2022 ஆம் ஆண்டு பூமியில் வசிக்கும் நமது கண்களுக்குத் தெரியும் விதத்தில் வானில் பெரு வெளிச்சத்துடன் சூப்பர்நோவா வெடிப்பு தெரியவுள்ளதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பல வருடங்களாக பைனரி நட்சத்திரப் பொறிமுறை (Binary star system) என்ற ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகளே இந்த சூப்பர் நோவா வெடிப்பை மும்மொழிந்துள்ளனர்.
இவர்களது கணிப்பு சரியாக இருக்கும் பட்சத்தில் மனித குல வரலாற்றில் முதன் முறையாக ஒரு சூப்பர்நோவா பிரகடனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
மேலும் இந்த சூப்பர் நோவா 1 வருடமாவது நீடிக்கும் என்றும் இரவு வானில் மிக வெளிச்சமான புதிய நட்சத்திரமாக அது தோன்றும் எனவும் கணிப்பிடப்பட்டுள்ளது.
அது சரி, சூப்பர் நோவா என்றால் என்ன என்று ஒரு கேள்வி வானியலில் பரிச்சயம் இல்லாதவர்களுக்குத் தோன்றும் அல்லவா?
அவர்களுக்கான விளக்கம் இதோ...
மிகப்பெரிய இரு நட்சத்திரங்கள் தமது ஆயுள் காலம் முடியும் தறுவாயில் ஒன்றுடன் இன்னொன்று மோதிக் கொள்ளும் போது ஏற்படும் பெரு வெடிப்பும் அதனால் ஏற்படும் மிகச் செறிவான வெளிச்சமுமே சூப்பர் நோவா (Super Nova) எனப்படுகின்றது.
இது போன்ற வெடிப்புக்கள் நமது பூமியில் இருந்து மில்லியன் ஒளிவருடங்கள் தூரத்தில் ஏற்படுகையில் நம்மால் பார்க்க முடியும் எனினும் இவை எப்போது ஏற்படும் எனக் கணிப்பது தான் கடினமானது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அதாவது சூப்பர் நோவாவைக் கணிப்பது மில்லியனில் ஒரு பங்கே சாத்தியம் என அவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் மனிதகுல வரலாற்றில் முதன் முறையாகக் கணிக்கப் பட்டுள்ள இந்த சூப்பர் நோவா, 2022 ஆம் ஆண்டு பூகோளத்தின் வடக்கே தென்படும் அன்னம் போன்ற வடிவம் கொண்ட நட்சத்திரத் தொகுதியான Cygnus இடையே புதிய நட்சத்திரமாகத் தோன்றும் எனப்படுகின்றது.
சூப்பர் நோவாக்கள் அடையாளம் காணப்படத் தொடங்கியதன் பின்னர் தான் வானியலில் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக நமது பிரபஞ்சம் அதிகரிக்கும் வேகத்தில் விரிவடைகின்றது என்பதற்கு ஓர் அவதானமாகவும் சூப்பர் நோவா விளங்கியதாகக் கூறப்படுகின்றது.
இதைவிட சூப்பர் நோவாக்கள் மூலம் தான் பிரபஞ்சத்தில் புதுப் புது மூலகங்கள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குப் பரவுவதாகவும் இதனால் உயிர்ப் பல்வகைமை கூட ஏற்படுவதாகவும் கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.