காலண்டர் எனும் சொல்லுக்கு 'நாட்காட்டி' எனும் சொல்லை முதன்முதலில் பயன் படுத்தியவரும், தமிழ்மொழி எண்களை தமது (விவேகானந்தா) நாட்காட்டியில் வெளியிட்டவருமான 'அறநெறியண்ணல்' கி.பழனியப்பனார் அவர்களை இன்றைய தமிழ்ச்சமூகம் அறியாமலிருப்பது மிகுந்த வேதனைக்குரியது. இவர் வேறு யாருமல்ல, ஈழத்தமிழர் விடுதலைக்காக அயராது பாடுபட்டு வரும் பழ.நெடுமாறன் அவர்களது தந்தையார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்மொழியின் மீதும் சைவநெறியின் மீதும் தீராப்பற்றுக் கொண்ட கி.பழனியப்பனாரின் வாழ்க்கை வரலாற்றை இனி அறிந்து கொள்வோம்.
திருநெல்வேலி மாவட்டம் கீழ்நத்தம் என்ற சிற்றூரில் கிருட்டிண பிள்ளை -உமைய பார்வதி இணையரின் ஒரே மகனாக 20.11.1908ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு பழனியப்பன் என்ற பெயரைச் சூட்டி பெற்றோர் மகிழ்ந்தனர். இவரின் பெற்றோர் தொழில் நிமித்தமாக மதுரைக்கு இடம் பெயர்ந்தனர். அப்போது இளம் வயதில் தொடக்கக் கல்வியை மதுரை மேலமாசி வீதி திண்ணைப் பள்ளியிலும், அதன் பிறகு சேதுபதி உயர்நிலைப் பள்ளியிலும், ஐக்கிய கிறித்துவ மேல்நிலைப் பள்ளியிலும் படிப்பைத் தொடர்ந்து படித்தார். பின்னர் உயர் கல்வியை பழனியப்பன் திருச்சி தூய சூசையப்பர் கல்லுரியில் முடித்தார்.
1930ஆம் ஆண்டு பிரமு அம்மையாரை வாழ்விணையராக ஏற்றுக்கொண்டார். இவர்களுக்கு மொத்தம் ஆறு குழந்தைகள் பிறந்தனர். ஆண் குழந்தைகளுக்கு பழ.நெடுமாறன், ஆறுமுக வேலு, மாரிமுத்து, கோமதி நாயகம் என்றும், பெண் குழந்தைகளுக்கு உமைய பார்வதி, நாகரத்தினம் என்றும் பெயரிட்டனர்.
இளம் வயது முதலே அண்ணல் தமிழ்த் தொண்டில் வேட்கை கொண்டு விளங்கியதால், இவரோடு உரையாடி மகிழ்ந்திட இல்லந்தேடி பல தமிழறிஞர் வரத் தொடங்கினர். அவர்களை கனிவோடு வரவேற்று சளைக்காமல் விருந்தோம்பல் அளிப்பதில் பிரமு அம்மையார் பழனியப்பனாரையும் விஞ்சி நின்றார்.
எப்போதும் தமிழறிஞர் குழாம் இல்லம் நிறைந்து விளங்கியதால் தமிழர் அறம் போற்றும் திருக்குறள் தந்த திருவள்ளுவரின் பெயரால் கழகம் தொடங்கிட அறநெறியண்ணல் விருப்பம் கொண்டார். இவரின் முயற்சிக்கு தமிழவேள் பி.டி.இராசன், நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆகியோர் உறுதுணையாக நின்றனர்.
அதன்படி 'திருக்குறள் அட்டாவதானி' திரு. தி.ப.சுப்பிரமணிய தாசு முன்னிலையில் மதுரைத் திருவள்ளுவர் கழகத்தை 1941இல் தொடங்கினார். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள வடக்காடி வீதியில் இந்தக் கழகம் செயல்படத் தொடங்கியது. அங்கு நாள்தோறும் திருக்குறள் சொற்பொழிவுகள் பல தலை சிறந்த தமிழறிஞர்களால் நிகழ்த்தப்பட்டது.
மறைமலையடிகள் தலைமையில் கூடி திருவள்ளுவராண்டு முறையை தமிழறிஞர்கள் அறிவித்த தை நடைமுறைப்படுத்தவும், தைத் திங்கள் இரண்டாம் நாளை திருவள்ளுவர் திருநாளாக கொண்டாடும்படியும், திருவள்ளுவர் கழகத்தில் முதன்முதலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சி.இராசகோபாலச்சாரியார் எழுதிய 'வள்ளுவர் வாசகம்', சாம்பசிவனார் எழுதிய 'தமிழவேள் உமா மகேசுவரனார்' ஆகிய நூல்கள் இங்கு தான் வெளியிடப்பட்டது.
