தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 என்று சொல்லி, கணக்கை முடித்துக்கொள்ளப் பார்க்கிறது காவல்துறை. ஆனால், பலியானவர்களின் எண்ணிக்கை 30-க்கும் அதிகமாக இருக்கும். அதை, போலீஸார் மறைக்கிறார்கள்” என்று பகீர் கிளப்புகிறார்கள் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர்கள்.
மூத்த வழக்கறிஞர்களின் உதவியுடன் கிராமம் தோறும் சென்று காணாமல் போனவர்களின் பட்டியலைச் சேகரித்து வருகிறார் நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் வள்ளிநாயகம். அவரைச் சந்தித்தோம்.
தூத்துக்குடியில் மக்களின் போராட்டம், வன்முறையாக மாறியது எப்படி?
அந்த வன்முறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது. மாதா கோயில் முன்னிருந்து பேரணி தொடங்கியது. வரும் வழியில் எந்த இடத்திலும் வன்முறை இல்லை. சுமார் 8 கி.மீ தூரம் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் நடந்தே வந்தனர். சிலரை மட்டுமே ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் போலீஸ் அனுமதித்தது. அங்கு அவர்கள் நுழைந்தபோதே, உள்ளிருந்து கரும்புகை வந்துவிட்டது. ஏற்கெனவே அங்கிருந்த போலீஸார், வாகனங்களுக்குத் தீ வைத்துள்ளனர். உள்ளே சென்ற மக்கள் வெளியே ஓடிவந்தபோது, போலீஸார் அவர்கள்மீது தடியடி நடத்தினர். அப்போது, தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அந்தச் சூழலை எதிர்பார்த்திருந்த போலீஸார், முன்னெச்சரிக்கையின்றி மக்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டனர்.
வன்முறையில் மக்கள் ஈடுபட்டதால், துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டியதாயிற்று என்கிறதே அரசு தரப்பு?
அதற்கான ஆதாரங்களைக் காட்டட்டும். பேரணி சென்ற வழியில் இருந்த சி.சி.டி.வி கேமராக்கள் வேலை செய்யவில்லை என போலீஸார் சொல்கிறார்கள். ஆட்சியர் அலுவலக கேமராக்களும் வேலை செய்யவில்லை என்றார்கள். இப்போது எடிட் செய்யப்பட்ட சில காட்சிகளை மட்டுமே வெளியிட்டுள்ளார்கள். கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் சென்ற சில போராட்டக்காரர்களும் உடனே வெளியே விரட்டி அடிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்த வாகனங்கள் எப்படி எரிக்கப்பட்டன? எரித்தது யார்? போலீஸாரே எல்லாவற்றையும் செய்துவிட்டு மக்கள்மீது பழிபோடுகிறார்கள். போலீஸார் நிதானமாக, சிலரை மட்டுமே குறிபார்த்துச் சுட்டுள்ளனர். அது தெரிந்து விடாமல் இருக்க, அப்பாவிகளையும் சுட்டுக் கொன்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் எல்லோருக்குமே இடுப்புக்கு மேலே குண்டு பாய்ந்துள்ளது. இடுப்புக்குக் கீழே காயமடைந்தவர்கள் எல்லோருமே இரும்புக்கம்பியால் தாக்கப்பட்டுள்ளனர். அதாவது, அடித்துக் கொல்லப் பட்டுள்ளனர்.
தூத்துக்குடி ஏ.எஸ்.பி-யான செல்வ நாகரத்தினம், கடந்த பிப்ரவரி 20-ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டுப் பேரணியின்போது, முன்வரிசையில் சென்ற சிறுவர்களைத் தாக்கினார். அதனால், கூட்டத்தினர் கல்வீசியதில் ஏ.எஸ்.பி தலைதெறிக்க ஓடினார். அந்த அவமானம் அவருக்குள் இருந்துள்ளது. அதனால்தான், திருச்சிக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்ட போதிலும், அங்கு சென்று பணியை ஏற்காமல் இந்தப் போராட்டம் வரை அவர் காத்திருந் துள்ளார். செல்வ நாகரத்தினமும் கூட்டத்தினரை நோக்கிச் சரமாரியாகக் கைத்துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். அத்துடன், கலவரம் நடந்த சில மணி நேரத்துக்குப் பின்னர், திட்டமிட்டே திரேஸ்புரம் சென்று ஜான்சி என்பவரை அருகிலிருந்து சுட்டிருக்கிறார். அத்துடன், அண்ணாநகரில் கந்தையா என்பவரைச் சுட்டுள்ளார். கைது செய்யப்பட்ட மக்கள் அணிந்திருந்த செயின், தாலி, மோதிரம் போன்றவற்றையும் செல்போன்களையும் போலீஸார் பிடுங்கியுள்ளனர். இதுபோல ஏராளமான அராஜங்களை போலீஸார் நிகழ்த்தியுள்ளனர்.
துப்பாக்கிச்சூடு உட்பட போலீஸ் தாக்குதலில் பலியானவர்கள் எத்தனை பேர்?
13 பேர் மட்டுமே துப்பாக்கிச்சூட்டில் பலியானதாக போலீஸ் சொல்கிறது. அது, உண்மையல்ல. பல உடல்களை ரகசியமாக வாங்கிச்செல்லுமாறு உறவினர்கள் நிர்பந்திக்கப் படுகின்றனர். மே 22-ம் தேதி துப்பாக்கிச்சூடு நடந்த நிலையில், மறுநாள் இரவு வரையிலும் 23 உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டன. மே 24-ம் தேதி மேலும் இரு உடல்களைக் கொண்டுவந்துள்ளனர். கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஐந்து பேர் 25-ம் தேதி இறந்ததாகத் தகவல் கிடைத்துள்ளது. அதனால், பலியானவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். அத்துடன், நெல்லை அரசு மருத்துவ மனையிலும் சிலரின் உடல்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. இறந்தவர்கள் பற்றிய தகவல்களை அரசுத் தரப்பில் தெரிவிக் காமல் மறைப்பதால், நாங்களே கிராமம்தோறும் சென்று கணக்கெடுப்பு நடத்திவருகிறோம். இதுவரை 20 பேருக்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்று தெரியவந்துள்ளது. போராட்டத்தின்போது பக்கத்துக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் நிறைய வந்திருப்பார்கள். அவர்கள் பற்றிய கணக்குகளைச் சேகரிப்பதில் சிக்கல் உள்ளது. இது குறித்த உண்மையான விவரங்களை அரசு வெளியிட வேண்டும். அத்துடன், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.