20/03/2018

நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு இல்லை: சிவசேனா அறிவிப்பு...


மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு இல்லை என்று சிவசேனா அறிவித்துள்ளது.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரச்சினையில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அண்மையில் விலகிய தெலுங்கு தேசம், மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்போவதாக அறிவித்தது. கடந்த வெள்ளிக்கிழமை காலை நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் இது தொடர்பாக நோட்டீசும் அளித்தது.

ஆனால், அன்று சபையில் காவிரி வேளாண்மை வாரியம் அமைக்கக் கோரி அ.தி.மு.க. எம்.பி.க்களும், முஸ்லிம்களுக்கு கூடுதல் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தெலுங்கானா ராஷ்டிர சமிதி உறுப்பினர்களும் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்கும் 50 எம்.பி.க்களின் தலைகளை கணக்கிட முடியவில்லை என்று கூறி சபாநாயகர் சபையை 19-ந்தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தார். இதனால் இன்று (திங்கட்கிழமை) நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று தெலுங்கு தேசம் அறிவித்தது.

எதிர்க்கட்சிகளை சேர்ந்த 50 எம்.பி.க்களின் கையெழுத்தை பெற்று தெலுங்கு தேசம் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நாடாளுமன்ற மக்களவையில் கொண்டு வருகிறது. இதேபோல் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசும் இன்று நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரத் திட்டமிட்டு உள்ளது. இதற்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இடது சாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான நோட்டீஸ் மக்களவை செயலரிடம் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், மத்திய அரசுக்கு எதிராக இன்று  நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் ஆதரவு இல்லை என்று சிவசேனா தெரிவித்துள்ளது. மேலும், மத்திய அரசுக்கும் ஆதரவு இல்லை என்று தெரிவித்துள்ள சிவசேனா, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் சிவசேனா கட்சி ஒதுங்கியிருக்கும் என்று தெரிவித்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.