1942இல் இயல், இசை, நாடகம் ஆகியவற்றை சிறப்பிக்கும் வகையில் முத்தமிழ் மாநாடு பழனியப்பனார் அவர்களால் மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. கடல் கடந்து வாழும் தமிழர்கள் ஏராளமானோர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். தமிழ்க்கடல் மறைமலையடிகள் தோற்றுவித்த தனித் தமிழியக்கத்திற்கு வலுசேர்க்கும் வகையில் பல தீர்மானங்கள் இயற்றப்பட்டன. அது வருமாறு:
1. தமிழர்கள் தங்கள் பெயர்களுக்கு முன்னால் ஸ்ரீ என்ற வட எழுத்தை பயன் படுத்தாமல் திரு எனும் தமிழ்ச் சொல்லை பயன்படுத்த வேண்டும்.
2. உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் தங்களின் பொதுமறையாக திருக்குறளை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
3. தமிழ்நாட்டின் ஆட்சிமொழியாக தமிழ் விளங்க வேண்டும்.
4. சென்னை, அண்ணாமலைப் பல்கலைக் கழகங்கள் அளித்து வரும் 'வித்துவான்', 'சங்கீத பூஷணம்' என்னும் வடமொழிப் பட்டங்களை மாற்றி முறையே 'புலவர்', 'இசைச் செல்வர்' என்று தமிழில் வழங்கிட வேண்டும்.
திருவள்ளுவர் கழகத்திற்கு அடுத்த படியாக பாண்டித்துரை தேவர் உருவாக்கிய மதுரைத் தமிழ்ச்சங்கத்திற்கு அறநெறியண்ணல் செய்த தொண்டூழியம் அளவிடற்கரியவை . தமிழ்ச்சங்கத்தின் செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் 1956இல் தமிழ்ச்சங்கத்தின் பொன்விழாவை சிறப்புற நடத்தினார். இதன் காரணமாக 'சங்கம் வளர்த்த துங்கன்' என்று போற்றப்பட்டார். இவர் வரைந்த 50 தமிழ்ப் புலவர்களின் ஓவியங்கள் தமிழ்ச்சங்கத்தை மென்மேலும் மெருகூட்டின.
பண்டையத் தமிழிலக்கியமான திருமுருகாற்றுப் படையில் குறிப்பிடப்படும் பழமுதிர்ச்சோலைப் பகுதியானது அழகர் கோயில் மலையில் இருப்பதை அன்றைக்கு பல தமிழர்கள் அறிந்திருக்க வில்லை. அதனை அறியச் செய்திடும் வகையில் "பழமுதிர்ச்சோலை முருகன்" கோவிலை புதிதாக நிர்மாணம் செய்த பெருமை அண்ணலையே சாரும்.
கோயில்களில் வடமொழியில் அர்ச்சனை செய்ய வேண்டுமென சங்கராச்சாரியார் கூறிய போது அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததோடு, தமிழ் தெரிந்த இறைவன் எந்த கோயிலில் இருக்கிறானோ அந்த இறைவனை மட்டுமே என் கை தொழும் என்றும் பதிலுரைத்தார்.
1982இல் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களை மதுரையில் தங்கியிருக்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. அப்போது அண்ணலின் வீட்டில் தான் பிரபாகரன் தங்கினார். பிரபாகரன் மீது அண்ணலுக்கு எப்போதும் தனித்த அன்பு உண்டு. பிரபாகரனும் அண்ணலை 'தாத்தா' வென்றே உரிமையோடு அழைத்து மகிழ்ந்தார்.
அண்ணல் பன்முகத்தன்மை கொண்டவர். கவிஞர், ஓவியர் மட்டுமல்ல, சிறந்த எழுத்தாளாரும் ஆவார். 17 நூல்களை இயற்றியுள்ளார். அதில் மதுரை வரலாற்றை விளக்கும் 'கோயில் மாநகர்' நூல் மிகச் சிறப்பானது. சங்ககால பாண்டியர் முதல் ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் வரை அதில் விவரிக்கப்பட்டுள்ளது.
குன்றக்குடி அடிகளார் அவர்களால் 'அறநெறி அண்ணல்' எனும் பட்டம் பெற்ற பழனியப்பனார் 26.2.1998இல் தாம் போற்றி வணங்கிய பாண்டிய மண்ணிலே தனது இன்னுயிரை நீத்தார்.
நன்றி: பி.வரதராசன் தொகுத்த "கி.பழனியப்பனார் நூற்றாண்டு விழா- பன்மணித்திறள்' நூல்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.