காளைகள் இல்லாத தமிழ்ச் சமூகத்தைக் கற்பனையிலும் காண இயலாது. காளைகள், சிந்துவெளி நாகரிகத் தமிழரின் பெருமிதச் சின்னங்களாக இருந்தன. ஆரியர் குதிரைகளை ஓட்டி வந்தபோது, தமிழர் காளைகளை முன்னிறுத்தியே அவர்களை எதிர்கொண்டனர். பொதுவாகவே, மாடுகள் தொல் பழங்குடியினரின் செல்வங்களாக இருந்து வருபவைதான். மாடு என்ற சொல்லுக்குத் தமிழில் ‘செல்வம்’ என்றும் பொருள் உண்டு.
ஆரியத்தின் கால்நடை அறிவுக்கும் தமிழிய கால்நடை மரபுக்கும் நேர் எதிர் முரண்களே அதிகம். ஆரியர்களைப் பொதுவாக, கால்நடைச் சமூகத்தினர் என்று ஆய்வுலகம் மதிப்பிடுகிறது. ஆயினும் அவர்களை முழுமையான கால்நடைச் சமூகத்தினர் எனக் கூறுவது பொருந்தாது. ஆரியர் குதிரைகளைத் தம் செல்வமாக, பாசத்துக் குரியவையாகக் கருதினர் என்ற பதிவுகளைக் காட்டிலும் அவற்றைப் பலி கொடுக்கும் பொருளாக மாற்றினர் என்பதையே ரிக் வேதப் பாடல்கள்,காட்டுகின்றன.
ஆரியரின் பொருளியல் சிந்தனை, கால்நடைகளை வளர்த்து பொருள் ஈட்டுவதோ, வணிகம் செய்வதோ, வேளாண் தொழில் புரிவதோ அல்ல. மேற்கண்ட தொழில் செய்யும் சமூகங்களைச் சுரண்டியும் சூறையாடியும் பிழைத்திருப்பது என்பதுதான். ரிக் வேதம் ஒன்றே இக் கூற்றைத் தெளிவாக விளக்கும்.
குதிரைகளை ஆரியர் பலி கொடுப்பதைச் சிந்து வெளித் தமிழர் கடுமையாக எதிர்த்தனர். ஆரியரது யாகங்களைத் தமிழ்ப் படை சிதைத்தது. இது ஆரியருக்குக் கடும் ஆத்திரத்தை ஊட்டியது.
வேள்வி செய்யாதவர் களாகவும், தானம் கொடுக்கா தவர்களாகவும் தன்னை வணங் காதவர்களாகவும், தேவனற்றவர் களாகவும் உள்ள தாசர்களைக் கொல்லுகிறவன் எவனோ அவன் இந்திரன்!’ என்கிறது ரிக் வேதம். (ரிக் 2-12-10/ அரப்பாவில் தமிழர் நாகரிகம்/ குருவிக்கரம்பை வேலு / சிவசக்தி 2001/பக்19)
கால்நடைகளைத் தம் சமூக உறுப்பினராகக் கருதும் மரபு தமிழருடையது. ஆயம், என்ற சொல் கூடி வாழுதலைக் குறிக்கும். கால்நடைகளின் கூட்டத்தோடு கூடி வாழ்பவர் ஆயர் எனப்படுவர். இச் சொற் களில், மனிதர் கால்நடைகள் இரண்டும் இணைந்த பொருள் உள்ளதைக் கவனிக்கலாம். அதாவது, ஆடு மாடுகளும் மனிதர்களும் ‘ஒன்றாக’ வாழ்தலை இச்சொல் குறிக்கிறது. கால்நடைகளை மனித சமூகத்தின் அங்கங்களாக தமிழர்கள் அணுகியதன் வெளிப்பாட்டினையே ஆயர் எனும் சொல் காட்டி நிற்கிறது
மானுடவியல் படி மலர்ச்சியில், ஒவ்வொரு சமூக மும் தம் உற்பத்தி முறையை மேம்படுத்தும் விதமான வீர விளையாட்டுகளை வளர்த் தெடுத்து வருகின்றன. மலை நாட்டவருக்கு வேட்டையே முதன்மை உற்பத்தி. ஆகவே, குறிஞ்சி நிலத்தின் வீர விளை யாட்டுகள் கொடும் விலங்கு களை வெல்வதாக இருந்தன.
நெய்தல் மாந்தர், சுறா வேட்டை யை வீர விளையாட்டாகக் கொண்டிருந்தனர். முல்லை நிலத்தவர் பல்லாயிரம் மாடு களை மேய்க்க வேண்டி யிருந்ததால், ஏறு தழுவல் எனும் காளை அடக்குதலை வீர விளையாட்டாகக் கொண் டனர்.
