17/04/2018

சித்தர் ஆவது எப்படி ? - 4...


வெளிச்சத்தின் விரையத்தில் மனிதன்...

கனல் ஒன்றே உயிர் ஆற்றல்.. ஆன்மா முழுமைக்கும் தூய கனலாக உள்ளது...

இந்த கனல் பூமியில் படும் பொழுது பஞ்சபூதங்கள் கனலை பெறுவதில் உள்ள வேறு பாட்டினால் பல்வேறு உயிர் இனங்கள் தோன்றுகின்றன..

மனித தேகத்தில் மட்டும் காற்று ஆகாயம் என்ற பூதங்கள் கனலை அதிகமாக பெற்று இருக்கின்றன...

மனம் என்ற பூதம் மிக அதிக பட்ச கனலை பெற்று இருக்கின்றது...

அப்படி கனலை பெற்ற மனம், வலுவான பூதமான சித்தத்திற்கு அடிமையாகி உள்ளதால், மனம் சித்தம் செல்லும் வழிகளில் மட்டுமே அதிக நாட்டம் கொள்கிறது...

மனம் சித்தம் செல்லும் வழிகளில் மட்டுமே அதிக நாட்டம் கொள்கிறது...

இதுதான் மனிதனின் மிக பெரிய ஆன்மீக தடை...

சித்தத்தின் தன்மையே மனதை வசப்படுத்துவது தான்..

சித்தம் என்ற நீர் பூதம் நீரின் தன்மை போல் ஓடி ஓடி பள்ளத்தில் தங்க முயலுவது போல் மனம் என்ற பாத்திரத்திரமான பள்ளத்தை நோக்கியே சித்தம் போய் கொண்டு இருக்கும்..

சித்தத்திற்கு மனதை விட்டால் வேறு புகலிடம் இல்லை..

அது மேல் நோக்கி நகர முடியாததால் கீழ் நோக்கி செல்லும் பொழுது, மண்ணின் புவி ஈர்ப்பு விசைக்கு உட்பட்டே நகர தொடங்குவதால், மனதை சதா காலமும் சித்தம் மண் என்ற பூதத்தின் பக்கமே இழுத்து செல்லும்...

மண் அம்சமான ஆணவ குணம் சதா காலமும் ஒடுக்கத்தை நோக்கியே நோக்கியே போய் கொண்டு இருக்கும்...

அதனால் தான் மனம் முழுமைக்கும் சித்தத்தின் எண்ண ஆதிக்கமாகவே இருக்கும்..

குறுகிய வட்டமாகிய ஆணவத்தில் சதா காலமும் மனம் சிக்குண்டதாகவே இருக்கும்..

பழைய பதிவுகளான சித்தத்தின் எண்ண ஆதிக்கம் பழைய வாழ்க்கையே வாழ தொடங்குவதால் அது பழக்கமாகவும், குணமாகவும், இயல்பாகவும் மனதை தன் கட்டுப் பாட்டில் வைத்துக் கொண்டு புதிய நிகழ் காலத்தில் மனதை ஈடு பட விடாது..

இறந்த கால வாழ்க்கையை வாழும் மனிதன் செத்தாரை போன்று இருக்கின்றான்..

நிகழ் காலத்தில் இந்த உலகில் உள்ள புதுமைகளில், மனம் மலர இந்த சித்தம் விடுவதில்லை...

நிகழ் காலத்தின் ஈடுபாட்டையே ' சி ' என்ற உயிர் மெய் எழுத்து குறிக்கிறது...

அதில் வன்மையாக பொருந்தி இணைந்து கொள்வதையே வம் என்ற சொல்..

இறந்த கால எண்ண ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு நிகழ் காலத்தில் இணைவதையே சிவம் என்றனர்..

சிவத்தை கைகொண்டால் சிவன் ஆகலாம்..

சிவன் பெற்ற அத்தனை சக்திகளையும் நிகழ்கால இணைப்பால் பெறலாம் என்பதே உண்மை அறிந்தோரின் சத்திய வாக்கு..

ஆனால் கனலாக அனுபவக்கூடிய சிவம் இன்று மதத்தில் சடங்காக மாறி வெளிச்சமாக விரையமாகி விட்டதே..

சடங்கு என்பதே ச் + அடங்கு என்பதாகும்..

நிகழ் கால இணைப்பு அதாவது சிவ கலப்பு இன்று அடங்கி போய் விட்டதே..

அதை விட மிக பெரிய கொடுமை என்றும் எங்கும் நீக்கமற உள்ள இறைவனையே இன்று இல்லாதது போலும் நாளை தீர்ப்பு நாளில் வருவார் என்று இறைவனையே நிகழ் காலத்திலேயே சவமாக்கி விட்டார்களே...

கனல் ஒளியை போன்றது.. ஒளிக்கும் வெளிச்சத்திற்கும் உள்ள வித்தியாசம் இதுதான்..

