06/01/2019

இந்தியா என்ற நாடு 60+ ஆண்டுகளாகத் தான் இருக்கிறது...


அதற்குப் பல்லாயிரம் ஆண்டுகள் முன்னரும் தமிழர்கள் இந்தியத் துணைக் கண்டம் முழுக்கவும் கடல் கடந்து உலகம் முழுக்கவும் வணிகத் தொடர்பில் இருந்திருக்கிறார்கள்.

அப்போது எல்லாம் வணிகம் செய்ய நம் நாடு முழுக்க அயல் மொழியை கற்பதற்கான தேவை எழவில்லை.

ஏன் எனில், அப்போது நாம் மரபறிவு மூலம் விளைந்த பொருட்களை விற்றோம். இப்போது நம் உழைப்பை விற்று கூலிகளாக இருக்கிறோம். இது தான் வேறுபாடு...

எனவே,

ஆங்கிலத்துக்கு மாற்று இந்தி இல்லை. அந்தந்த மக்களின் தாய்மொழி தான் மாற்று. இது தான் நிலையான தீர்வாக இருக்கும்..

இன்று பொருளாதாரத்தில் முன்னணியில் இருக்கும் சீனர்கள், ஐரோப்பியர்கள், கொரியர்கள், சப்பானியர்கள் என்று யாராக இருந்தாலும் தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை அனைத்தும் தாய்மொழியில் தான்.

வணிகத்துக்காக ஒரு சிலர் ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாக கல்லூரிப் படிப்புக்குப் பிறகு கூட கற்கிறார்களே தவிர, ஆங்கிலத்தை வாழ்க்கை முழுக்க பிடித்துத் தொங்குவதில்லை.

அவர்களுடன் வணிகம் செய்ய வரும் வெளிநாட்டவர் அவர்கள் மொழியில் பேசக்கூடிய மொழிபெயர்ப்பாளர்களையும் மொழிபெயர்ப்பு நுட்பங்களையும் வைத்து உரையாடுகிறார்களே தவிர, ஆங்கிலம் தெரியவில்லை என்ற காரணத்தால் அவர்களைப் புறக்கணித்துச் செல்வதில்லை. புறக்கணிக்கவும் முடியாது. சுருக்கமாக, உங்கள் திறமையும் உங்கள் பொருளாதார பலமும் பேச வேண்டும். மாறாக, நீங்கள் அவர்கள் மொழியைப் பேசினால் தான் வேலைவாய்ப்பு என்று இறங்கும் போது, நீங்கள் விற்பது உங்களைத் தான்.

அதாவது மனித வளம் என்ற பெயரில் உங்கள் உழைப்பைத் தான் குறைந்த விலைக்கு விற்கிறீர்கள்.

இப்படி காலத்துக்கும் இந்த மொழியைப் படித்தால் வேலை கிடைக்கும் அந்த மொழியைப் படித்தால் வேலை கிடைக்கும் என்று திரிந்தால் பஞ்சம் பிழைக்க போன பரதேசிகள் மாதிரி அலைய வேண்டியது தான்..

தாய்மொழியை  வளர்ப்போம். உள்ளூர் தற்சார்பு பொருளாதாரத்தை வளர்ப்போம். தொழில் முனைப்பையும் மொழி நுட்பத்தையும் வளர்ப்போம். மனித வளத்தை ஏற்றுமதி செய்யாமல் நாம் விளைவித்த பொருட்களை ஏற்றுமதி செய்வோம்..

அப்போது தமிழ்நாட்டில் தமிழ் அழியுமோ என்று எண்ணி அஞ்சத் தேவையில்லை...

ஏனெனில், அப்போது Test of Tamil as a foreign language தேர்வு எழுத பிற மொழிக்காரர்கள் முண்டியடித்துக் கொண்டிருப்பார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.