அந்தக் கோழைகள் அச்சப்படவும் காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன.......
வளர்ச்சி பற்றி வாய் கிழியப் பேசிய திருவாளர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு சாதித்திருப்பதோ, அனைத்துத் துறைகளிலும் தோல்வி. அந்தத் தோல்வியை அங்குலம் அங்குலமாக எடுத்துரைத்து வருபவர் தோழர் சீத்தாராம் யெச்சூரி.
உங்களுக்கு நினைவிருக்கிறதா ‘செல்லா நோட்டு நடவடிக்கையை’ ?? ... பழைய ரூ.1000 ரூ.500 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கும் முன்னமே - அதற்கான உண்மைக் காரணத்தை வெளிக்கொண்டுவந்தார் சீத்தாராம் யெச்சூரி.
12 லட்சம் கோடி ரூபாய்களுக்கும் அதிகமான வங்கி சேமிப்பை, கடனாக பெற்ற பல கார்பரேட்டுகள் திரும்ப செலுத்தவில்லை. விஜய் மல்லய்யா என்ற ஒரு நபரைத்தான் நமக்கு தெரியும். இன்னும் எத்தனை கொள்ளையர்கள், சுதந்திரமாய் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள் ?? மக்கள் சேமிப்பை, திரும்ப வசூலிக்காமல் ‘ரைட் ஆப்’ செய்த போது - அதையும் அம்பலப்படுத்தினார் தோழர் யெச்சூரி.
’செல்லா நோட்டு’ அறிவிப்பு வங்கிகளுக்குள் மக்கள் பணம் பல லட்சம் கோடியை உறிஞ்சி சேர்த்தது. கருப்புப் பணத்தை ஒழிக்கும் என்று வாய்கிழிய பலரும் பேசியபோது, கருப்புப் பண முதலைகளை தப்பவிடும் சூட்சுமத்தை அம்பலப்படுத்தி, இந்தியாவின் வளர்ச்சியை, வேலைவாய்ப்பை அழிக்கும் ‘பேரழிவு’ முயற்சி என்று புள்ளி விபரங்களோடு அம்பலப்படுத்தினார் தோழர் யெச்சூரி. அரசு வெளியிட மறுக்கும் பணம் அச்சிடுதல் பற்றிய விபரங்களை தொடர்ந்து மறுப்பதை கேள்விகேட்டு வருபவரும் அவதான்.
ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு என்று வாய்ப்பந்தல் போட்டதோடு மோடியின் வேலை முடிந்துவிட்டது. உலக பொருளாதார சூழல் மந்தமாக உள்ள நிலையில், இந்திய உள்நாட்டு சந்தையில் கவனம் செலுத்த வேண்டும். அதற்கேற்ற பட்ஜெட் செலவினம் செய்ய வேண்டும் என்று சொன்னவர்கள் இடதுசாரிகள். இடதுசாரிகளின் விமர்சனம் எதற்கும் காதுகொடுக்காத மோடி அரசாங்கம், இப்போது பல துறைகளில் இருக்கும் வேலையையும் பறித்து, நடுத்தெருவில் நிறுத்தியிருக்கிறது இளைஞர்களை.
கிராமப்புற மக்களை நெருக்கடியில் தள்ளும் ‘நிலமெடுத்தல் அவசர சட்டம்’ - தொழிலாளர்களின் நலன்களை பறிக்கும் சட்டத் திருத்தங்கள், ஆதார் என்ற பெயரால் இந்திய மக்களின் தனி நபர் விபரங்களை சிக்கலுக்கு ஆளாக்கும் முயற்சி என ஒவ்வொன்றையும் தொடர்ந்து அம்பலம் செய்வதும் தோழர்களே.
ராஜ்யசபா விவாதத்திற்கே வராமல் தவிர்த்துவந்த பிரதமரை விமர்சிப்பதும். ராஜ்யசபாவுக்கே செல்லாமல் சட்ட விரோதமாக சட்டங்களை நிறைவேற்றுவதையும் வெளிப்படுத்தியது என்று, செயல்படுபவர்கள் தோழர்கள்.
ரோஹித் வெமுலா என்ற மாணாவன், பல்கலைக் கழக நிர்வாகத்தால் ஒதுக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு தற்கொலைக்கு தள்ளப்பட்டதும், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக கல்விச் சூழல் சிதைக்கப்பட்டு பாசிச தாக்குதலுக்கு அவர்களின் சிந்தனைகள் குறிவைக்கப்பட்டதும் நடக்கும்போது - களத்தில் நின்று எதிர்கொள்கிறார்கள் தோழர்கள்.
