11/02/2018

தற்பெருமை...


தற்பெருமை கொள்ளுதல் ஒரு மனிதனுடைய நல்ல குணநலன்களையும் கெடுத்து விடும்.

நிறை குடம் தழும்பாது என்பது ஒரு பழமொழி.

எல்லாம் கற்று தெரிந்த ஒருவன் மிகவும் அமைதியாக இருப்பான். ஏதோ அரைகுறையாக தெரிந்து கொண்டவன் எல்லாம் தெரிந்தது மாதிரி நடந்து கொள்வான்.

நீ ஒரு செயலை முடித்து விட்டால் நீயாகவே உன்னை உயர்த்தி சொல்லக் கூடாது. உனது செயலை பற்றி மற்றவர்கள் பேச வேண்டும்.

அதைவிட்டு நீயே பேசினால் அது தற்பெருமை.

மற்றவர்கள் பேசினால் அது பெருமை.

விஞ்ஞானி ஒருவர், தன்னைப் போலவே அச்சாக பல மனிதர்களை உருவாக்கும் நுட்ப்பத்தைக் கண்டறிந்தார். அதன்படி அவர் உருவாக்கிய நகல்களுக்கும் அசலுக்கும் வித்தியாசமே தெரியவில்லை..

ஒரு நாள், தன் உயிரைக் கவர்ந்து செல்ல எமதர்மன் வரப் போகிறான் என்பதை அறிந்தார் விஞ்ஞானி. ஏற்கனவே தான் உருவாக்கி வைத்திருந்த ஒரு டஜன் நகல் மனிதர்களுக்கு நடுவில் போய் நின்று கொண்டார். பூலோகம் வந்த எமதர்மன், உருவத்தில் விஞ்ஞானியைப் போன்றே இருக்கும் பதின்மூன்று பேரில் உண்மையானவர் யார் என்பதை அறிய முடியாமல் குழம்பிப்போனார். வெறுங்கையுடன் திரும்பினான். மரணத்தை வென்று விட்டதாகக் குதூகலித்தார் விஞ்ஞானி.

இருப்பிடம் திரும்பிய எமதர்மன் நன்கு யோசித்தான். அவன் மனதில் ஒரு திட்டம் பளிச்சிட்டது. பாசக்கயிற்றுடன் பூலோகம் வந்தவன், விஞ்ஞானியின் இடத்தை அடைந்தான். ''ஐயா.. நீங்கள் பேரறிஞர்தாம். உங்களைப் போலவே ஒரு டஜன் உருவங்களைச் செய்து விட்டீர்கள். ஆனால். ஒரே ஒரு குறை...'' என்றான்.

விஞ்ஞானிக்குப் பொறுக்கவில்லை. ''என்ன குறை கண்டீர்?'' என்று எமதர்மனின் கைகளைப் பிடித்துக் கேட்டார். உடனே எமதர்மன், ''தற்பெருமை என்ற குறைதான். வாருங்கள் எமலோகத்துக்கு'' என்று விஞ்ஞானியை இழுத்துச் சென்றான்.

படிப்பாலும் கல்வியாலும் வருகிற அகங்காரம் மற்றவர்களின் அறிவால் இது வெறும் அறியாமையே என்று உணர்த்துகையில் தான் நாம் நம்மையே உணர்கிறோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.