20/02/2019

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் பிறந்த நாள் 19.2.1855...


'தமிழ்தான் என் அறிவுப் பசிக்கு உணவு' என்பார் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர். ஆம்.. அது உண்மை தான். 19ஆம் நூற்றாண்டில் ஓலைச்சுவடியில் செல்லரித்துப் போகவிருந்த தமிழை அச்சு வாகனத்தில் ஏற்றி பிழைக்க வைத்த பெருமை இவருக்கே உண்டு.

ஏட்டில் இருப்பதை அப்படியே பெயர்த்து காகிதத்தில் அச்சிடுவது எளிது. ஆனால் ஓலைச் சுவடியில் இருப்பதை அச்சாக்கி வெளியிடுவது கடினமான பணியாகும். அவரின் கடும் உழைப்பினால் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, பத்துப்பாட்டு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், புறநானூறு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் அச்சு வடிவம் பெற்றன. இதனால் ஓலைச் சுவடிகளில் புதைந்து கிடந்த தமிழர்களின் மூல வரலாற்றை தமிழர்கள் அறிந்தனர். தலை நிமிர்வு பெற்றனர்.

உ.வே.சாமிநாதய்யருக்கு தமிழ் மீது கொண்ட காதலையும் பிற மொழி மீது ஈடுபாடு இல்லாததையும் அவரே எனது சரித்திரம் நூலில் விளக்குகிறார்.

"கல்யாணத்திலும் பொருள் வருவாயிலும், ஊர்ப் பிரயாணத்திலும் எனக்கு லாபம் இருந்ததாகத் தோன்றவில்லை. எனக்கு ஒன்றுதான் நாட்டம்; தமிழ்தான் எனக்குச் செல்வம்; அதுதான் என் அறிவுப் பசிக்கு உணவு எவ்வளவுக்கு எவ்வளவு நான் அதன் தொடர்பை அதிகப்படுத்திக் கொள்கிறேனோ அவ்வளவுக்கவ்வளவு எனக்கு உத்ஸாகம், நல்லது செய்தோமென்ற திருப்தி, லாபமடைந்தோமென்ற உணர்ச்சி உண்டாகின்றன. அன்றும் சரி, இன்றும் சரி இந்த நிலைமை மாறவே இல்லை.

"எனது தந்தையாரிடம் கும்பகோணம் வக்கீல் வேங்கட்ராவ் அவர்கள் என்னை இங்கிலீஷ் படிக்கச் சொல்லுங்கள்  என்றார். எனக்கு அவர் கூறிய வார்த்தைகள் மகிழ்ச்சியை உண்டாக்க வில்லை. அவர் என்னிடமுள்ள அன்பினால் அவ்வாறு சொல்லுகிறார் என்பதை நினைத்துப் பார்க்க என் மனம் இடம் தரவில்லை.  அவர்பால் எனக்குக் கோபந்தான் உண்டாயிற்று. தியாகராச செட்டியாரிடம் படிக்க வழி கேட்டால் இவர் இங்கிலீஷ் படிக்கவல்லவா உபதேசம் செய்கிறார்? எனக்கு இங்கிலீஷும் வேண்டாம், அதனால் வரும் உத்தியோகமும் வேண்டாம்.

"எல்லாருடைய விருப்பத்திற்கும் மாறாக என் உள்ளம் இளமையிலிருந்தே தமிழ்த் தெய்வத்தின் அழகிலே பதிந்து விட்டது. மேலும் மேலும் தமிழ்த் தாயின் திருவருளைப் பெற வேண்டுமென்று அவாவி நின்றது. ஸம்ஸ்கிருதம், தெலுங்கு, இங்கிலீஷ் இவற்றுள் ஒன்றேனும் என் மனத்தைக் கவர வில்லை. சில சமயங்களில் அவற்றில் வெறுப்பைக் கூட அடைந்தேன்.

"சங்கீதம் பரம்பரையோடு சம்பந்தமுடையதாகவும் என் தந்தையாரது புகழுக்கும் ஜீவனத்துக்கும் காரணமாகவும் இருந்தமையால் அதன்பால் அன்பு இருந்தது. ஆனால், அந்த அன்பு நிலையாக இல்லை. என் உள்ளத்தின் சிகரத்தைத் தமிழே பற்றிக் கொண்டது. அதன் ஒரு மூலையில் சங்கீதம் இருந்தது. எந்தச் சமயத்திலும் அந்தச் சிறிய இடத்தையும் அதனிடமிருந்து கவர்ந்து கொள்ளத் தமிழ் காத்திருந்தது."

தமிழை அடுத்த தலைமுறைக்கு அச்சு வாகனத்தில் ஏற்றிய தமிழ்த்தாயின் அரும் புதல்வராம் தமிழ்த்தாத்தாவை இந்நாளில் தமிழர்கள் நினைவிலேற்றி கொண்டாடுவோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.