18/02/2018

மீன்வளம் முற்றிலும் அழிக்கப்படும் - சாகர் மாலா திட்டம்குறித்து எச்சரிக்கும் சமூக ஆர்வலர்கள்...


துறைமுக மேம்பாட்டுக்காக மத்திய அரசால் கடந்த 2015-ஆம் ஆண்டு சாகர் மாலா திட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது இந்தத் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இந்தத் திட்டத்துக்கு 70,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தால் நாடு பொருளாதார முன்னேற்றம் காணும் எனினும், விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில் செய்துவரும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் அரசின் பயன்பாட்டுக்காக அவர்களின் இருப்பிடங்களும் அரசால் கையகப்படுத்தப்படும் எனவும் பல்வேறு தரப்பினர் இந்தத் திட்டத்துக்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

மேலும் இந்தத்திட்டம் குறித்து, மதுரா கல்லூரியின் ஓய்வு பெற்ற முன்னாள் முதல்வர் மற்றும் சமூக ஆர்வலர் முரளி கூறுகையில், `இந்தியாவின் இயற்கை வளங்கள் முழுவதையும் அழிக்க மத்திய அரசு கொண்டு வந்த திட்டம்தான் சாகர் மாலா திட்டம். குறிப்பாக இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும்போது இந்தத் தேசத்திலிருந்து 25 கோடி மீனவர்கள், தங்கள் வாழ்ந்து வந்த கடலோரப் பகுதியிலிருந்து முழுவதுமாக அப்புறப்படுத்தப்படுவார்கள். மீன்வளம் முற்றிலும் அழிக்கப்படும். 350 கி.மீ மீன் பிடித்தல் பகுதி 10 கி.மீ என்கிற அளவில் சுருங்கிவிடும். குறிப்பாகக் கடல் பொக்கிஷம் அனைத்தும் அயல் தேசத்து கார்ப்பரேட் முதலாளிகளால் இங்கேயிருந்து எடுத்துச் செல்லப்படும். 12 பெரிய துறைமுகங்கள் உட்பட 200 சிறிய துறைமுகங்கள் அமைக்கப்பட்டு கார்ப்பரேட் முதலாளிகள் கையில் ஒப்படைக்கப்படும். 1,200 தீவுகள் வெளிநாட்டு முதலாளிகள் வசம் ஒப்படைக்கப்படும்.

தமிழ் நாட்டிலிருந்து குறிப்பாக, கருங்கல் மலைகள் உடைக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். தமிழ் நாடு முழுவதும் ராணுவ மயமாக்கப்படும். மீத்தேன் வாயு, நியூட்ரீனோ, ஹைட்ரோகார்பன் என அனைத்து ஆபத்தான திட்டங்களுக்கும் இந்தத்திட்டம் வித்திடும். ஆகமொத்தம், உலகநீதி மூலத்துக்கு இந்தியா பலியாகும்.

இந்தத் திட்டத்தின் பாதிப்பு குறித்து முறையான விவரம் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படவில்லை. தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் கல்யாணம், காதுகுத்து போன்ற விழாக்களைச் சிறப்பிப்பதற்கு மட்டுமே மக்களால் நியமிக்கப்பட்டதைப் போல் நடந்து கொள்கின்றனர். தமிழக அரசால் முறையான ஆய்வுக்குழு அமைக்கப்பட்டு இந்தத்திட்டம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என வேதனையுடன் தெரிவித்தார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.