சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த பூபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், தாத்தாவின் சொத்துகளை பாகப்பிரிவினை செய்து பத்திரப்பதிவு செய்ய விண்ணப்பித்து உரிய கட்டணங்கள் செலுத்திய பின்னரும் பம்மல் சார் பதிவாளர் பத்திரங்களை வழங்கவில்லை. எனவே பத்திரங்களை வழங்க உத்தரவிடக்கோரி வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், கடந்த 10 ஆண்டுகளில் சார் பதிவாளர் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனைகள், லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் கடந்த 10 ஆண்டுகளில் லஞ்சம் பெற்றதாக 77 அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, ஆசியாவிலேயே அதிக ஊழல் நடைபெறும் நாடாக இந்தியா இருப்பதாகவும், அந்த ஊழல்கள் அரசு அலுவலகங்களில் நடப்பதாகவும் வேதனை தெரிவித்தார். சட்டத் திருத்தம் கொண்டு வந்து லஞ்சம் பெறும் அதிகாரிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என கேள்வி எழுப்பினார்.
மேலும்,கடந்த 10 ஆண்டுகளில் அரசு அலுவலகங்களில் எத்தனை முறை லஞ்ச ஒழிப்புச் சோதனை மேற்கொள்ளப்பட்டது, எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன, எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர், லஞ்சம் அதிகளவில் புழங்கும் 5 அரசு அலுவலகங்கள் எவை என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினார்.
இதுகுறித்து மாநில லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையாளர் மற்றும் உள்துறை செயலாளர் ஆகியோர் வரும் டிச. 11 ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.