13/01/2018

முத்துலெட்சுமி எழுதிய சுயசரிதையில் சொல்லப்படாத இருவர்...


1.சத்திய மூர்த்தி...
2.ஈ.வெ.ரா. பெரியார்...

தேவதாசி முறை ஒழிப்புக்காக பாடுபட்டவர் முத்துலெட்சுமி அம்மையார். இவர் 1927இல் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் சட்டமன்ற உறுப்பினருமாவர். இவர் தேவதாசி ஒழிப்புக்காக சட்ட முன்வரைவை கொண்டு வந்த போது கடுமையாக எதிர்த்தவர் சத்திய மூர்த்தி ஐயர். இவர் இறைவனுக்கு ஆற்றும் பணியை தடுக்கக்கூடாது என்று சொன்ன போது, உங்கள் ஆத்துப் பெண்களை இறைப்பணி செய்ய அனுப்புங்களேன் என்று கூறி, சத்தியமூர்த்தியின் வாயடைத்தவர் முத்துலெட்சுமி அம்மையார் என்று தான் பலரும் சொல்லி வருகிறோம். குறிப்பாக, ஈ.வெ.ரா. பெரியார் தான் முத்துலெட்சுமியை தூண்டிவிட்டு கேட்கச் சொன்னதாக தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.

முத்துலெட்சுமி அம்மையார் 1964ஆம் ஆண்டு ஆங்கிலத்தில்  சுயசரிதை நூல் எழுதியுள்ளார். அந்நூல் தமிழாக்கம் செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வந்துள்ளது. அந்நூலை தற்போது தான் படிக்க நேர்ந்தது. அந்நூலிலே, முத்துலெட்சுமி அம்மையார் சத்திய மூர்த்தி ஐயரிடம் இப்படியொரு விவாதம் நடத்தப்பட்டதை எங்கும் குறிப்பிடவே இல்லை, (ஓரிடத்தில் தன்னுடைய வகுப்புத் தோழர் அரசியல்வாதியான சத்திய மூர்த்தி என்கிறார் ) அதுபோல் முத்துலெட்சுமிக்கு ஆதரவாக "குடியரசு" ஏட்டில் குரல் கொடுத்த ஈ.வெ.ரா. பெரியார் குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை.

அந்நூலில், லேடி சதாசிவ ஐயரின் தலைமையில் அகில இந்திய மாதர் சங்கத்தை துவக்கியதாகவும், பெண்களுக்கு இல்லம் அமைப்பதற்கு ஶ்ரீனிவாச சாஸ்திரியார் முன்னெடுத்ததை அறிந்த பிறகே தாம் வேலை செய்யத் தொடங்கியதாக குறிப்பிடுகிறார்.

மேலும், அவர் சட்டமன்றத்தில், பெண்கள், குழந்தைகள் ஆகியோரின் முன்னேற்றத்திற்காக தீர்மானங்கள் கொண்டுவர முயன்ற போது கடும் எதிர்ப்பைச் சந்தித்ததாகவும், அச்சமயத்தில் காந்தியிடமிருந்தே ஆதரவைப் பெற்றதாகவும் குறிப்பிடுகிறார். பெண்ணுரிமைக்குப் போராடும் வலுவான போராளி என்று  புகழாரம் அனைத்தையும் காந்தியாருக்கே சூட்டி மகிழ்கிறார். 'யங் இந்தியா' ஏட்டில் தமக்கு ஆதரவாக காந்தியார் எழுதியதையும் விரிவாகக் கூறுகிறார்.

1946இல் சென்னையில் இந்தி பிரச்சார சபை வெள்ளி விழா கூட்டத்திற்கு காந்தியார் வருகை தந்த கூட்டத்தில், முத்து லெட்சுமி அம்மையார் பெண்விடுதலைக்குப் பாடுபட்ட தலைவர்களாக இராஜராம் மோகன்ராய், பண்டிட் வித்யாசாகர், சுவாமி தயானந்த சரசுவதி ஆகியோரை குறிப்பிட்டு பேசுகிறார்.

