23/06/2017

திராவிடலு பகுதி - 8...


1900களில் பிராமண ஆதிக்கத்தையும் அதைப் பிடுங்கிக்கொள்ள ஆதிக்கசாதியர் பிராமணருடன் போட்டியிட்டதையும்,  திராவிடப் பரப்புரை முடுக்கிவிடப்பட்டதையும் பார்த்தோம்.

முதலாம் உலகப்போர் 1914 தொடங்கி 1918 ல் முடிந்த பிறகு ஆங்கிலேய அரசின் பொருளாதாரச் சரிவைத் தொடர்ந்து இந்திய விடுதலைப் போராட்டம் வீறிட்டெழுந்தது.

அப்போது நாடுமுழுவதும் காங்கிரசை விட செல்வாக்காக இருந்தது 'அன்னிபெசண்ட்' அம்மையாரின் 'அகில இந்திய ஹோம்ரூல் லீக்'.

இதன் சென்னைக்கிளை தமிழ் பிராமணர் கட்டுப்பாட்டில் இருந்தது
(உண்மையாகவே விடுதலையை நோக்கமாகக் கொண்ட தமிழ் பிராமணர்).

இந்நேரத்தில் இந்திய சட்டசபை உறுப்பினர் 19 பேர் கையொப்பமிட்ட கூட்டறிக்கை ' பூரண சுயாட்சி'  கோரியது.

ஏதேது ஆங்கிலேயர் சுயாட்சி வழங்கினால் அது ஹோம்ரூல் மூலமாக தமிழ்ப்பிராமணருக்குப் போய்விடுமோ என்று வேற்றுமொழி ஆதிக்க சாதியினர் பதற்றமடைந்தனர்.

இந்நிலையில்தான் அவர்கள் தமக்கென்று ஒரு கட்சியை தொடங்குவது என்று தீர்மானித்தனர்.

இவ்வாறு அவர்கள் தோற்றுவித்த முதல் திராவிடக் கட்சியான 'நீதிக்கட்சியின்' முகத்திரையை சற்று  விலக்கிப் பார்ப்போம்.

இக்கட்சியை தொடங்கிய இருவரில் முதலில் டாக்டர்.டி.எம்.நாயர் பற்றி அறிவோமாக.

மலையாளியான இவர் முதலில் காங்கிரசில் இருந்தார்.

சென்னை மாநகராட்சித் தேர்தலில் தமிழ்ப்பிராமண வாக்காளர் நிறைந்த திருவல்லிக்கேணித் தொகுதியில் நான்குமுறை வெற்றிபெற்றவர்.

பிறகு ஒருமுறை தொல்வியைத் தழுவினார்.

தமிழ்ப்பிராமணர் மீது வந்ததே கோபம், உடனே தமிழரல்லாத இயக்கம் ஒன்றை ஆரம்பிக்க முடிவெடுத்தார். அப்போது சென்னை மாநில கவர்னராக இருந்த 'வெல்லிங்டன் பிரபுவை' சந்தித்தார்;

தமிழரல்லாத இயக்கத்தை  பிராமணரல்லாத இயக்கம் என்கிற பெயருடன் தொடங்குவாயாக என்று கவர்னர் ஆசி வழங்கினார்.

இவரை சகமலையாள ஆதிக்க வர்க்கத்தினர் தூண்டினர்.

இரண்டாமவர் தமிழ்நாட்டுத் தெலுங்கரான சர்.பி.டி.தியாகராயர். இவர் தனிப்பட்ட முறையில் பண்பான மனிதராகவே பலருக்கும் தோன்றியவர்.

இவர் நீதிக்கட்சியான 'ஜஸ்டிஸ் கட்சி'யைத் தோற்றுவித்து அதன் தலைவராக தனது கட்சியின் கொள்கைப்பிரகடனம் ஒன்றை வெளியிட்டார்.

இந்த முதல் அறிக்கையே தமது கட்சிக்கு வித்தூன்றிய சர்.அலெக்சாண்டர் கார்ட்யூவுக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துவிட்டு,
இந்தியர்கள் ஒரேடியாக ஆங்கிலேயரிடமிருந்து அதிகாரம் கோரக்கூடாதென்று கூறியது.

அதேபோல 19 டெல்லி சட்டசபை உறுப்பினர் ஒப்பமிட்டு சுயாட்சி கோரியதையும் வன்மையாகக் கண்டித்தது.

தவிர நாட்டில் வாழும் பல்வேறு மக்களுக்கு இடையே தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்கக்கூடியவர் ஆங்கிலேயரே என்று கொஞ்சமும் ஒளிவு மறைவின்றி அப்பட்டமான தமது ஆங்கிலேய விசுவாசத்தை வெளிப்படையாகக் காட்டியது.

ஆங்கிலேய ஆளுகையில் ஒட்டுமொத்த நாடே அடிமைப்பட்டுக் கிடக்கும்போதே தமது நலனில் மட்டும் அக்கறை கொண்ட புண்ணியவான்களின் பாசறைதான் திராவிடக் கூடாரம் என்பதை இதைவிடத் தெளிவாக கூற வேண்டியதில்லை.

திராவிடவாதிகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆங்கிலேயரை எதிர்த்ததே கிடையாது.

எப்படி எதிர்ப்பர்? ஆங்கில வல்லாதிக்கத்தின் நீட்சி தானே திராவிட ஆதிக்கம்.

அப்படி இருந்தும் இந்தக் கட்சி 1936வரை ஆட்சியும் செலுத்தி தமிழர் எவரையும் ஆளவிடாமல் தாழ்த்தப்பட்டவரையும் மேலே வரவிடாமல் சாதனை மேல் சாதனை புரிந்ததை பார்க்கத்தானே போகிறோம்.

- தொடரும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.