2018 சூன் 9 - அதிகாலை 4 மணி...
சேலம் மாவட்டம் - குப்பனூருக்கு பரபரப்பாக வந்த காவல்துறை ஊர்திகள், நாராயணன் என்பவரையும், வீராணத்தைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரையும், இராஜா, கந்தசாமி, பழனியப்பன், இரவிச்சந்திரன் ஆகியோரையும் “பயங்கரவாதிகளை” பிடிப்பது போல் வீடு வீடாகச் சென்று சுற்றிவளைத்து கைது செய்து, அம்மாப் பேட்டை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
இதற்கு முன்பாகவே, சீலநாயக்கன் பட்டி - சூரிய கவுண்டர்காடு பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி வீரபாண்டித் தொகுதி இளைஞர் பாசறை இணைச் செயலாளர் மாரிமுத்து, பூலாவரி உழவர் இரவி ஆகியோரை சேலம் அன்னதானப்பட்டி காவல் துறை யினர் கைது செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
இப்படி பயங்கரவாதிகளைப் போல் சேலம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட இவர்கள் செய்த குற்றம் என்ன தெரியுமா?
தங்களுடைய ஒரே வாழ்வாதாரமான வேளாண் விளை நிலங்கள் உட்பட சற்றொப்ப 7,500 ஏக்கர் விளை நிலங்கள் மீதும், 500 ஏக்கர் வனப்பகுதி - ஏழு ஆறுகள் - எட்டு மலைகளைச் சிதைத்து - சேலத்திலிருந்து சென்னைக்கு சற்றொப்ப 10,000 கோடி முதலீட்டில் போடப்படவுள்ள புதிய “பசுமை வழிச் சாலை” திட்டத்தால், தங்களுக்கு பாதிப்பு என ஊடகங்களிடம் பேட்டி அளித்ததுதான், இவர்கள் செய்த ஒரே குற்றம்.
இதற்கு முன்பு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கச் சென்ற நாம் தமிழர் கட்சியினர் 27 பேர் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தி, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். “சேலம் - சென்னை பசுமை வழிச் சாலை”யால் வேளாண் நிலங்கள் பாதிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்ததே இவர்கள் செய்த “குற்றம்”!
ஊடகங்களுக்குப் பேட்டி அளிப்பதும், மனு கொடுப்பதும் கூட “குற்ற” நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டு, போராட்டத்துக்கு மக்களை “தூண்டி விட்டவர்கள்” என்று இவர்களைக் கைது செய்து - சிறையில் அடைத்துள்ளது தமிழகக் காவல்துறை! ஏன் தமிழ்நாடு அரசு, இத்திட்டத்தில் இவ்வளவு தீவிரம் காட்டுகிறது என்பதை அடுத்த சில நாட்களிலேயே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெளிவுப்படுத்தினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 11.06.2018 அன்று பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி “தமிழ் நாட்டின் மேற்கு மாவட்டங்களின் தொழில்துறை வளர்ச்சி - பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கு சேலம் - சென்னை பசுமைவழி விரைவுச்சாலை அவசியம்! எனவேதான், இந்திய அரசிடம் போராடி இத்திட்டத் தைப் பெற்றிருக்கிறோம். எனவே, அத்திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம்!” என்று தெரிவித்தார்.
இந்திய அரசிடம் “போராடி” தமிழ்நாட்டுக்கு “நீட்” விலக்கு வாங்க முடியவில்லை! இந்திய அரசிடம் “போராடி” காவிரி நீரைப் பெற முடியவில்லை! இப்படி இந்திய அரசிடம் தமிழ்நாட்டின் நலன்களுக்காகப் போராடி எதையும் பெற முடியாத எடப்பாடி அரசு, இந்த சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டத்தைப் “போராடி” பெற்றிருக்கிறதாம்! சரி, இத்திட்டத்தால் யாருக்கு என்ன பாதிப்பு? யாருக்கு என்ன இலாபம்? விரிவாகக் காண்போம்.
