டுவிட்டதே என வருந்துகிறான். பாண்டிய அரசாட்சிக்கு நேர்ந்த இழுக்கு என மனம்வெம்பி வேதனையில் தன் உயிரை மாய்த்துக்கொள்கிறான். சேரன் கண்ணகிக்காக கோவில் எழுப்புகிறான். பாண்டியன் சோழன் சேரன் என மூன்று அரசுகள் தமிழ்நாட்டில் ஆட்சி செய்தாலும் தமிழர்கள் என்றே அக்குடிகள் அறியப்பட்டன. மூவேந்தர்கள் அரசாண்டாலும் தமிழ்நாடு தமிழகம் என்றே அறியப்பட்டது. அவர்கள் மூவரும் நல்லாட்சி செய்வதிலே போட்டிப்போட்டு வாழ்ந்துள்ளனர்.
இந்த தமிழர் மரபில் வந்த தமிழர் தான் தமிழியத்தால் தமிழகத்தை தமிழர் நாட்டை ஆள வேண்டும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.