வீர விளையாட்டுகள் என்பவை, வெறும் வெட்டிப் பொழுது போக்குகள் அல்ல. அவை, உற்பத்தி நடவடிக் கையின் கூறுகள். சங்க கால முல்லை நிலப் பெண்கள், ஏறு தழுவும் இளைஞனைத் தம் தலைவனாகத் தேர்ந்தெடுப்பதை மரபாகக் கொண்டிருந்தனர். உற்பத்தி நடவடிக்கையான மாடு மேய்த்தலை யாரால் சிறப்பாகச் செய்ய முடியும்? அடங்காத காளையை அடக்கும் இளைஞர் களால்தான் முடியும். அவ்வா றான சிறந்த உற்பத்தித் திறன் கொண்டவனை மணம் கொள்வது, இல் வாழ்க்கை சிறக்க அடிப்படை என்பதே இதன் கருத்து.
இன்றும் கால்நடைச் சமூகத்தவரால் ஏறு தழுவல் கடைப்பிடிக்கப்படுகிறது. உற்பத்தி நடவடிக்கை என்பதன் உண்மையான பொருள் புரிந்து கொள்ளப்படாமல், வெறும் விளையாட்டு என்ற அளவில் ஏறு தழுவல் பார்க்கப்படுகிறது.
இன்றும் பெரும் மந்தைகளைப் பராமரிக்க, வீரமும் உடல் வலுவும் தேவைதான். திமிர் கொண்டு பெருத்த காளைகளை அடக்க இயலாத எவராலும் அக்காளைகள் அடங்கிய மந்தைகளைப் பராமரிக்க இயலாது.
இது ஒருபுறம் இருக்கட்டும்.
இந்தியாவில் குதிரைப் பந்தயங்கள் அரசு அங்கீகாரத் துடன் நடத்தப்படுகின்றன. இதற்காக குதிரைகள் கோடிக் கணக்கான பணச் செலவில் பராமரிக்கப் படுகின்றன, இறக்குமதி செய்யப்படுகின்றன. இப் பந்தயங்களை நடத்துவோரும் இவற்றில் பங்கு பெறுவோரும், பணச் சூதாடிகள் மட்டுமே! இப் பந்தயங்களுக்காகக் குதிரைகள் மோசமான முறையில் துன்புறுத்தப்படுகின்றன. குதிரை ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி உறுப்புகள் இழக்கின்றனர், மரணம் அடைகின்றனர்.
கிரிக்கெட் ஆட்டக் காரர் கிர்மானி என்பவர் கண்களில் பந்து வேகமாக மோதியதால் பார்வை இழந்தார். கான்டி ராக்டர் என்ற ஆட்டக் காரரின் உச்சந்தலையில் பந்து மோதி, தலையின் மென்மை யான ஓடு உடைந்து போனது. உலோகத் தால் செய்யப்பட்ட செயற்கை ஓடு அவருக்குப் பொருத்தப் பட்டது. கவாஸ்கர் தலையில் பந்து மோதி, மிக மோசமான நிலையை அடைந்து, தீவிர சிகிச்சைக்குப் பின்னர் தப்பினார். ஆணுறுப்பின் மீது பந்து மோதி, விரைகள் வெளியே வந்து மரணம் நடந்த நிகழ்வுகள் கிரிக்கெட் வரலாற்றின் தவிர்க்க இயலாத பகுதிகள்.
இதற்காக, கிரிக்கெட் விளையாட்டைத் தடை செய்ய யாரும் கோரவில்லை. கை விரல்கள் முதல் மயிர் வரை அனைத்து உறுப்புகளுக்கும் பாதுகாப்புக் கவசம் அணிந்து கொண்டு ’வீரர்கள்’ அந்த விளையாட்டை ஆடுகின்றனர்.
கிரிக்கெட் எந்தச் சமூகத்தின் உற்பத்தி யைப் பாதுகாக்கிறது? குதிரைச் சூதாட்டம் எந்தச் சமூகத்தின் உற்பத்தி நடவடிக்கை? முதலாளிய நிறுவனங்களின் விளம்பரங்களுக்குப் பயன்படுகின்றன.
பெருமுதலாளிய ஊழலும் ஆரியச் சுரண்டல் கொள்கையும் இணைந்து இந்திய விளையாட்டுத் துறைகளைத் தம் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளன. இவற்றுக்கு ஏதுவான விளையாட்டுகளுக்கு சிவப்புக் கம்பளம், எதிரான விளையாட் டுகளுக்குச் சிவப்பு அட்டை. இதுவே இந்தியத் தேசியம்!
ஏறு தழுவலுக்கு நிபந்தனைகள் விதிப்பதன் பின்னணியில் ஒரு வரலாறு இருக்கிறது.