சென்னையிலிருந்து சேலம் செல்வதற்கு இப் பொழுதே 3 சாலை வழிகளும் 2 தொடர்வண்டிப் பாதைகளும் மக்கள் பயன்பாட்டில் உள்ளன. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம், வாலாஜா பேட்டை, வேலூர், ஆம்பூர், கிருட்டிணகிரி, தருமபுரி வழியாக சற்றொப்ப 360 கி.மீ. பயணத்தில் சேலம் வரலாம். அதேபோல், சென்னை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, ஆத்தூர் வழியாக சற்றொப்ப 350 கி.மீ. பயணித்தும் சேலம் செல்லலாம். இதுதவிர, சென்னையிலிருந்து பூந்தமல்லி, வேலூர், வாலாஜா, திருப்பத்தூர், அரூர் வழியாகவும் சேலம் சென்றடையலாம்! இவையெல்லாம், இப்பொழுதே மக்கள் பயன்பாட்டில் இருக்கும் சாலைகள்! இவை அல்லாமல், இரண்டு தொடர்வண்டிப் பாதைகளும் உள்ளன.
ஆனால், இப்போது புதிதாக “மக்கள் பயன்பாட்டுக்கு” என்ற பெயரில், “சென்னை - சேலம் - எட்டுவழிச் சாலை”த் திட்டம், “பசுமைவழிச் சாலை” என்ற பெயரில் இந்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த 25.02.2018 அன்று, இந்திய அரசின் “பாரத்மாலா” திட்டத்தின் கீழ் சற்றொப்ப 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், இச்சாலைத் திட்டத்தின் அறிவிப்பை இந்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டார்.
இந்த புதிய சாலைத் திட்டம், தற்போது சேலம் - சென்னைக்கு இடையிலுள்ள சற்றொப்ப 350 கி.மீ. பயண தூரத்தை 277.3 கி.மீ. ஆக குறைக்கும் என்றும், இதன் காரணமாக சென்னை - சேலம் பயண நேரத்தில் ஒரு மணி நேரம் மிச்சமாகும் என்றும் இதற்கு சமாதானம் கூறுகிறார்கள். ஒரு மணி நேரம் மிச்சப்படுவதைப் பற்றிப் பேசுபவர்கள், இதன் காரணமாக பல்லாயிரம் ஆண்டுகள் பாதுகாக்கப்பட்டு வந்த வனப்பகுதிகளும், வேளாண் விளை நிலங்களும் அழிக்கப்பட்டு - அடுத்தத் தலை முறையும், ஆயிரக்கணக்கான காட்டுயிர்களும் பாதிக்கப் படுவது குறித்து சிறிதும் சிந்திக்க மறுக்கின்றனர்.
இந்த “பசுமை வழிச் சாலை” என்பது உண்மையில், “பசுமை அழிப்புச் சாலை”யாகும்! காஞ்சிபுரம் மாவட்டத்தில் 59 கி.மீ., திருவண்ணாமலையில் செய்யாறு, வந்தவாசி, போளூர், ஆரணி மற்றும் செங்கம் வரையில் 122 கி.மீ., தருமபுரியில் தீர்த்தமலை, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி என 53 கி.மீ., சேலத்தில் வாழப் பாடியிலிருந்து சேலம் நகரம் வரை 38 கி.மீ. வரை இச் சாலை அமைக்கப்பட உள்ளது. ஆக மொத்தமுள்ள 274 கிலோ மீட்டரில், சற்றொப்ப 250 கி.மீ. நீளம் வேளாண் விளை நிலங்கள் - குடியிருப்புகள் - வனப்பகுதி மலை களில் அமைகிறது இச்சாலை.
இச்சாலைத் திட்டத்திற்கு சற்றொப்ப 5,750 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளன. இதில், ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பனை மரங்கள், 2 இலட்சம் தென்னை மரங்கள், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், வனப்பகுதிகள் அழியவுள்ளன.
