ஓஎன்ஜிசியே வெளியேறு.. அரசால் இருட்டடிப்பு செய்யப்பட்ட, அரசியல்வாதிகளால் ஆதாயம் தேடப்பட்ட, உணர்வுகளால் கட்டப்பட்ட, ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்ட, மக்களால் மறக்கப்பட்ட, மற்றபிரச்சனைகளால் மறைக்கப்பட்ட...
கதிராமங்கலம் மக்களின் சொல்லிமாளாத் துயரப் போராட்டத்தின் தொடர்துக்கநாளில் இன்று 400வது நாளை கடக்கிறது..
நாங்கள் போராடுவது எங்களுக்காக அல்ல, உங்களுக்காக.
கதிராமங்கலத்திற்காக மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்திற்காக.
ஓஎன்ஜிசியே வெளியேறு., மீத்தேன்திட்டத்தை தடைசெய் மட்டுமல்ல எங்கள் கோரிக்கை..
ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடுவதற்காக குரலெழுப்பினோம்..
நியூட்ரினோ திட்டத்தை கைவிடக்கூறி குரலெழுப்பினோம்.
சாகர்மாலா., பாரத்மாலா திட்டங்களுக்கு கண்டனக் குரலெழுப்புகிறோம்.
சேலம்-சென்னை பசுமைவழிச் சாலையை முற்றிலுமாக எதிர்த்து குரலெழுப்புகிறோம்.
தமிழ்நாட்டில் செயல்படுத்தும் செயல்படுத்தப்போகும் ஒவ்வொரு நாசகாரத்திட்டத்தை எதிர்த்தும் தொடர்ந்து குரலெழுப்புவோம்.
எங்களின் குரல்வலையை - அடிமை அரசுமும், அரசகூலிப்படைகளான காவல்துறையும், திரித்துக்கூறி வழக்குகள் சேர்க்கும் உளவுத்துறையும், சில மக்கள் விரோத கட்சி அமைப்புகளும், காசுக்கு விலைபோன சில துரோகிகளும் சேர்ந்து கொண்டு இறுக்கப்பிடித்து நசுக்குகின்றன. வலிகளாலும் வேதனைகளாலும் அவமானங்களாலும் எங்கள் போராட்டம் செதுக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
எத்தனை அவமானங்கள் விமர்சனங்கள் இழப்புகள் என அனுபவித்தாலும் ஒருபோதும் நாங்கள் எங்களின் போராட்டத்தை கைவிடப்போவதாய் இல்லை! எண்ணிக்கை குறைந்தபோதும் எங்கள் உணர்வெழுச்சி குறையவில்லை! உங்களின் ஆதரவை நம்பிக்கையாய் கொண்டே நாங்கள் இன்று 400வது நாளை கடக்கின்றோம். என்றும் உங்கள் ஒத்துழைப்பையும், ஆதரவையும், அரவணைப்பையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும், உங்கள் உரிமைக்கான உரத்த குரல்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.