02/10/2017

திருப்பூர் மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் மோ(ச)டி கும்பல்...


திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக நடைபெற்றுவரும் ‘மோ(ச)டி’ கும்பலின் வசூல்வேட்டை புதுவகை மாதிரியாக உள்ளது. அதாவது “2022 – ம் ஆண்டுக்குள் இந்தியர்கள் அனைவருக்கும் வீடு கொடுப்பது, எரிவாயு இணைப்பு கொடுத்து புகையில்லா வீட்டை உருவாக்குவது” என மோடி வாயால் வடை சுட்ட திட்டங்களை வைத்துக் கொண்டு பல பகுதிகளில் வசூல் வேட்டை நடக்கிறது.

குறிப்பாக திருப்பூர் பாண்டியன் நகர், கூத்தம்பாளையம், JP நகர், அன்னூர், குன்னத்தூர் என சுமார் 10 -க்கும் மேற்பட்ட இடங்களில் “பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜ்னா வீடு வழங்கும் திட்டம்” என்ற பெயரில் சுமார் 8000-த்திற்கும் மேற்பட்ட உழைக்கும் மக்களிடம் ரூ.60 முதல் ரூ.80 வரை விண்ணப்பக் கட்டணம் என்று ஆட்டையைப் போட்டுள்ளனர் உள்ளூர் பாஜக நிர்வாகிகள்.

ரியல் எஸ்டேட் மற்றும் கட்டை பஞ்சாயத்து கும்பல் தான் திருப்பூர் பாஜக-வின் உள்ளூர் நிர்வாகிகளாக உள்ளனர். இவர்களின் திருட்டு மேலும் நுட்பமானது. ஊர் முழுக்க பிரதமரின் இலவச வீடு வழங்கும் திட்டத்துக்கான முகாம் நடைபெற உள்ளதாக மோடியின் படத்துடன் தமிழிசை, பொன். ராதாகிருஷ்ணன் என தங்கள் கோஷ்டி தலைவர்களின் படங்களுடன் சுவரொட்டி, துண்டு பிரசுரங்கள் மூலம் விளம்பரம் செய்கின்றனர்.

அதனைப் பார்த்து சாதாரண ஏழை மக்களும், நடுத்தர வருவாய் உடையவர்களும் அரசு நடத்தும் முகாம் என எண்ணி வருகின்றனர். அவர்களிடம் மத்திய அரசின் திட்டத்திற்கான சேர்க்கை என்று கூறி கட்டனம் வசூலித்துக் கொள்கின்றனர். அதே முகாமில், பாஜக-வின் ரியல் எஸ்டேட் கும்பல் போனியாகாத தங்களின் மனை அல்லது வீடுகளை அங்கு வரும் நடுத்தர வர்க்கத்தினர் தலையில் கட்டிவிடுகின்றனர்.

அதே முகாமில், அரசின் எரிவாயு இணைப்பு பெற்றுத்தருவதாகக் கூறி பல்வேறு தனியார் ஏஜென்சிகளுக்கு வாடிக்கையாளர்களைச் சேர்த்து விடுவதையும் செய்கின்றனர். மொத்தத்தில் மோடி வாயால் சுட்ட வடையை வைத்து தங்களிடம் போணியாகாத நிலங்களை அப்பாவி மக்களின் தலையில் கட்டிவிடுவதோடு பதிவுக்கான கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் இருந்து பணம் பறிக்கிறது பாஜக கும்பல்.

இது போன்று 2 மாதங்களுக்கு முன்பு பாஜக கும்பல் நடத்திய முகாமில் ரூ.80 செலுத்தி பதிவு செய்து, டோக்கன் பெற்றவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது வரிசைப்படி வீடு ஒதுக்கிய பின்பு SMS  வரும் அதுவரை பொறுத்துக் கொள்ளுமாறும், பதிவு செய்யும் போது, அவர்கள் பெற்ற பணம், ஆதார் எண் மற்றும் ரேசன் கார்டு சரிப்பார்த்தற்கான கட்டணம் தானேயொழிய வீடு தருவதற்கும் அதற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை எனவும் புரட்டிப் பேசுகிறது இக்கும்பல்.

மேலும் இத்தகைய முகாம்களை நடத்த காவல்துறையிடமோ அல்லது சம்மந்தப்பட்ட அரசு அலுவலகத்திலோ முறையான அனுமதி ஏதும் பெறப்படுவதில்லை. இது குறித்து போலீசில் யார் முறையிட்டாலும், நாங்கள் போய் பார்க்கிறோம் என்று முடித்துக் கொள்கின்றனர்.

குறிப்பாக இந்த முகாம்களுக்கு பேனர் போட்டு விளம்பரம் செய்து ஏற்பாடு செய்யும் உள்ளூர் பாஜக பிரமுகர்கள் யாரும் முகாம் நடக்கும் இடத்தில் தலைகாட்டுவதில்லை, வெளியில் இருந்து வரும் ஆட்களைக் கொண்டு இந்த திருட்டு வேலைகளை நடத்துகின்றனர். இவ்வாறு தேர்ந்த ’420’ கும்பலாக செயல்படுகிறது பாஜக கும்பல்.

இது போன்று அரசு சலுகைகள் வழங்குவதாக கூறிக் கொண்டு உழைக்கும் மக்களின் ரத்தம் குடிக்கும் இந்த கயவர்களின் செயலை எந்த ஓட்டுக் கட்சியினரும் தடுத்து நிறுத்தவோ, கண்டிக்கவோ இல்லை.

கொல்லைப்புறமாக டாஸ்மாக் கடைகளை பெயர்ப்பலகைக்கூட இல்லாமல் திருப்பூரின் அனைத்துப் பகுதிகளிலும் திறந்துவிட்டு மக்கள் தாலியறுக்கும் OPS – EPS கும்பலும், BJP காவிகளும் திருப்பூரிலிருந்து மட்டுமல்ல தமிழகத்தைவிட்டே துரத்தினால் மட்டுமே உழைக்கும் மக்களுக்கு விடிவு கிடைக்கும்.

தகவல் : மக்கள் அதிகாரம், திருப்பூர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.