சேலம் கஞ்சமலை, திருவண்ணாமலை கவுத்தி வேடியப்பன் மலை, சேத்துப்பட்டு மலை, ஜருகு மலைக் காடுகள், நீப்பத்துத்துறை தீர்த்தமலைக் காடுகள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறுவாஞ்சூர் பாதுகாக்கப் பட்ட வனப்பகுதி, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி நம்பேடு, சாத்தனூர் - பிஞ்சூர், திருவண்ணா மலை சொரகுளத்தூர், போளூர் - அலியாலமங்கலம், செங்கம் - முன்னூர்மங்கலம், ஆனந்தவாடி மற்றும் இராவந்தவாடி, தருமபுரி மாவட்டத்தில் அரூர் முதல் பூவாப்பட்டி மற்றும் விரிவுபடுத்தப்பட்ட பூவாம்பட்டி காடுகள், தீர்த்தமலை நோநாங்கனூர் மற்றும் பள்ளிப்பட்டி விரிவுபடுத்தப்பட்ட காடுகள், சேலம் மாவட்டம் மஞ்சவாடி கணவாய் மற்றும் ஜருகுமலை வனப்பகுதி போன்ற பல இயற்கை வளங்கள், தனது பசுமையை இழக்கவுள்ளன. சேலத்தையொட்டி உள்ள பூலாவரி, நிலவாரப்பட்டி, நாழிக்கல்பட்டி, குப்பனூர், ஆச்சாங்குட்டப்பட்டி ஆகிய கிராமங்களில் பெரும் பாலான வேளாண் நிலங்கள் இத்திட்டத்தால் அழிக்கப் படவுள்ளன.
“சேலம்” என்றாலே சிலருக்கு மாம்பழங்கள் நினைவுக்கு வரும்! இச்சாலைத் திட்டம் செயல்படுத்தப் பட்டால், இனி சேலம் என்றால் புழுதிப் பறக்கும் கண்டெய்னர் லாரிகள் சீறிச் செல்லும் எண்ணூரும், வட சென்னையும்தான் நினைவுக்கு வரும். இது மிகைக் கூற்று அல்ல.
இச்சாலை அமையவுள்ள ஜருகுமலை, வெத்த மலைக்கு இடையில் சேலத்தின் தொன்மையான மாம் பழம் விளையும் பகுதியான வரகம்பாடி உள்ளது. தொன்மையான மாம்பழப் பகுதிகளான ஸ்கந்தாசரம், வாழடி மாந்தோப்பு, போத்துக்குட்டை, எருமம் பாளையம், பனங்காடு, தேன்மலை, உடையபட்டி, வரகம்பாடி, வெள்ளாளகுண்டம், விலாம்பட்டி, கே. பள்ளப்பட்டி, குப்பனூர், ஆச்சாங்கு குட்டப்பட்டி ஆகிய ஊர்களும், மாந்தோப்பு அதிகமுள்ள இதர கிராமங்களிலும் இச்சாலை விரிகிறது.
இந்த மலைகளாலும், காடுகளாலும்தான் தமிழ் நாட்டின் கோடைக் காலங்களின்போது, வெப்ப சலனத்தால் மழை பொழியும் மேகங்கள் உருவாகின்றன. தருமபுரி, வேலூர், கிருட்டிணகிரி, சேலம், திருவண்ணாமலை, காஞ்சி, கடலூர், விழுப்புரம், திருச்சி, அரியலூர், நாகை உள்ளிட்ட பல மாவட்டங்கள் இதனால் மழை பெறுகின்றன. இனி, அது நடக்காது! ஏற்கெனவே, மழைப் பொய்த்ததால் வேளாண்மை அழிந்துபோன வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் இனி உருதெரியாமல் சிதைந்து போக வழி ஏற்படுத்தப்படும்.
ஏற்கெனவே, சேலம் விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக 570 ஏக்கர் வேளாண் நிலங்களை கையகப்படுத்தி வரும் தமிழ்நாடு அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தும்பிப்பாடி, சிக்கனம்பட்டி, பொட்டியபுரம், காமலாபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் போராடி வருகின்றனர். தனது நிலத்தை கையகப்படுத்த வேண்டாம் என சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த ஓமலூர் - பொட்டியபுரம் உழவர் கந்தசாமி என்பவர் அதிர்ச்சியில் மரணமடைந் தார். இந்நிலையில், பசுமை அழிப்புச் சாலைத் திட்டம் சேலம் மாவட்ட உழவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
சேலம் மாவட்டத்தின் சேர்வராயன் மலையில் 53 இலட்சம் டன் பாக்சைட் தாது உள்ளது. சேலம் கஞ்ச மலையில் 7.5 கோடி டன் இரும்பு தாது உள்ளது. அரூர் மலைப் பகுதியில் மாலிப்டினம் தாது கிடைக்கிறது.
