இந்திய அரசு கடந்த நவம்பர் மாதம் கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்றது. இதனையடுத்து ஊழலை ஒழிக்கும் விதமாக பணமில்லாத வர்த்தகத்திற்கு மாறுமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போதுதான் முன்மாதிரியாக இந்தியாவில் முதலாவதாக கேஷ்லெஸ் எக்கானமிக்கு மாறியது தெலுங்கானாவின் இப்ரஹிம்பூர் என்ற கிராமம். தெலுங்கானாவின் சித்திப்பேட்டை தொகுதியில் உள்ள இப்ராஹிம்பூர் கிராமம் முற்றிலும் பணமில்லா பரிவர்த்தனைக்கு மாறியது.
சித்திப்பேட்டை தொகுதியின் எம்.எல்.ஏ. ஹரீஷ் ராவ் இப்ரஹிம்பூர் என்ற கிராமத்தை தத்தெடுத்து பணமில்லா பரிவர்த்தனைக்கு மாற்றினார். இச்செய்தி இந்தியா முழுவதும் மீடியாக்களில் வெளியாகியது. கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு வங்கியில் கணக்கு தொடரப்பட்டு, பணமில்லா பரிவர்த்தனைக்கு அடித்தளமிடப்பட்டது. இப்போது அங்கு நிலையே பெரிதும் மாறிவிட்டது. ஏடிஎம் வசதிகள் இல்லாமை, வங்கி கார்டுகள் மூலமான பரிவர்த்தனைகளுக்கு அதிகமான சேவை கட்டணம் ஆகியவை கிராமத்தினரை கார்டை தூக்கி எறியசெய்து, பழைய நிலைக்கே திரும்ப செய்து உள்ளது.
ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் இணைய வேண்டும் என்பதற்காக நாங்கள் கேஷ்லெஸ் பரிவர்த்தனைக்கு ஆதரவை கொடுத்தோம், ஆனால் வங்கிகளால் அதிகமான சேவை கட்டணம் வசூலிக்கப்படுவதால் நாங்கள் பழைய நிலைக்கே திரும்பிவிட்டோம் என கூறுகின்றனர் கிராம மக்கள்.
கடந்த டிசம்பர் மாதம் கிராமம் நாடு முழுவதும் செய்தியாகிய நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள், ஆட்டோ கட்டணம் முதல் நொறுக்கு தீனி வரைக்கும் கார்டுதான் என்றனர். அப்போது கிராமத்தில் காணப்பட்ட எழுச்சியானது இப்போது கிடையாது.
வங்கிகள் பரிவர்த்தனைகளுக்கு அதிகமான சேவை கட்டணம் வசூலிப்பது காரணமாக மக்கள் மீண்டும் பண பரிவர்த்தனையையே தொடங்கிவிட்டனர்.
அக்கிராமத்தை சேர்ந்த பிரவீன் இந்துஸ்தான் டைம்ஸ்க்கு அளித்து உள்ள பேட்டியில், “ மாதம் ரூ. 1,400 வாடகை காரணமாக ஸ்வைப்பிங் மிஷின்களை வங்கிகளில் ஒப்படைத்துவிட்டோம். நாங்கள் ஸ்வைப்பிங் மிஷ்ன்களை பயன்படுத்தாமல் இருந்தாலும் கட்டணத்தை கட்டாயம் செலுத்த வேண்டும் என்ற நிலையே நீடித்தது,” என்று கூறிஉள்ளார். தொடக்கத்தில் முதல் 6 மாதங்களில், மிஷ்ன் பயன்படுத்தியது காரணமாக எனக்கு ரூ.10 ஆயிரம் நஷ்டம்தான் ஏற்பட்டது. இவ்வளவு கட்டணம் செலுத்தி என்ன கேஷ்லெஸ் பரிவர்த்தனை? என கேள்வி எழுப்பி உள்ளார்.
இப்போது “மன்னிக்கவும், பணம் மட்டும் கொடுங்கள், கார்டு எல்லாம் வேண்டாம்,” என கடைக்காரர்கள் கூறும் நிலை காணப்படுகிறது.
