13/11/2017

10 ஆண்டுகள் மன்றாடியும் சாலையை சீரமைக்காததால், தாங்களே நிதி திரட்டி களத்தில் இறங்கிய பெரம்பலூர் கிராம மக்கள்...


பெரம்பலூர் அருகே பழுதடைந்த சாலையை சீரமைத்துத் தரக்கோரி மாவட்ட நிர்வாகத்திடம் மன்றாடிப் பார்த்த கிராம மக்கள், அவர்கள் அலட்சியம் செய்ததால் தாங்களே நிதி திரட்டி சாலையை சீரமைத்துக் கொண்டிருக்கின்றனர்.

பெரம்பலூர் அருகே உள்ள அரசலூர் கிராமத்துக்குச் செல்லும் சாலை, பழுதடைந்தே பத்து ஆண்டுகளுக்கு மேலாவதாகச் சொல்லப்படுகிறது.

போக்குவரத்துக்கு தகுதியற்றதாகிப் போனதால் கிராமத்துக்கு வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்தும் அண்மைக் காலமாக வருவதில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும் அவசரகால 108 ஊர்தி, வாடகை வாகனங்கள் என எதுவுமே கிராமத்துக்குள் வருவதில்லை எனவும் கூறப்படுகிறது.

10 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகம், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் என பலரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறுகின்றனர் இப்பகுதி மக்கள்.

பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் பலனின்றிப் போனதால், தங்களுக்குள்ளேயே நிதி திரட்டி சாலையை சீரமைக்கும் பணியில் இறங்கியுள்ளனர்.

அரசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் என எல்லோரும் ஒன்றிணைந்து உணவு சமைத்து பரிமாறி உண்டு சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தாங்கள் போடும் இந்த சாலை வழியே அடுத்த தேர்தலுக்கு வாக்கு கேட்க வரவுள்ள வேட்பாளர்களுக்காக காத்திருக்கின்றனர் அரசலூர் மக்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.