தமிழரின் மரபுசார் உற்பத்தி நடவடிக்கை களை ஆரியம் வெறுக்கிறது. அவற்றை அழிக்கத் துடிக்கிறது. ஆகவே, தமிழரின் கால்நடைச் செல்வங்கள் ஆரியப் பெரு முதலாளியத்துக்கு ஆகாதவை. பால் உற்பத்தி பெரு நிறுவனங்கள் சுரண்ட வேண்டுமானால், மாடு வளர்ப்போர் அழிய வேண்டும். இதைச் சாதிப்பதற்கு ஆரியப் பெருமுதலாளியம் பல ஆயுதங்களைக் கையில் எடுத்துள்ளது. அவற்றில் ஒன்றுதான், ஏறு தழுவலுக்கு எதிரான நெருக்கடிகள்.
மாடுகள் வளர்ப்பதே இழிவு என்ற கருத்து ஏற்கெனவே தமிழகத்தில் ‘முற்போக்கு’ முகமூடி யுடன் தூவப்பட்டு விட்டது. மாடு பிடிப்பது வெட்டி வேலை என்ற
’பகுத்தறிவு’ப் பரப்புரையும் வெற்றிகரமாக நடந்து வருகிறது.
ஏறு தழுவலின்போது ஏற்படும் உயிர் இழப்புகளைத் தடுக்கப் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அவற்றைச் செய்யக் கூடாது என்று நாம் கூறவில்லை. இதைப் பற்றிய விரிவான ஆய்வுகளுக்கும் திட்டமிடல் களுக்கும் நாம் அணியமே. தமிழ் இளைஞரின் உயிர்களையும் உறுப்புகளையும் பாதுகாக்கும் பொறுப்பு ஆரிய திராவிட ’முற்போக்குவாதிகளை’ விட நமக்குக் கூடுதலாக உண்டு.
ஏறு தழுவலைப் பாதுகாப்பதற்காக வழக்கு நடத்திக் கொண்டிருக்கும் போராளிகளுக்கு இத்துறையில் நல்ல அறிவும் தேர்ச்சியும் உண்டு. அரசுக்கு உண்மையிலேயே ஏறு தழுவலைப் பாதுகாக்கும் அக்கறை இருந்தால், இவர் களோடு இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ளும். ஆனால், திராவிட அரசுகளும் ஆரியக் கொள்கை யாளர்களும் கூட்டுச் சேர்ந்துதானே தமிழரை ஆள்கின்றனர். ஆகவே அவர்கள் இவ்வகை நடவடிக்கைகளை முன்னெடுக்க மாட்டார்கள். போராட்டங்களின் வழி, ஏறு தழுவலைப் பாதுகாக்க வேண்டும்.
பொதுவாக கிராமங்களில் வகை வகையான மாடுகள் வளர்ப்பது, மாட்டு வேடிக்கையின் போது பெருமிதம் அடையத்தான். காங்கேயம், கண்ணாபுரம், பர்கூர், மணப்பாறை வகைக் காளைகள் கம்பீரமானவை, மிகுந்த ஆற்றல் உடையவை. இவை போன்ற நல் வகைக் காளைகளை வளர்த்து ஏறு தழுவலில் ஈடுபடுத்து வதில்தான் வளர்ப்பவரின் பெருமிதம் அடங்கியுள்ளது.
ஏறு தழுவலுக்கே தடை / நெருக்கடி எனும் நிலையில் இந்த வகைக் காளைகள் முற்றிலும் அழியும். இதே நிலை தொடர்ந்தால், சில ஆண்டுகளில், தமிழர் நாட்டு மாடுகள் மறைந்து போய்விடும் ஆபத்து உள்ளது.
இதைத்தான் ஆரியம் விரும்புகிறது. குதிரகளை வளர்த்து சூதாடினால் ஆரியம் மகிழும். மாடுகளை யாகத்துக்குப் பலியாக்கினால் ஆரியம் உற்சாகம் அடையும். ஆனால், வீரமும் நேர்மையான சமூக உற்பத்தியும் ஆரியத்தால் சகிக்க இயலாதவை.
தமிழரோ, வீரத்தில் விளைந்து வீரத்தில் வாழ்ந்து வந்த மரபினர். ஆரிய –திராவிடக் கூட்டுச் சதியினால் வீர உணர்வில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஏறு தழுவல் எம் இன உரிமை என முழ்ங்குவோம். தமிழர் மரபுப் பொருளாதாரத்தை, பண்பாட்டைக் காப்போம்.
காளைகள் தமிழரின் அடையாளங்கள், குதிரைகள் ஆரியச் சின்னங்கள். ஏறு தழுவலுக்கு எதிராக இப்போது நடப்பவை எல்லாம் 5 ஆயிரம் ஆண்டு இனப் போராட்டத்தின் தொடர்ச்சியே...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.