திருவண்ணாமலையில் இரும்பு தாது, ஹெமடைட் மற்றும் மேக்னடைட் தாதுக்கள் உள்ளன. இவையெல் லாம், இதுவரை அப்பகுதியில் கண்டறியப்பட்ட இயற்கை வளங்கள்.
இவற்றையெல்லாம் எப்படிக் கொள்ளையடிக்கலாம் என ஜிண்டால், வேதாந்தா, அதானி போன்ற பெரும் பகாசுர நிறுவன முதலைகள் ஆண்டுக்கணக்கில் காத்துக் கிடக்கின்றன. எனவே, இப்பொழுதுள்ள பா.ச.க. பினாமி அரசான எடப்பாடி அரசின்கீழ் இதற்கானத் திட்டம் தீட்டப்படுகிறது என்பதே நமது உறுதியான ஐயம்! சேலம் கஞ்சமலையின் அடிவாரத்தில் உள்ள நெய்க்காரப்பட்டி என்ற கிராமத்தின் வழியாகச் செல்லும் வகையில் தீட்டப்பட்டுள்ள இப்பசுமைவழிச் சாலைத் திட்டம் - சென்னை எண்ணூர் துறைமுகம் வரை நீள்வது, நம் ஐயத்தை உறுதிப்படுத்துகிறது.
இன்னொரு புறத்தில், “சாகர் மாலா” திட்டத்தின்படி தமிழ்நாட்டின் துறைமுகங்கள் வழியாக சேலத்திலுள்ள அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி அளிக்கவும், ஜிண்டால் உருக்காலைக்கு பொருட்கள் ஏற்றுமதி - இறக்குமதி செய்யவும் திட்டங்கள் உள்ளன. அதற்கு, இச்சாலைத் திட்டம் பெரிதும் பயன்படவுள்ளது!
இவ்வாறான பன்னாட்டு முதலாளிகளின் வணிக நலன்களுக்கு மட்டுமின்றி, இந்தச் சாலைத் திட்டப் பணிகளின் ஒப்பந்தங்களின் வழியே எடப்பாடி பழனிச்சாமிக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் தனிப்பட்ட முறையிலேயே “இலாபங்கள்” இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத் திட்டங்களில் சற்றொப்ப 5,000 கோடி ரூபாய்க்கு ஊழல் நடை பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டு, தி.மு.க.வினர் இலஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் மனு அளித்துள்ளனர். அதில், தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் வருமாறு...
ஒட்டன்சத்திரம் - தாராபுரம் - அவிநாசிப்பாளையம் - நான்கு வழிச் சாலை (SH37) அமைக்க ரூபாய் 713.34 கோடிக்கு பதில் ரூபாய் 1,515 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இச்சாலைப் பணிக்கான தொகையை அதிகமாக்கி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மகனின் மைத்துனர் சந்திரகாந்த் இராமலிங்கம் என்பவர் இயக்குநராக உள்ள “இராமலிங்கம் கன்ஸ்ட்ரக்சன்” என்ற தனியார் நிறுவனம் அந்த ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.
நெல்லை - செங்கோட்டை - கொல்லம் நான்கு வழிச் சாலைக்கு (SH 39) ரூ. 407.6 கோடிக்கு பதிலாக ரூ. 720 கோடி என மதிப்பு உயர்த்தப்பட்டு, நெல்லை - செங் கோட்டை சாலைக்கு முதல்வர் எடப்பாடியின் சம்பந்தி பி. சுப்பிரமணியம் நிறுவனமான வெங்கடா சலபதி நிறுவனம் மட்டுமே ஒப்பந்தம் கோரி பெற்றுள்ளது.