70 வயதாகும் உள்ளூர் விவசாயி பொம்மையா பேசுகையில், “நாங்கள் கார்டுகளை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டோம். எங்களுக்கு பணம் தேவையென்றால் ஏடிஎம்களுக்கு செல்கிறோம், பணத்தை எடுத்துக் கொள்கிறோம்,” என்கிறார். இப்ரஹிம்பூர் கிராமம் கேஷ்லெஸ் பரிவர்த்தனைக்கு மாறிய போது இந்தியா முழுவதும் ஒரு முன்மாதிரியான கிராமமாக காணப்பட்டது.
இப்போது கிராம மக்கள் தாங்கள் தவறு இழைத்துவிட்டோம் என்கிறார்கள்.
பஞ்சாயத்து உறுப்பினர் கே லட்சுமி தேவியின் மகன் கும்பாலா ரெட்டி பேசுகையில், “கட்டாய கேஷ்லெஸ் பரிவர்த்தனை என்பதற்கு எந்தஒரு இடமும் கிடையாது என நாங்கள் உணர்ந்து கொண்டோம். வாடிக்கையாளர்களுக்கு எது பயனுள்ளதாக இருக்கிறதோ, அதன்படியே அவர்கள் செயல்படலாம் என்பதே சரியாக படுகிறது,” என்றார்.
ஆந்திரா வங்கியின் உள்ளூர் கிளையின் மானேஜர் முல்லா சங்கரும் கிராமத்தில் கேஷ்லெஸ் பரிவர்த்தனை என்பது தோல்வியை தழுவியது என்று கூறுகிறார்.
அவர் பேசுகையில், “நாங்கள் ஸ்வைப்பிங் மிஷ்ன்களை வழங்குவதற்கு முன்னதாகவே கூறிவிட்டோம் மாதம் ரூ. 1,400 வாடகை வசூலிக்கப்படும் என்று. அப்போது காணப்பட்ட ஆர்வத்தில் அவர்கள் கவலை கொள்ளவில்லை. கிராமத்தில் மிக சிறியளவிலே வர்த்தகம் ஆகும் கடைக்காரர்களால் வாடகையை தொகையை கொடுப்பது கடினம் என்ற நிலையானது உருவானது, அவர்கள் ஸ்வைப்பிங் மிஷ்ன்களை திரும்ப ஒப்படைத்துவிட்டனர்,” என்றார். அரசுக்களால் பாராட்டப்பட்ட கிராமம் சேவை கட்டணம், வாடகையை தாங்க முடியாமல் மீண்டும் தன்னுடைய பழைய நிலைக்கே திரும்பி உள்ளது.
தெலுங்கானா மாநில விவசாயத் துறை மந்திரியும், உள்ளூர் எம்.எல்.ஏ.வுமான ஹரீஷ் ராவ் பேசுகையில், “ கிராமத்தில் உள்ள கடைக்காரர்கள் அனைவரும் சிறிய அளவிலான வருமானம் கொண்டவர்கள், வெளிப்படையாகவே அவர்களால் பெருமளவு சேவை கட்டணத்தை தாங்க முடியவில்லை. அவர்களுக்கான கட்டணத்தை தள்ளுபடி செய்யுமாறு வங்கிகளுக்கு கோரிக்கை விடுத்து உள்ளோம், வங்கிகள் இதனை பரிசீலனை செய்தால் நாங்கள் மீண்டும் கேஷ்லெஸ் பரிவர்த்தனைக்கு மாற கிராம மக்களிடம் பிரசாரம் செய்வோம்,” என கூறிஉள்ளார். வங்கி ஏடிஎம் வசதியும் சொல்லும்படியாக இல்லை எனவும் கிராம மக்கள் சொல்கிறார்கள்.
தெலுங்கானா மாநில அரசின் மகிளா வங்கியின் உதவியுடன் கிராம மக்கள் பணம் பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கிறார்கள். கிராமம் பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா என்ற திட்டத்திலிருந்து வெளியேறியது என்றே பார்க்கப்படுகிறது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.