பண்டைத் தமிழ் இலக்கியங்களில் தீபாவளி பற்றிய குறிப்புகள் இல்லை..
ஆனால், விளக்கீட்டு விழா என்னும் விழாக்கள் பற்றிய செய்திகள் உள்ளன.
கார்காலம் முடிந்தபின் அறுவடையை எதிர்நோக்கிய காலத்தில் அறுமீன் சேரும் முழுநிலா மாலையில் வீடுகளில் விளக்குகளை ஏற்றி வைத்து வழிபாடு செய்த ஒரு விழாவை அகநானூறு கூறும்.
இக்காலத்தில், மலை உச்சியில் கூட விளக்கேற்றி வைத்தனர். இந்த நிகழ்வு பிற்காலத்தில் தீபாவளியுடன் இணைந்தது என்பார்கள்.
விஜயநகர, நாயக்க பேரரசு காலத்தில் தமிழகத்தில் தீபாவளி விழா பெரிய அளவில் அறிமுகமானது என்ற கருத்து உண்டு. செஞ்சி நாயக்கர், தஞ்சை நாயக்கர் செல்வாக்காலும் மராட்டிய வணிகர்கள், போர் வீரர்கள் ஆகியோரின் செல்வாக்காலும் தஞ்சை, மதுரை பகுதிகளில் தீபாவளி பரவலாகியிருக்கிறது.
இது குறித்த ஆவணங்களை புலவர் ராசு பதிப்பித்திருக்கிறார்...
தஞ்சை அரண்மனை தேவதாசியான சுந்தரி என்பவள் தீபாவளி சமயம் அரண்மனையில் நடனமாட கொடுக்கப்பட்ட பரிசுகளை ஒரு மோடி ஆவணம் கூறும் ( கி.பி. 18 ஆம் நூற்.) 1821-ம் ஆண்டு ஆவணம் தஞ்சை கோட்டைக்குள் நகர்வீதியில் செல்லும் மக்களுக்கு இனிப்பு பண்டங்களைத் தானமாக வழங்கியதை குறிப்பிடுகிறது.
இன்னொரு ஆவணம், தீபாவளி முந்திய நாளில் எண்ணெய் குளியல் செய்யப்பட்டதையும் கூறும்.
1827- ம் ஆண்டு ஆவணம் தஞ்சை அரண்மனைகளில் 100 பட்டாசு கட்டுகள் வாங்கப்பட்டதற்கு முக்கால் பணம் கொடுக்கப்பட்டதையும் 1839- ம் ஆண்டு ஆவணம் 300 கட்டு பட்டாசு வாங்கியதையும் கூறும்.
இந்தப் பட்டாசுகள் பொது மக்களுக்கும் இலவசமாய்க் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
இதனால் 19- ம் நூற்றாண்டு ஆரம்பத்திலேயே தீபாவளி விழாவில் பட்டாசு கொளுத்தப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.