இராமநாதபுரம், திருவள்ளூர், விருதுநகர் மாவட்டங்களில் சாலை மேம்பாட்டுத் திட்டத்திற்கு சற்றொப்ப ரூ. 200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதுவும் எடப் பாடியின் சம்பந்தி நிறுவனத்திற்கு மட்டுமே ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது.
சற்றொப்ப 200 கோடி ரூபாய் மதிப்பிலான, மதுரை மாவட்டம் வட்டச் சாலைப் பணியை பாலாஜி டோல் வேஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில், பி. சுப்பிரமணியம், ஓ.பி.எஸ். புகழ் சேகர் ரெட்டி ஆகியோரும் எடப்பாடிக்கு நெருக்கமான நாகராசன் ஆகியோரும் கூட்டாளிகள் - அதாவது “இயக்குநர்கள்”.
சென்னை - வண்டலூர் - வாலாசாபாத் சாலைப் பணி ஒப்பந்தமும் முதல்வர் சம்மந்தி பி. சுப்பிரமணியம் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தங்கள் வழியாக, எடப்பாடி குடும்பத் தினருக்கு சற்றொப்ப 5,000 கோடி ரூபாய்க்கு பலன் கிடைத்துள்ளது என தி.மு.க.வின் புகார் மனு கூறுகிறது. “பாம்பின் கால் பாம்பு அறியும்” என்பது பழமொழி! எனவே, ஏற்கெனவே பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த தி.மு.க. இவற்றையெல்லாம் வெளிப் படுத்தி யுள்ளது.
இதுதவிர, சாலை போடுவதற்கு முகாமையான பொருளான தாரிலும் ஊழல் நடந்து வருகிறது. கடந்த 2014ஆம் ஆண்டுதான், தாரின் விலை டன்னுக்கு ரூபாய் 41,360 என்ற உச்ச நிலையை அடைந்தது. அதன்பிறகு, 2015 மார்ச் மாதத்தில் ஒரு டன் தாரின் விலை ரூபாய் 30,260 ஆகவும், 2016இல் அது ரூபாய் 23,146 ஆகவும் குறைந்து விட்டது. ஆனால், இப்போதுவரை 2014ஆம் ஆண்டு விலையை அடிப்படையாகக் கொண்டே புதிய ஒப்பந்தங்கள் வழங்கப்படுகின்றன. இதன் வழியாகவும், எடப்பாடி குடும்பத்தினருக்கு சில ஆயிரம் கோடி இலாபம்! இதுகுறித்து, நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) விசாரணை நடத்தக் கோரும் பொதுநல வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீண்ட நாட் களாக உறங்கிக் கிடக்கிறது.
இப்படி “திறமை”யாக ஊழல் செய்வதால்தான், 2011ஆம் ஆண்டிலிருந்து நெடுஞ்சாலைத் துறை எடப் பாடி பழனிச்சாமியிடமே இருக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது.
ஒட்டன்சத்திரம் சாலைப் பணி ஒப்படைக்கப்பட்ட “இராமலிங்கம் கன்ஸ்ட்ரக்சன்” நிறுவனத்தின் உரிமை யாளரும், எடப்பாடியின் உறவினருமான சந்திரகாந்த இராமலிங்கம், கடந்த 2016 திசம்பரில், 5.5 கோடி ரூபாய்க்கு புதிய 2000 ரூபாய் மாற்றிய வழக்கில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு, ஒரு ஆண்டுக்கும் மேலாக பெங்களூரு பரப்பன அக்கிரகார சிறையில் அடைக்கப்பட்டதும் ஒரு சோக வரலாறு..
இப்படி, பல சாலைத் திட்டங்களில் பல ஆயிரம் கோடி ரூபாய்களை சுருட்டிய எடப்பாடி குடும்பத் தினருக்கு, “சேலம் - சென்னை சாலை”த் திட்டம் ஒரு “வரப்பிரசாதம்” இல்லையா? இன்னொருபுறத்தில், எடப்பாடி குடும்பத்தினரின் இந்த “ஊழல்”களை யெல்லாம் அனுமதித்து, அவரை மிரட்டிப் பணிய வைக்கவும் இதை பா.ச.க. பயன்படுத்திக் கொள்ளும்.