தேவையான ஒன்றிலே ஒன்றித்து பயிலுவது ஒளி ஆகும்.. அது தேவையை நிறை வேற்ற ஆற்றலை கொடுத்து தேவையை முடித்து வைக்கும்...

தேவை எது என்று தெரியாமல், குறிக்கோள் அற்று, சும்மா இருக்க முடியாமல், எதையாவது தேடி, வெளியே உள்ள பொருள்களில் ஆற்றலை சிதறி போக செய்து, பின் வாழ்வின் தேவை என்று ஒன்று வரும் போது அதை நிறை வேற்ற ஆற்றலற்று போய் தோல்வி அடைவது வெளிச்சம்...

ஒளி வாழ்வையும் உயர்வையும் கொடுக்கும்.. வெளிச்சமோ தாழ்வையும் பலவீனத்தை கொடுக்கும்..

ஒளி என்பது 'ஒ' (ஒன்றித்தல்) + 'ளி' ( பயிலல் ) ஆகும்..

வெளிச்சம் என்பது வெளி ( வெளியே உள்ள அனைத்தும் ) + எச்சம் ( மலம் விரையம் ) என்பதாகும்...

உணர்வு என்பது ஒளி தன்மை உடையது.. எண்ணம் சிதறு போகும் தன்மையால் வெளிச்சமாக உள்ளது.. மனம் இரண்டாக பிரிந்து இருக்கிறது..

உணர்வு என்ற ஒளியால் மேல் நிலை பூதங்களான காற்று, ஆகாயம் புலப்படுகிறது..

நினைத்தல் என்ற வெளிச்சத்தால் உருவ அமைப்புகளான கீழ் நிலைபூதங்களான நீர் மண் புலப்படுகிறது..

உணர்வால் மனிதன், மேல் நிலையும் நினைத்தலால் மனிதன் கீழ் நிலையும் அடைகிறான்..

இன்றைய மனிதன் நிலை என்ன ?

பூர்வீக ஜென்மங்களின் உணர்வுகளை தாங்கி நிற்கும் வல்லமை உடைய சித்தம் என்ற பூதம், இந்த பிறவியில் காலையில் உண்ட உணவின் சுவையின் உணர்வினை, மதியத்திற்குள் ஏன் இழந்து விடுகிறது ?

கோவிலில் இறைவனை தொழும் போது ஏற்பட்ட பக்தி உணர்வு, கோவில் வாசலை தாண்டும் முன்பே ஏன் காணாமல் போய் விடுகிறது?

அன்பு பாசம் போன்ற உணர்வுகள் குறுகிய கால அளவிலே மறைந்து போக என்ன காரணம்?

முதியோர் இல்லங்களிலும் நடு தெருவிலும் தாய் தந்தையரை அநாதையாக விட்ட மகனின் பாச உணர்வு எப்படி காணாமல் போய் விட்டது ?

வல்லமை வாய்ந்த சித்தம் எதனால் பலவீனம் அடைந்தது ?

பயன்தூய்ப்பில் நிறைவு பெறாமலே மனிதன் மீண்டும் மீண்டும் ஏன் தேடுதலையே தொழிலாக கொண்டுள்ளான் ?

இறைவனே நேரில் காட்சி அளித்தாலும் அவனால் உணர்வில் ஏன் நிறைவு கொள்ள முடியாத நிலையில் உள்ளான்?

சொர்க்கமே கிடைத்தாலும் அதனுடைய அனுபவ உணர்வுகள் விரைவில் தொலைத்து விட்டு சொர்க்கமே கசந்து போகும் நிலை ஏன் அடைகிறான் ?

எந்த சுகத்தையும் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு மேல் அனுபவிக்கும் தகுதியை ஏன் இழக்கிறான்?

இந்த பிரபஞ்சத்தில் எந்த அற்புதம் கிடைத்தாலும் அது மனிதனின் மன நிலையில் விரைவில் அது தன் மகத்துவத்தை ஏன் இழந்து விடுகிறது?

நினைவு பதிவுகளமான கலங்கிய சித்தத்தில் எந்த உணர்வும் நிலைப்பதில்லை.. அது வெளிச்சமாக இருப்பதால் பெற்ற உணர்வை வெளிச்சமாக விரையம் செய்கிறது..

அதுவே காரணம்... அப்படி விரையம் செய்யாமல் தடுத்து, சித்தத்தை கனலால் நிரப்பும் பயிற்சியான கனல் தீட்சை நயன தீட்சை திருவடி தீட்சை என பயிற்சிகளை பயின்றார்கள் நம் சித்தர் பெருமக்கள்..

இந்த மூன்றும் ஒன்றே..

வெளிச்சத்தை எவ்வாறு தடுப்பது, கனலால் உணர்வால் எப்படி நிரப்புவது என்பதை வரும் பகுதிகளில் காணலாம்...

சித்தர் ஆவதில் சிரமம் ஒன்றும் இல்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.