24/06/2017

மீண்டெழும் பாண்டியர் வரலாறு...


இப் புத்தகம் தமிழ் நாட்டில் மட்டும் தான் தடை செய்யப்பட்டு இருக்கிறது.. மற்ற மாநிலத்தில் இப்புத்தகத்துக்கு தடை இல்லை..

காரணம் தமிழன் விழிப்புணர்வு பெறக் கூடாது என்ற ஒரே நோக்கத்தில் மட்டும் தான் தடைச் செய்யப்பட்டுள்ளது...

செந்தில் மள்ளர் என்பவர் எழுதிய ‘மீண்டெழும் பாண்டியர் வரலாறு” எனும் நூலைத் தமிழக அரசு தடை செய்துள்ளது (G.O. Ms. No. 525, Public (S.C), 30th May 2013).

அது மட்டுமல்ல அந்த நூல் ஆசிரியர் செந்தில் மள்ளர் மீது தேசத் துரோகச் சட்டம் (124 ஏ) உட்படப் பல பிரிவுகளில் வழக்குத் தொடர்ந்து அவரைத் தேடியும் வருகிறது.

அவரது மாமனார் பெருமாள் சாமி என்பவரும் இன்று இதே சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சமூக ஒற்றுமையைக் குலைத்து, சாதிகளுக்கிடையே மோதலைத் தோற்றுவிக்கும் உள்ளடக்கம் கொண்டிருப்பதால் இந்ந்நூல் தடை செய்யப்பட்டுள்ளது என்பதாக அரசு அறிவித்துள்ளது.

இந்த நூலின் கருத்துக்களிலும் அவை சொல்லப்படும் விதங்களிலும் என்க்கு உடன்பாடு இல்லை. ஆயினும் இந்தத் தடையை வன்மையாகக் கண்டித்துள்ளேன்.

ஏன் எனக்கு உடன்பாடில்லை என்பது குறித்து இறுதியாக எழுதுவேன்.

‘பள்ளர்’ எனப் பட்டியல் சாதிகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படுவோர் உண்மையில் ‘மள்ளர்கள்’, ‘தேவேந்திரகுல வேளாளர்கள்’ என அழைக்கப்பட வேண்டியவர்கள். ‘பள்’ எனும் வேர்ச் சொல்லிலிருந்து கிளைத்ததே “பாண்டியர்” எனும் அரச குல மரபுப் பெயர். ஆக பள்ளத்தில் வேளாண்மை செய்து வாழ்ந்திருந்த வேளாண் மக்களே நாங்கள். எங்களிலிருந்து கிளைத்ததே வெள்ளாளர் முதலான அனைத்துத் “தமிழ்ச் சாதி”யினரும்.. என்கிற கருத்தை முன்மொழிந்து செல்லும் நூல் இது..

இந்தக் கருத்துக்கள் சரியா தவறா என்பதல்ல இங்கு பிரச்சினை. அதைத் தீர்மானிக்க வேண்டியது புலமையாளர்கள் (academic community). புலமையாளர்களின் தீர்ப்பு தவறானால் அது குறித்து முடிவு செய்ய இன்று ஏராளமான வழிமுறைகள் உண்டு.

ஆனால் இடையில் அரசு தலையிட்டு இம்மாதிரியான முடிவை எடுக்க வேண்டிய அவசியமென்ன?

இப் புத்தகம் வெளியிடப்பட்டு சுமார் மூன்றாண்டு ஆகிவிட்டது.

சுமார் 5000 பிரதிகளை இந்நூலாசிரியர் விற்றுள்ளார் என ஒரு தகவல் எங்களுக்கும் வந்துள்ளது.

‘விசுவரூபம்’ திரைப்படத்திற்கு வந்தது போல பெரிய பிரச்சினைகள் ஏதும் இங்கு “பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து” வரவுமில்லை.

‘பாதிக்கப்பட்டவர்களாக’ இங்கு யாரும் பிரச்சினை செய்யவில்லை.

தவிரவும் ஒரு ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஊடக அதிகாரமிக்க கமலஹாசன் போன்ற ஒரு அதிகாரமிக்க உயர் சாதி நபர் தொடர்ந்து ஒரு சிறுபான்மைச் சமூகத்தைப் பயங்கரவாதிகளாகச் சித்திரித்து அம்மக்களின் அன்றாட வாழ்வேயே கேள்விக்குறியாகும் பிரச்சினையும் அல்ல இது.

