அதிமுக அரசின் இந்தச் செயல், ஒட்டுமொத்த தமிழக மக்களின் வேலைவாய்ப்புக்கும் சமூக நீதிக்கும் வைக்கின்ற வேட்டு.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்..
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), தான் நடத்திவந்த அரசுத் தேர்வுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது.
அதோடு, அந்தத் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தவும் முடிவு செய்துள்ளது.
அதிமுக அரசின் இந்த முடிவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.
ஏற்கனவே தமிழ்நாடு அரசுப் பணிகளில் வெளிமாநிலத்தவர் மட்டுமின்றி வெளிநாட்டவரையும் புகுத்தும் வேலையை எடப்பாடி பழனிசாமி அரசு செய்தது. அதனால் தமிழ்நாடு அரசுப் பணிகளில் தமிழக மக்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருவதைப் பார்க்கிறோம். இப்போது டிஎன்பிஎஸ்சி தேர்வை நடத்தும் பொறுப்பையே தனியாரிடம் ஒப்படைக்கும்போது, ஆதாய நோக்கில் தனியார் பணம் பெற்றுக்கொண்டு வெளியாட்களையே வேலையில் அமர்த்துவர். இதனால் ஒட்டுமொத்த தமிழக மக்களின் வேலைவாய்ப்பும் பறிபோகும்; இடஒதுக்கீட்டு முறை அடிபட்டு சமூக நீதியும் மறுக்கப்படும்.
இத்தகைய நிலைமை ஏற்பட வேண்டும் என்பதுதான் பாஜக மற்றும் மத்திய பாஜக மோடி அரசின் எண்ணம்; அதனை செயல்படுத்தும் விதமாகவே இந்த முடிவை அதிமுக அரசு எடுத்துள்ளதாகக் குற்றம் சாட்டுகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
சட்டமன்றப் பெரும்பான்மை இல்லாமல் சட்டத்துக்குப் புறம்பாக பதவியில் இருந்துவரும் பழனிசாமி தலையிலான அதிமுக அரசு நீடிக்கிறது என்றால் அது மத்திய பாஜக மோடி அரசின் தயவால்தான்; அதனால் மோடியின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யாமல் எப்படி?
தமிழக அரசின் நிர்வாகப் பணிகளான மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் (டிஎஸ்பி), வணிக வரித்துறை உதவி ஆணையர், மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அலுவலர் உள்ளிட்ட குரூப் 1 பதவிகள் மற்றும் குரூப் 2, குரூப் 4, கிராம நிர்வாக அலுவலர் என பல்வேறு பணிகளுக்கான தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்துகிறது.
முன்பு தேர்வுக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டுவந்தது. அந்த முறையை மாற்றி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை கொண்டுவரப்பட்டது.
இப்போது ஓஎம்ஆர் தாளில் கொள்குறி இடுவது (டிக் அடிக்கும் முறை) என்கின்ற முறையில் தேர்வை எழுதுகின்றனர்.
இதனை மாற்றி, எழுத்துத் தேர்வை கணினி மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இப்படி இந்த டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்தும் பொறுப்பை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கணினி மூலம் தேர்வுகளை நடத்த தனியாரிடம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தபுள்ளியை ஆகஸ்ட் 2ந் தேதி மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். டெண்டர் குறித்த விவரங்களை www.tenders.tn.gov.in, www.tnpsc.gov.inல் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதில் கிராமப்புற மாணவர்களுக்குத்தான் மிகுந்த பாதிப்பு. கிராமங்களில் கணினிப் பயன்பாடு முழு அளவில் இல்லாதது முதன்மைக் காரணம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வை நடத்தும் பொறுப்பு தனியாரிடம் ஒப்படைப்பு என்பது தமிழக மக்களுக்கு எதிரான உள்நோக்கம் கொண்ட நடவடிக்கையே.
அதிமுக அரசின் இந்தச் செயல், ஒட்டுமொத்த தமிழக மக்களின் வேலைவாய்ப்புக்கும் சமூக நீதிக்கும் வைக்கின்ற வேட்டுதான்.
இதனை வன்மையாகக் கண்டிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, உடனடியாக இந்த நடவடிக்கையைத் திரும்பப்பெறுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.