காஷ்மீரில் பாஜக இழைத்துவரும் தவறான உத்திகளை, முந்தைய வாஜ்பாய் ஆட்சியில் செய்த சில நல்ல நகர்வுகளைக் கூட இந்த ஆட்சியில் செய்யத் தயாரில்லை என்பதையும், சொந்த நாட்டிலேயே - சொந்தக் குடிமக்களை அந்நியராக்கும் பாஜகவின் செயல்பாடுகளை அம்பலப்படுத்துவது இடதுசாரிகள்.
3 ஆண்டுகள் முடிவில் எல்லாத் துறைகளிலும் தோல்வியடைந்ததை மறைக்க முயலும் பாஜக, மாட்டுக்கறிக்காக மாடுகள் விற்பனைக்கு தடை என அறிவித்தது. சிறுபான்மை மக்களை மட்டுமல்லாமல் - இந்திய விவசாயிகளையும் சேர்த்தே குறிவைக்கும் இந்த நடவடிக்கையால், அழியப்போவது கால்நடை வளர்ப்புத் தொழில்தான் என்று பட்டவர்த்தனமாக்கியவர்கள் தோழர்கள்.
எத்தனைதான் திசைதிருப்பினாலும், எந்தெந்தத் துறைகளில் மோடி அரசு படுதோல்வி அடைந்துள்ளது என்று மிகத் தெளிவாக கேள்வியெழுப்பி வருவது தோழர் யெச்சூரி என்பதை அவரின் இணையப் பக்கத்தில் சில நிமிடங்கள் செலவிட்டாலே அறிந்துகொள்ளலாம்.
கேரளம், திரிபுரா என்ற முன்மாதிரிகள் அவர்கள் முகத்துக்கு நேரே எழுந்து நிற்கின்றன. அனைத்துத் துறைகளிலும் பாஜக அரசு தோல்விகாணும்போது - கேரளமோ இந்தியாவிலேயே 100 சதவீத கல்வி, 100 சதவீத கழிப்பறை கட்டிய மாநிலம், 100 சதவீத வீடுகளுக்கு மின் வசதி, மாணவியருக்கு ‘நாப்கின்’, மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தார் என சிந்தித்து - மக்களுக்காக எப்போதும் அயராது பாடுபடும் பினராயி விஜயன் என்ற முதல்வரையும், ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு சிம்ப சொப்பனமான கேரள கம்யூனிஸ்டுகளின் தீரமும் அவர்களை அச்சப்படுத்துகின்றன.
இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு துரோகம் செய்த சாவர்க்கரையும், வாஜ்பாயையையும் மறந்துவிட முடியுமா? ... தன் இளமையிலேயே நாட்டை காட்டிக் கொடுத்த அந்த அமைப்பும் அதன் சித்தாந்தமும் உருவாக்கியவர்கள் - இத்தாலியின் முசோலினியை சந்தித்து, பாசிசத்திலிருந்தும், ஹிட்லரின் நாசிசத்திலிருந்தும் கற்றவர்கள். கொடும் கொலைகளை அறங்கேற்றிய, பாதகர்களுக்கு இரண்டாம் உலகப்போரின் இறுதியில், செங்கொடி ஏந்திய வீரர்கள்தான் இறுதி அத்தியாயத்தை எழுதி முடித்தார்கள்.
இந்திய தேசத்தின் சுதந்திரப் போரில் என்னற்ற தியாகங்களைச் செய்த கம்யூனிஸ்டுகள், பாஜக பாசிச கும்பலுக்கு எதிரான போராட்டம் - இந்திய விடுதலையின் இரண்டாம் போராட்டம் என முன்னணியில் நின்று, சம்மட்டி அடிப்பதால்தான் இந்த நடுக்கம் அவர்களுக்கு.
இருக்காதா.. திருட்டுத் தனம் அம்பலத்தில் ஏற்றப்பட்டால், திருடன் விழி பிதுங்கத்தானே செய்வான்? அவன் சலசலப்புக்கெல்லாம் மக்கள் தீர்க்கமான பதிலை கொடுக்கத்தான் போகிறார்கள்...
பதிவு - Sindhan R
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.