12/10/2017

மதுரை திருக்கோயில் நுழைவு போராட்டம் - ஒரு வரலாற்றுப் பதிவு..


1920களில் திருகோயில்களில் பட்டியல் இன சமூக மக்களை அனுமதிக்காததை எதிர்த்து எதிர்ப்புகுரல்கள் தோன்றத்துவங்கின.

 முதல் முதலாக 1927ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நுழைய நீதிகட்சியின் ஜே.என் ராமநாதன் தலைமையில் மக்கள் கூடினார்கள். ஆனால் அவர்கள் கோயில் வாசலில் தடுத்து நிறுத்தபட்டார்கள்.

அதே சமயம் ஜஸ்டிஸ் கட்சியை சேர்ந்த நீதிபதி கண்ணப்பர் தலைமையில் திருவண்னாமலை, திருச்சி மலைகோட்டை ஆகிய இடங்களில் 1927ல் ஆலயநுழைவு போராட்டங்கள் நிகழ்ந்தன. அவையும் தடுக்கபட்டன.

உடனே கண்ணப்பர் நீதிமன்றத்தில் திருவண்னாமலை கோயில் பூசாரிக்கெதிராக வழக்குப்பதிவு செய்தார்.

திருவண்னாமலை சப் மாஜிஸ்திரெட் கோர்ட்டும் "கண்ணப்பர் இந்து என்பதால் இந்துகோயிலில் நுழைய முழு உரிமை உண்டு" என தீர்ப்பளித்தது.

ஆனாலும் கோயிலுக்குள் நுழைய பொலிஸ் அனுமதிக்கவில்லை.

1920களுக்கு பின் காங்கிரஸ் கட்சி கோயில் நுழைவு போராட்டத்தை முன்னெடுத்ததும் இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

காங்கிரஸ் இந்த போராட்டத்துக்கு தேர்ந்தெடுத்த தலைவர்கள் வைத்தியநாதய்யர், ராஜாஜி, பக்தவத்சலம், டி.எஸ்.எஸ் ராஜன் ஆகியோர். இவர்கள் அனைவருமே ஆதிக்கசாதி சமூகங்களில் இருந்து வந்தவர்கள்.

இவர்கள் தலைமையில் போராட்டம் நடந்தால் பெருவாரி மக்களின் எதிர்ப்பு குறையும் என காங்கிரச் கட்சி கருதியது

சென்னையில் காங்கிரச் அரசு அமைந்ததும் 1932ல் பி.சுப்பராயன் முதல்வராக இருந்த சமயம் அவர் பட்டியல்சாதி மக்களை ஆலயநுழைவுக்கு அனுமதி அளிக்கும் மசோதாவை தாக்கல் செய்தார். ராமலிங்கம் செட்டியார் அதை வழிமொழிந்தார்.

மசோதா பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேறியது. ஆனால் இதை கண்டித்து மதுரையில் "வருணாசிரம ஸ்வராஜ்ய சங்கம்" தோற்றுவிக்கபட்டது. அதன் தலைவர் நடேசய்யர்.

ஆனால் ப்ரிட்டிஷ் அரசாங்கம் இந்த பிரச்சனையில் எந்த முடிவும் எடுக்காமல் ஒத்திபோட்டு கொண்டே வந்தது.

இதனால் ஹரிஜன் சேவா சங்கம் எனும் அமைப்பை துவக்கிய வைத்தியநாதய்யர் தமிழகமெங்கும் கருத்துகணிப்பை நடத்தினார். காஞ்சிபுரம், மதுரை, கும்பகோணம், திருவரங்கம் என முக்கிய திருகோயில் நகரங்களில் பெருவாரியான மக்கள் ஆலய நுழைவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.


வெறுமனே கருத்துகணிப்புடன் நில்லாது மதுரை மீனாட்சியம்மன் தேவஸ்தான கமிட்டி தேர்தலில் நின்ற ஹரிஜன் சேவா சங்க அமைப்பின் ஆறு வேட்பாளர்களும் வெற்றி பெற்று தேவ்ஸ்தான போர்டில் இடம் பிடித்தார்கள்.

இது "வருணாசிரம ஸ்வாராஜ்ய சங்கத்திற்கு" மிகப்பெரும் பின்னடைவாக கருதபட்டது.

1937ல் ராஜாஜி முதல்வரானார். அதன் பின் "மலபார் கோயில் நுழைவு சட்ட்டத்தை" கொன்டு வந்தார். சட்டம் நிறைவேறியது.

அதன்பின் ஆலய நுழைவுக்கு ஜூலை 8 1939 எனும் தேதி குறிக்கபட்டது.

கலவரம் நடக்கலாம் எனும் சூழலில் வைத்தியநாத ஐயருக்கு ஆதரவாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரல் கொடுத்தார்.

தேவர் ஆதரவு கிடைத்தது என்றவுடன் எதிர்ப்பு போராட்டம் பிசுபிசுத்தது. சொன்ன தேதியில் வைத்தியநாதய்யருடன் எல்.என்.கோபால்சாமி, கக்கன் (பின்னாளைய மந்திரி) மற்றும் ஆறு பட்டியல் சாதி இனமக்கள் நுழைந்து மீனாட்சியை தரிசினம் செய்தார்கள். அவர்களை தடுக்க ஆலயத்தில் ஒருவர் கூட இல்லை.

நடேசய்யர் விடவில்லை...உடனே வெள்ளைகார கவர்னருக்கு தந்திகளையும், கடிதங்களையும் அனுப்பினார். "தீட்டுபட்ட" மீனாட்சி ஆலயத்திற்கு குடமுழுக்கு விழா நடத்தவேண்டும் என்றெல்லாம் கோரினார்.வைசிராய், கவர்னர் வரை புகார்கள் போக, அன்ரைய சென்னை கவர்னர் எர்க்ஸைன், மற்றும் வைசிராய் ஜான் ஹோப் (இவர் பெயரால் கோவையில் ஓப் காலேஜ் எனும் பிரபல பஸ்நிலையம் உள்ளது) ஆகியோர் அவற்றை புறக்கணித்து ஆலயநுழைவு சட்டத்திற்கு முழு அனுமதி அளித்து அதை சட்டமாக்கினார்கள்.

ஆக ஆலயநுழைவு போராட்டம் என்பது அன்றைய நீதிகட்சி, காங்கிரஸ் கட்சி மற்றும் அனைத்து சாதி மக்கள் ஆகியோரின் ஒருமித்த போராட்டத்தின் விளைவாக நீண்ட போராட்டத்திற்கு பின்னர் சாத்தியமானது.

இதில் வியப்பான விஷயம் என்னவெனில் இவர்கள் எல்லாரும் அப்போது ஒருவருக்கொருவர் கடுமையான கருத்து முரன்பாடு கொன்டிருந்தார்கள் என்பதுதான்.

ஆனால் பொதுபிரச்சனை என வந்தபின் அதில் ஒன்றிணைந்து செயல்பட்டு வெற்றியை எட்டினார்கள்.

இந்த ஒற்றுமையை இன்னபிற மக்கள் கோரிக்கைகளுக்கும் இன்றைய கட்சிகள் காட்டினால் காவிரி உள்ளிட்ட பல பொது பிரச்சனைகளை தீர்க்கலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.