பிறகு நீதிக்கட்சி தலைவர் பனகல் அரசர் தமக்கு ஆதரவாக செயல்பட்டதை நினைவு கூறும் முத்துலெட்சுமி அம்மையார் தமது மசோதாவை தாமதப்படுத்த நீதிக்கட்சியைச் சார்ந்த கிருஷ்ணன் நாயர் முயல்வதாகவும் குற்றம் சாட்டுகிறார். காங்கிரசு கட்சி சட்டமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டதால் தமக்கு ஆதரவளித்த வெங்கையா, ஏ.பி.ஷெட்டி,.ஆர். நாகன் கெளடா, நடேச முதலியார், ஏ.ரங்கநாத முதலியார், கே.உப்பி சாஹிப் ஆகியோரை நன்றியோடு நினைவு கூறுகிறார்.

இந்தியாவிற்கு முன்மாதிரியாக நீதிக்கட்சிதான்  தேவதாசி முறையை ஒழித்ததாக திராவிட இயக்கத்தவர் கூறி வருகின்றனர். ஆனால் முத்துலெட்சுமி அம்மையாரோ தேவதாசி முறையை முதன்முதலாக ஒழித்தது 1909இல் மைசூர் சமஸ்தானமே என்று பாராட்டு தெரிவிக்கிறார். 1930களில் கொச்சி சமசுதானத்தில் அடியோடு தேவதாசி முறை ஒழிக்கப்படும் போது, அதுபோல ஆங்கிலேயரால் ஏன் சாதிக்க முடியவில்லையே? என கேள்வி எழுப்புகிறார்.

அவர் குற்றம் சாட்டும் ஒரே நபர் இராசாசி மட்டுமே. 1937இல் முதல்வராக இராசாசி பதவி வகித்த போது தேவதாசி ஒழிப்புமுறை சட்டத்தை தடுத்ததாகவும், பெண்கள் சீர்திருத்தத்திற்கு எதிரானவர் இராசாசி என்றும் கடுமையாகச் சாடுகிறார்.

பின்னர், 1947இல் ஓமந்தூர் இராமசாமி முதல்வராக இருந்த போதுதான் தேவதாசி சட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டு பெண்கள் தேவதாசி முறையிலிருந்து விடுபட்டதாகவும் மகிழ்ச்சி பொங்க குறிப்பிடுகிறார்.

அதுசரி, தமக்கு வழி காட்டியான காந்தியாரைத் தெரிகிறது, ஶ்ரீனிவாச ஐயங்காரைத் தெரிகிறது, லேடி சதாசிவ ஐயரைத் தெரிகிறது, தேவதாசி முறையை எதிர்த்த பனகல் அரசரைத் தெரிகிறது, அதே கால கட்டத்தில் எதிர்த்த  ஈ.வெ.ரா. பெரியாரைத் தெரியவில்லையா?

தேவதாசி முறையை ஆதரித்த இராசாசியைத் தெரிகிறது, அதை ஆதரித்த மற்றொருவரான சத்திய மூர்த்தி ஐயரைத் தெரிய வில்லையா?

இது போன்ற கேள்விகள் முத்துலெட்சுமி அம்மையார் எழுதிய சுயசரிதை நூலைப் படிக்கும் போது எழுகின்றன.

சத்திய மூர்த்தி ஐயரின் குடும்பத்தை நோக்கி, முத்துலெட்சுமி அம்மையார் கேட்டதாக சொல்லப்படும் செய்தியை பலரும் கூறிவருவதை நானும் இதுகாறும் நம்பி வருகிறேன். முத்துலெட்சுமி அம்மையாரின் எழுத்திலும், பேச்சிலும் நாகரிக வார்த்தைகளே இந்நூலில் கொட்டிக் கிடக்கின்றன. சத்திய மூர்த்தி ஐயரையே விமர்சிக்கத் தயங்குபவர் "உங்க ஆத்துப் பெண்கள் இத்தொழிலை செய்யட்டும்" என்று கூறியிருப்பாரா? என்ற ஐயம் எனக்குள் எழுகிறது.

இந்தத் தகவலை பிராமண எதிர்ப்புக்காக தீவிரமாகப் பரப்பி வரும் திராவிட இயக்கத்தினர் மூலச் சான்றுகளோடு விளக்கம் அளித்தால் நல்லது..

(டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி சுயசரிதை, எஸ். இராஜலெட்சுமி (தமிழில்), அவ்வை இல்லம், ராஜ லெட்சுமி சீனிவாசன் நினைவு அறக்கட்டளை)...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.