25/09/2017

ஆதார் இணைப்பின் மூலம் அப்பாவிகளின் பணம் பறிக்கப்படுவதை அனுமதிக்கலாமா? - பாமக நிறுவனர் Dr ராமதாஸ் அறிக்கை...


வங்கிக் கணக்குகளை ஆதார் எண்ணுடன் இணைப்பதன் மூலம் முறைகேடுகள் தடுக்கப்படும் என மத்திய அரசு கூறிவரும் போதிலும், கள நிலைமை அதற்கு முற்றிலும் எதிராக உள்ளது. சில தனியார் பணம் வழங்கும் வங்கிகள் செய்யும் தவறுகளால் ஏழை அப்பாவி மக்களுக்கு செல்ல வேண்டிய அரசு மானியங்கள், அவர்களுக்கே தெரியாமல் தனியார் வங்கிகளில் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வங்கிக் கணக்கு எண், நிரந்தர கணக்கு எண், செல்பேசி எண் ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு ஆணையிட்டிருக்கிறது. இது தனியுரிமையை மீறிய செயல் என்பது ஒருபுறமிருக்க, இந்நடைமுறையில் சில தனியார் நிறுவனங்கள் செய்யும் தில்லுமுல்லுகளால் அப்பாவி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். உதாரணமாக செல்பேசி சேவை வழங்கும் ஏர்டெல் நிறுவனம், பணம் வழங்கும் வங்கி சேவையையும் (Payment Bank) நடத்தி வருகிறது. செல்பேசி எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்காக வாடிக்கையாளர்கள் செல்லும் போது, அதற்கான நடைமுறையுடன் சேர்த்து, பணம் வழங்கும் வங்கி சேவைக் கணக்கு தொடங்குவதற்கான நடைமுறைகளையும் ஏர்டெல் நிறுவனம் செய்கிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமலேயே அவர்களின் பெயரில் ஏர்டெல்  பணம் வழங்கும் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு விடுகிறது. ஆதாரும் அதனுடன் இணைக்கப்படுகிறது.

ஆதார் தொடங்கப்பட்டதன் நோக்கம் மக்களுக்கு அடையாளம் வழங்குவது தான் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால், அரசின் நலத்திட்டங்களும், மானியங்களும் பயனாளிகளுக்கு செல்வதையும், அதற்காக பயனாளிகளை அடையாளம் காட்டுவதற்கான கருவியாகவும் தான் ஆதார் பயன்படுகிறது.  ஆதார் மூலம் அரசின் பயன்களை நேரடியாக வழங்கும் நடைமுறையில் வினோதமான நடைமுறை ஒன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதாவது, ஒரு வாடிக்கையாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருக்கும் நிலையில், அவரது ஆதார் கடைசியாக எந்த வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கிறதோ, அந்தக் கணக்கில் தான் அரசின் மானியங்கள் வரவு வைக்கப்படுகின்றன.

ஏர்டெல் செல்பேசி எண்ணுடன் ஆதார் இணைக்கப்படும் போது, அந்நிறுவனத்தின் பணியாளர்கள்  வாடிக்கையாளர்களுக்கே தெரியாமல், அவர்களின் செல்பேசி எண்ணில்  ஏர்டெல் பணம் வழங்கும் வங்கிக் கணக்கையும் தொடங்கி, ஆதாருடன் இணைத்து விடுகின்றனர். இதனால் அவர்களுக்கு  எண்ணெய் நிறுவனங்கள் வழங்கும் சமையல் எரிவாயுக்கான மானியம் ஏர்டெல் பணம் வழங்கும் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படுகிறது. ஏர்டெல் பணம் வழங்கும் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் பணத்தை ஏர்டெல் சேவைக்கான கட்டணம் செலுத்தவோ அல்லது வேறு தேவைகளுக்காக மின்னணு முறையில் பணம் செலுத்தவோ மட்டும் தான் பயன்படுத்த முடியும். அதை பணமாக எடுத்து செலவழிக்க முடியாது. இது கூட பணம் வழங்கும் வங்கிச் சேவை பற்றி அறிந்தவர்களால் மட்டுமே சாத்தியமாகும்.


பாமரர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு தெரியாமல் ஏர்டெல் பணம் வழங்கும் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு, அரசின் மானியம் அந்தக் கணக்கில் சேர்க்கப்பட்டிருந்தால் அந்த தகவல் கூட அவர்களுக்கு தெரியாது. இன்றைய நிலையில் இந்தியாவில் 27.65 கோடி பேர் ஏர்டெல் இணைப்புகளை  பெற்றுள்ளனர். இவர்களில் குறைந்தபட்சம் 2.75 கோடி பேர் ஏர்டெல் பணம் வழங்கும் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டு, ஒவ்வொருவரின் கணக்கிலும் ரூ.1000 மானியம் வரவு வைக்கப்பட்டிருப்பதாகக் கொண்டால் ரூ.2750 கோடி பணம் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த பணம் சம்பந்தப்பட்ட மக்களுக்கு திரும்பக் கிடைக்குமா? என்பது ஒருபுறமிருக்க, ரூ.100க்கும், ரூ.200க்கும் கூட வழியற்ற கோடிக்கணக்கான மக்களின் மானியத்தை ஒரு தனியார் நிறுவனம் முறைகேடான வழியில் பறித்து வைத்திருப்பதும், அதை அரசு அனுமதிப்பதும் மன்னிக்கவே முடியாத குற்றம் ஆகும்.

இப்போதைய நிலையில் சமையல் எரிவாயு மானியம் மட்டுமே இந்த வகையில் பணம் வழங்கும் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படுகிறது. முதியோர் ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்பு உதவிகளும்  இந்தக் கணக்கில் சேர்க்கப்பட்டால், பாமரர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, அவர்கள் துயரப்பட வேண்டியிருக்கும். செல்பேசி வாடிக்கையாளர்கள் பெயரில் அவர்களுக்கு தெரியாமலேயே ஏர்டெல் பணம் வழங்கும் வங்கிக் கணக்கு தொடங்கப்படுவது தொடர்பாக லட்சக்கணக்கில் புகார்கள் வந்ததைத் தொடர்ந்து அதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி ஏர்டெல் நிறுவனத்திற்கு ஆதார் வழங்கும் அமைப்பான இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கடந்த இரு நாட்களுக்கு முன் அறிவிக்கை அனுப்பியுள்ளது.

அப்பாவி மக்களுக்கு வழங்கப்படும் மானிய உதவிகள் ஆதார் இணைப்பு என்ற பெயரில் இவ்வாறு மடைமாற்றப்படுவதை அரசு அனுமதிக்கக்கூடாது. அதற்கு ஏற்றவாறு விதிகள் திருத்தப்பட வேண்டும். நேரடி பயன்மாற்றத் திட்டப் பயனாளிகளுக்கு பல்வேறு ஆதாரங்களில் இருந்து வழங்கப்படும் மானியங்கள் அவர்களின் முதன்மை வங்கிக் கணக்கில் மட்டுமே வரவு வைக்கப்பட வேண்டும். அத்துடன் தனியார் பணம் வழங்கும் வங்கிக் கணக்குகளில் மானிய உதவிகளை வரவு வைக்க தடை விதிக்க வேண்டும். இதை செய்யத் தவறினால் இது மிகப்பெரிய மக்கள் பிரச்சினையாக வெடிக்கும் என எச்சரிக்கிறேன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.