19/02/2019

ஆழ்மனம்.. வெளிமனம்...


மனதை, பொதுவாக அறிவு மனம்(conscious mind), ஆழ்மனம்(Sub-conscious mind) என இரு பிரிவுகளாக பிரிக்கலாம். அறிவுமனம் அல்லது வெளிமனம் ஒரு செய்திவங்கியாக பணியாற்றுகிறது. புலன்களின் தொடர்பு இதற்கு உண்டு. கண்ணால் கண்ட காட்சிகள், காதால் கேட்ட வார்த்தைகள், சப்தங்கள், மூக்கால் நுகர்ந்த வாசனைகள், நாக்கால் அறிந்த சுவைகள், தொட்டு உணர்ந்த புரிதல்கள் அனைத்தும் செய்திகளாக அறிவு மனத்தில் பதிவு பெறும்.

விவாதங்கள் மனதில் மிகும். அறிவின் துணை கொண்டு ஆய்வுகள் நடைபெறும். நல்லது கெட்டது தெரியும். அதனால் வாழ்வில் சிலவற்றை நாம் ஒதுக்குவோம். பலதை விரும்புவோம். அதற்குரிய செயல்கள் தொடரும். பழக்கங்கள் மிளிரும். பண்புகள் தோன்றும். தன் அனுபவத்தை வைத்து சிந்தித்து சீர்தூக்கி முடிவு செய்யும்.

ஆனால் ஆழ்மனம் அல்லது உள்மனம் என்பது பாதுகாக்கப்பட்ட ஒரு பெட்டகம். இது தன்னிச்சையாக இயங்கும். அறிவு மனத்திற்குக் கிடைக்கும் செய்திகள் எதையும் அது ஏற்காது. அதற்கு நல்லது கெட்டது என்று எதுவும் தெரியாது, கிடையாது. வெற்றி,தோல்வி என்றும் எதுவும் கிடையாது. உண்மையான அனுபவத்திற்கும், கற்பனையான அனுபவத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டை அது அறியாது.

இத்தகைய பண்புகளைக் கொண்ட ஆழ்மனம் என்னதான் செய்யும்?

அடிக்கடி காண்பவைகள், திரும்ப திரும்பக் கேட்பவைகள் உணர்வு வயப்பட்ட நிலையில் கண்டு, கேட்டவைகள், அனுபவித்தவைகள், ஆல்ஃபா என்ற தளர்வு நிலையில் அல்லது தியானநிலையில் கேட்டவைகள் ஆகியவை மட்டுமே அதனுள் செல்லவல்லது. எந்த எண்ணத்தை வேண்டுமானாலும் ஆழ்மனதுள் ஆல்ஃபா நிலையில் நாம் செலுத்தலாம். நல்ல எண்ணம் அல்லது தீயஎண்ணம், வாழ்விற்கு உதவும் எண்ணம், உதவாத எண்ணம் என அது விவாதம் புரிவதில்லை. எண்ணத்தின் தன்மைகளை பார்ப்பதில்லை. அனிச்சையாக நாம் எந்த செயல் செய்தாலும் அது உள்மனதின் வழிகாட்டுதல்தான்.

திரும்பதிரும்பச் சொல்லப்பட்டவைகளை, தனக்கு தரப்பட்டவைகளை ஏற்றுக்கொள்வது என்கிற ஒரே நிலையில் அது பணிபுரிகிறது. ஆனால் இது மகத்தான சக்தி உடையது. எந்த எண்ணத்தை அதற்குத் திரும்பதிரும்ப கொடுக்கிறோமோ அதை ஆழ்மனக்கட்டளையாக மாற்றி ஏற்றுக்கொண்டு, அக்கட்டளைகளைப் புற உலகில் வேண்டியவைகளை ஈர்த்து, தனதாக்கிக் கொண்டு அவ் எண்ணத்தை நிறைவேற்றும் பணியை செவ்வனே நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறது. தன்னிடம் தரப்படுவதை, ஊட்டப்படுவதை ஒன்றுக்கு பத்தாக பெருக்கிக் காட்டுவதே இதன் இயல்பு.

இதை பண்படுத்தப்பட்ட நிலமாக வைத்திருக்க வேண்டியது நமது பொறுப்பு. நல்ல விசயங்களை ஆழ்மனதிற்கு தொடர்ந்து கொடுக்க வேண்டும். உண்மையாகவும், விசுவாசமாகவும் கொடுக்கப்பட வேண்டும் என்பதே முக்கியம். நினைத்தேன் நடக்கவில்லை என்றால் மேலோட்டமாக நினைத்துள்ளோம் என்பதே பொருள். நமக்கு நாமே எப்படி உண்மையாக, விசுவாசமாக இருக்கிறோமோ அதுபோல் எண்ணம் இயல்பானதாகி விடவேண்டும். நம்மை மாற்றியமைக்க ஒரே வழி, நமக்கு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் ஆழ்மனதை உற்ற நண்பனாக்கிக் கொள்வது தான்.

இப்போது சற்று சிந்தித்து பாருங்கள், நீங்கள் அடிக்கடி எந்தவிதமான வார்த்தைகளை பயன்படுத்துகிறீர்கள்? எதைப் படிக்கிறீர்கள் ? அடிக்கடி என்னவிதமான எண்ணங்களை மனதில் சுழல விட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்? இவை உங்கள் வாழ்வில் எந்த விதமான மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன? இவற்றிற்கிடையே உள்ள தொடர்பை புரிந்து கொள்ள முடிகிறதா? சிந்தியுங்கள், வாழ்க்கை வளம் அடையும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.