இத்திட்டத்தால் பெருமளவு பாதிக்கப்படும் மக்கள் பாதிக்கப்படும் நிலையில், தமிழ்நாடு எதிர்கட்சித் தலை வரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் மக்களுடன் நின்று போராடியிருக்க வேண்டும். ஆனால், அவரோ நாட்டின் வளர்ச்சிக்கு இது போன்ற திட்டங்கள் தேவை என்பதால் இதனை தி.மு.க. முழுமனதோடு வரவேற்கிறது என்றும், மக்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறித்து மக்களிடம் கேட்டு அதன்படி முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.
அதாவது, மக்களிடம் கருத்து கேட்டு செயல்படுத்த வேண்டும் என்கிறார். எனவே, தமிழ்நாடு அரசு பல இடங் களில் கண் துடைப்புக் கருத்துக்கேட்புக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. கருத்துக் கேட்புக் கூட்டங்களை கமுக்கமாக நடத்தி, அதில் அ.தி.மு.க.வினரை பங்கேற்க வைத்து “வேலையை” முடிக்கிறது.
ஆக, “நாட்டின் வளர்ச்சி” என்ற பெயரில் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் மக்கள் வாழ்வாதாரங்கள் பறிபோவது குறித்து கவலை கொள்ளாது! உண்மையான அக்கறை யாளர்கள்தான் கவலை கொள்ள வேண்டும்!
தற்போது இத்திட்டத்திற்காக, சேலம் எருமப் பாளையம், ஜருகுமலை, சன்னியாசிகுண்டு, நிலவாரப் பட்டி, பனமரத்துப்பட்டி, கஞ்சமலை, அரியானூர் உள்ளிட்ட பல பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணி யில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் நில அளவீட்டுப் பணிகள் காவல்துறையினர் பாதுகாப்போடு நடைபெற்று வருகிறது.
இப்படி மக்களை அச்சுறுத்தி, அவர்தம் வாழ்வாதாரங்களை அழித்து உருவாக்கப்படும் இந்தச் சாலையில் மக்கள் எளிதாகப் பயணம் செய்ய முடியுமா? முடியாது! இந்த “பசுமைவழிச் சாலையின்” ஒவ்வொரு 33.75 கி.மீ. தொலைவுக்கும் தனியார் நிறுவனங்களின் அடியாட் களால் நடத்தப்படும் சுங்க வளாகம் இருக்கும். அதாவது ஒவ்வொரு 33.75 கி.மீ. தூரத்திற்கும் பணம் செலுத்தித் தான் பயணம் செய்ய முடியும்! ஒருமுறை சேலத்திலிருந்து சென்னை செல்ல சற்றொப்ப 600 ரூபாயை சுங்கத் தொகையாகக் கொண்டுதான் பயணிக்க முடியும்!
உண்மையில், மக்கள் போக்குவரத்துக்காக இச் சாலைத் திட்டம் அமைக்கப்படவில்லை. ஏனெனில், ஏற்கெனவே மக்கள் பயன்பாட்டில் உள்ள சாலைகளை விரிவாக்கம் செய்தாலே, மக்களுக்கு அது போதுமானது! ஆனால், பன்னாட்டு நிறுவனங்களின் சரக்குப் போக்கு வரத்திற்காகவும், மண்ணையும் வாழ்வாதாரத்தையும் அழித்தொழித்து இயற்கை வளங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவுமே இத்திட்டத்தை இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் கொண்டு வருகிறது.
“வளர்ச்சி” என்ற பெயரில், மலைகளையும், வேளாண் நிலங்களையும் அழித்துவிட்டு, பன்னாட்டு நிறுவனங்களின் கூலிகளாகவும், அதன் குப்பைகளைப் பொறுக்கும் அகதிகளாகவும் நாம் மாற்றப்படப் போகிறோமா? கண்ணை விற்று சித்திரம் வாங்குவதா?
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.