12/01/2019

இசைக்கருவி மிருதங்கம்...


மிருதங்கம் (தண்ணுமை) தென்னிந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு தாள வாத்தியமாகும்.

மிகப்பெரும்பாலான கருநாடக இசை நிகழ்ச்சிகளில், சிறப்பாக வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகளில், மிருதங்கம் முக்கியமாக இடம்பெறும்.

மிருதங்கம் தொன்மையான வரலாற்றைக் கொண்ட ஒரு இசைக்கருவி எனக் கருதப்படுகிறது. இதையொத்த இசைக்கருவி சிந்துவெளி நாகரீக காலத்திலும் புழக்கத்திலிருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.

பெரும்பாலும் பலாமரக் குற்றியைக் குடைந்து இக்கருவி செய்யப்படுகிறது.

இது, இதன் வட்டவடிவ முனைகளில், ஒருமுனை, மற்றமுனையிலும் சற்றுப் பெரிதாகவும் நடுப்பாகம் இவ்விரு முனைகளின் அளவிலும் சற்றுப் பெரிய விட்டமுள்ளதாகவும் அமைந்த ஒரு பொள் உருளை வடிவினதாக அமைந்துள்ளது. திறந்த இரண்டு முனைகளும் தோலினால் மூடப்பட்டிருக்கின்றன. இத் தோற்பகுதிகள் இரண்டும் தோலினாற் செய்த வார்களினால் ஒன்றுடனொன்று இழுத்துப் பிணைக்கப்பட்டுள்ளன.

வலது பக்கத்தோலில் "சோறு" என்று அழைக்கப்படும் ஒரு கரு நிறப் பதார்த்தம் நிரந்தரமாக ஒட்டப்பட்டிருக்கும். மறுபக்கத்தில் வாத்தியத்தை வாசிப்பதற்குச் சற்று முன்னர், மாவும் நீரும் கலந்த ஒரு கலவை தடவப்படும். நிகழ்ச்சி முடிவடைந்ததும் இது நீக்கப்படும். மிருதங்கம் இருந்த நிலையிலேயே வாசிக்கப்படுவது வழக்கம்.

இது ‘மிருத்’ அல்லது ஒருவித கல்லின் தூளினை முக்கிய அங்கமாக உடையது. அந்த கிட்டாங் கல்லின் மண்ணை பசை சேர்த்து தோலினிடத்தே வட்டமாக பூசி ஒழுங்கு செய்வதால் அதனின்று ஆதார சுருதி ஒலிக்கின்றது.

அதேபோல் அவரவர்களுக்கு வேண்டிய ஆதார சுருதியை அதில் அமைத்துக் கொள்வதர்க்கு உதவ தக்கப்படி வார்களால் இழுத்து கட்டப் பெற்றிருக்கின்றது. இதில் முத்திரண்டு கண்கள் உள்ளன. இந்த கண்களின் பகுதியில் குச்சிப்புல்லைத் தட்டி சுருதியைச் சேர்த்துக் கொள்வர்.

தம்புராவைப் போல் இதுவும் பாடுவோருக்குச் சிறந்த துணையாக அமைகின்றது. தம்புராவானது பாடுவோரின் சுருதி சுத்தத்தையும், சுரத்தானங்களுக்கு அப்பாலாய் விளங்கும் அந்தர அலகு நுட்பத்தின் அறிவையும் விளக்க, மிருதங்கமானது பாட்டின் லய சுத்தத்தையும் லய வின்னியாச நுட்பங்களையும் எடுத்து விளக்க உதவுகின்றது. பாடிவரும் பாட்டுக்களின் தாள அமைப்புகளை லயவிரிவுகள் எடுத்து உணர்த்தி வரும். எடுத்துக் கொண்ட கால பிரமாணம் தவறி வேகமாய் விடாமலும், விளம்பமாய் விடாமலும் தடுத்து வருவது இம்மிருதங்கத்தின் முக்கிய பயன் எனலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.