உண்மையில் இது இதுகாறும் ஒடுக்கப்பட்ட ஒரு பிரிவினர் மேலெழுந்து தம் அடையாளத்தை உறுதி செய்யும் முயற்சிகளில் ஒன்று.

பின் ஏன் இந்தத் தடை?

இம்மாதிரியான எத்தனையோ புத்தகங்கள் இதுவரை வந்துள்ளன.

‘ஏசு நாதர் அல்ல, அது ஏசு நாடார்” என ஒரு அபத்தப் புத்தகம் வந்துள்ளது.

ராஜராஜ சோழன் வேறு யருமில்லை, இப்பிறவியில் அது நான் தான் எனக் கும்பகோணத் தொழிலதிபரும், பார்ப்பன சங்கத் தலைவராக இருந்தவருமான ஒரு ‘ராமன்’  “அருளுடைச் சோழ மண்டலம்” என ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.

இவற்றை எல்லாம் தடை செய்யாமல் இந்தப் புத்தகத்தை மட்டும் தடை செய்ததன் நோக்கம் என்ன?

எல்லா சாதிக்காரர்கள் பெயர்களிலும் போக்குவரத்துக் கழகங்கள் தொடங்கப்பட்டிருந்த போது பள்ளர்களின் போற்றற்குரிய திரு உருவாக உருப்பெற்றிருந்த “வீரன் சுந்தரலிங்கத்தின்” பெயரில் ஒரு போக்குவரத்துக் கழகம் தோன்றிய போது ஏன் இந்த எதிர்ப்பு?

தேவர், அதுதான் முத்துராமலிஙகத் தேவரின் பெயரால் குரு பூஜை நடத்தலாம். ஆனால் பள்ளர் குலத் திரு உரு இம்மானுவேல் சேகரனின் பெயரால் “குரு பூஜை” நடத்தக் கூடாது எனவும், மீறி நடத்த முயற்சித்ததற்காகப் பிரச்சினைகள் எழுந்ததும், இறுதியில் அவ்வாறு முயன்ற சாதியினரில் ஆறு பேர் சுட்டுக் கொல்லப் பட்டதும்..

இரண்டாண்டுகளுக்கு முன் ஜெயா ஆட்சியில் நடந்ததில்லையா?

1990க்குப் பின் இங்கே அடையாள அரசியல் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தது. ஆதிக்க சாதியினர் எல்லோருக்கும் இங்கே பொது வெளிகளில் தலைவர்கள், திரு உருக்கள் இருந்தனர் ஒடுக்கப்பட்ட சாதிகளின் திரு உருக்கள் பொது வெளிகளில் இடம் பெற வேண்டிய சூழல் ஏற்பட்டது..

அதேபோல பழமையில் தாங்கள் கோலோச்சிய காலம் ஒன்றிருந்தது என ஒரு வரலாற்றையும் அவர்கள் கட்டமைக்க வேண்டிய ஒரு அவசியமும்  எல்லோருக்கும் இருந்தது, குறிப்பாக  வரலாறு மறுக்கப்பட்டிருந்த அடித்தட்டு மக்களுக்கு இது தேவையாக இருந்தது.

இம்மக்களில் பொருளாதார ரீதியாகவும், ஆதிக்க ரீதியாகவும் மேம்பட்டிருந்த குருசாமி சித்தர் போன்றோர் தம் பொருளியல் செல்வாக்கின் அடிப்படையில் “மள்ளர் வரலாறுகளை” எழுதத் தொடங்கினர்.

எத்தனை குறைபாடுகள், பிரச்சினைகள் இருந்த போதும் இதை ஓரு வகையில் ஜனநாயகத்தின் வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆதிக்க சாதிகளிடமிருந்து இத்தகு முயற்சிகளுக்குக் கடுமையான எதிர்ப்புகள் வரத் தொடங்கின.

இந்தப் பின்னணியிலிருந்துதான் சென்ற வருடம் செந்தில் மள்ளரின் நூல் ஜெயலலிதா அரசால் தடை செய்யப் பட்டுள்ளது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.