17/09/2018

திருவோடு...


நம்மூரில் சாமியார்கள் கைகளில் திருவோடு வைத்திருப்பதை பார்த்திருப்பீர்கள், அதில் அவர்கள் யாசகம் பெற்று உயிர் வாழ்வார்கள். இந்த திருவோடு ஒரு மரத்தின் விதை என்றால் நம்ப முடி கிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். ஏனென்றால், அதுதான் உண்மை.

இந்த திருவோடு உலகத்திலேயே மிகப் பெரிய விதையான கடல் தேங்காயின் ஓடு. கடல் தேங்காய்க்கு நிறைய பெயர்கள் உண்டு. திருவோட்டுக்காய், இரட்டைத் தேங்காய், கடல் பனை, மாலத்தீவுத் தேங்காய் என்று. இதன் விதைகளை பாதியாக அறுத்து சுத்தம் செய்து திருவோடாக மாற்றுகிறார்கள்.

திருவோட்டுக்காய் பார்ப்பதற்கு பெரிய சைஸ் தேங்காய் போலவே இருக்கும். மரமோ பனை மரம் போல இருக்கும். இதன் பிறப்பிடம் ‘சிசெல்ஸ்‘ தீவுகள். இவை எல்லா இடங்களிலும் வளர்வது இல்லை. இந்தியப் பெருங்கடலில் பிரஸ்லின் என்ற தீவில்தான் அதிகமாக வளர்கிறது.

இதிலும் பனை மரத்தை போலவே ஆணும், பெண்ணும் உண்டு. ஆண் மரங்கள் 6 அடி நீளம் கொண்ட பூக்களை மலர்விக்கின்றன. பெண் மரங்கள் முளைக்கத் தொடங்கி 100 வருடங்கள் கழித்தே பூக்கத் தொடங்குகின்றன. பூ மலர்ந்து காயாக மாறி முற்றுவதற்கு 10 வருடங்கள் ஆகும்.

காய் பெரிய தேங்காய் மாதிரி இருக்கும். நார் அடர்த்தியாக இருக்கும். ஓட்டுக்குள் உள்ள கனிப் பகுதி முதலில் பனை நுங்கு போல் இருக்கும். முற்றிய பின் தேங்காய் போல சுவைக்கும். முற்றிய காய் உதிர்ந்து கடலில் மிதந்து கரையில் ஒதுங்கும்.

மாலத்தீவில் ஏகப்பட்ட காய்கள் கரை
ஒதுங்குகின்றன. கடல் நீரோட்டத்தின் மூலமே விதை பரவுகிறது.
விதை முளைக்கத் தொடங்கி முதல் இலை தோன்றுவதற்கு மூன்று ஆண்டுகள் ஆகின்றன. 90 அடி உயரம் வளர்கிறது. இதன் சுற்றளவு 12 அடி. இலைகள் விசிறி வடிவில் பனை இலை மாதிரியே இருக்கும். ஆனால், ஒரு இலை 21 அடி நீளமும், 12 அடி அகலமும் கொண்டதாக இருக்கும்.

இதன் விதை ஒன்றின் எடை 7 கிலோ முதல் 23 கிலோ வரை இருக்கும். இந்த விதை தானாக முளைத்தால்தான் உண்டு. தோட்டங்களில் முளைக்க வைக்க எவ்வளவோ முயன்றார்கள்.

ஒன்று கூட முளைக்க வில்லை. அப்படியே தப்பி தவறி முளைத்தாலும் வெகு சீக்கிரமே அழிந்துவிடும்.

திருவோடு இத்தனை சிறப்பு பெற்றது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.