21/01/2018

சந்தைக்கு வந்த சத்துணவு முட்டைகள் : வால்பாறையில் அமோக விற்பனை...


வால்பாறையில், சந்தைக்கு வந்த சத்துணவு முட்டைகளால், மக்கள் ஆவேசமடைந்தனர். கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சியில், மொத்தம் 21 வார்டுகளில், 91 சத்துணவு மையங்கள் உள்ளன. இந்த சத்துணவு மையங்களில், 4,200 மாணவர்களுக்கு, தினமும் சத்துணவு வழங்கப்படுகிறது. வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை, ஐந்து நாட்களும், சத்துணவுடன் முட்டையும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், சமீப காலமாக வால்பாறை சத்துணவு திட்டத்தில், பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன. இதை நகராட்சி அதிகாரிகளும் கண்டு கொள்ளாததால், அரிசி முதல் முட்டை வரை சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக, சத்துணவு அரிசி, 10 ரூபாய்க்கும், சத்துணவு முட்டை, மூன்று ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வால்பாறை மற்றும் எஸ்டேட் பகுதியில் உள்ள வீடு, கடைகளுக்கு முட்டை விற்பனையாகிறது.சத்துணவு திட்டத்தை கண்காணிக்க மேலாளர், மேற்பார்வையாளர் பணியிடங்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாகவே உள்ளது. இதனால், முறைகேடுகள் அதிக அளவில் நடக்கிறது. இதை நகராட்சி அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.

நகராட்சி கமிஷனர் சம்பத்குமாரிடம் கேட்டபோது, ''மாவட்டத்தில் உள்ள நகராட்சியில், வால்பாறையில் தான் அதிக சத்துணவு மையங்கள் உள்ளன.

சத்துணவு திட்ட மேற்பார்வையாளர், மேலாளர் பணியிடங்கள், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாகவே உள்ளது.

சத்துணவு மையங்களில் அரிசி, முட்டை போன்றவை வெளிமார்க்கெட்டில் முறைகேடாக விற்பதை தடுக்க முடியவில்லை. இது குறித்து, தனி கூட்டம் நடத்தி எச்சரிக்கை விடுக்கப்படும், என்றார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.