உரிமைகளை இழந்துவிட்ட அடிமை இனத்தவரின் ஆதங்கமே...
எனக்கானதை எனக்கே கொடு என்ற உரிமையை வேண்டுகிறோம் தமிழர் நாடு மட்டும் வேட்டைக்காடா...
நாங்கள் என்ன விலங்குகளா...
தமிழினமே விழி.. தமிழினமே விழி..
உனக்கான உரிமையை இழக்காதே.. போராடு.. இந்த உரிமை போராட்டம் உன் வருங்கால மரபுவழி மக்களுக்கு -ஆ.எழுச்சிக்குமரன்...
தமிழ்நாட்டில் மிகப்பெரும் அளவில் வெளி மாநிலத்தவர் குடியேறி வருகின்றனர். நிலங்களையும், மனைகளையும் கட்டடங்களையும் வாங்கிக் குவிக்கின்றனர். வணிகத்தையும், தொழிலையும் கைப்பற்றி இருக்கின்றனர். தொகைத் தொகையாக வந்து தமிழ்நாட்டில் குடியேறும் வடநாட்டவர் மற்றும் பிற மாநிலத்தவருக்கு “ஸ்மார்டு கார்டு” திட்டம், வரைமுறையற்று உள்ளே நுழைவதற்கும், தமிழ்நாட்டில் வழங்கல் (ரேசன்) அட்டை, வாக்காளர் அட்டைப் பெற்று நிலைபெறுவதற்கும் வாய்ப்பளிக்கிறது.
நேரடியாகவும், பல்வேறு முறைகேடுகள் – மோசடிகள் வழியாகவும், தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில் வெளி மாநிலத்தவர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டு வந்தார்கள்.
இதுபோதாதென்று, தற்போது தமிழ்நாடு அரசுப் பணிகளிலேயே வெளி மாநிலத்தவரைப் பணியமர்த்தும் அபாயகரமான புதியப் போக்கு தீவிரம் பெற்றுள்ளது.
கடந்த 07.11.2017 அன்று வெளியான, தமிழ்நாடு அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி –விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளில், வெளி மாநிலத்தவர்கள் பெருமளவில் இடம்பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசுப் பணியிலேயே வெளி மாநிலத்தவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள விவரம் வெளியாகக் கூடாது என்பதற்காக, “ஆசிரியர் தேர்வு வாரியம்” திட்டமிட்டே அவர்களின் பெயர்களை மறைத்து, வழக்கத்திற்கு மாறாக பதிவு எண்களுடன் தேர்வுப் பட்டியலை வெளியிட்டது.
வெளி மாநிலத்தவர்கள் பலரும் பொதுப்பிரிவில் வந்து இடங்களைக் கைப்பற்றியதோடு மட்டுமின்றி, தமிழ்நாட்டின் அட்டவணைப் பிரிவினர் மற்றும் பழங்குடியினர் - பிற்படுத்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) - மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோர்க்கு உரிய பிரிவுகளின் கீழும் பல வெளி மாநிலத்தவர்கள் தேர்வாகியிருந்தனர். அதன் காரணமாக, இப்பிரிவுகளைச் சேர்ந்த தமிழ் மாணவர்களுக்குரிய இடங்கள் அயலாரால் தட்டிப் பறிக்கப்பட்டன.
இவ்வாறு தேர்வாகியுள்ள வெளி மாநிலத்தவருக்கு 23.11.2017 அன்று சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தவிருந்த நிலையில், அதைத் தடுத்து நிறுத்தும் போராட்டத்தைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் அறிவித்தது.
இதனையடுத்து, சான்றிதழ் சரிபார்ப்பு இரத்து செய்யப்பட்டது. இப்போது, மோசடியாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி, அத்தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியமே திரும்பப் பெற்றுள்ளது.
இந்நிலையில், 14.11.2017 அன்று தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), நான்காம் பணிப்பிரிவில் - 9,351 வேலைகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பில், இப்பணிகளுக்கு தமிழ்நாட்டவர் மட்டுமின்றி – வெளி மாநிலத்தவரும், நேப்பாளம், பூட்டான் போன்ற வெளிநாட்டினரும், பாக்கித்தான், திபெத், மியான்மர் நாடுகளிலிருந்து வந்த அகதிகளும் மேற்கண்ட வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், அவர்களுக்கு இப்பொழுது தமிழ் தெரியாவிட்டாலும் பரவாயில்லை, இரண்டாண்டுகளுக்குள் அவர்கள் தமிழ் கற்றுக் கொண்டால் போதும் என்றும் தமிழ்நாடு அரசு சலுகை அளித்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை அளித்தது.
இதற்கு முன்னர் 2013ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசுப் பணிகளுக்குத் தேர்வு ஆவதற்கு தமிழ்நாட்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் என்ற வரம்பாவது இருந்தது. கடந்த 2016 செப்டம்பர் 1 அன்று, செயலலிதா ஆட்சியில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் அன்றைய நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து நிறைவேற்றிய “தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் - 2016” என்ற புதிய சட்டத்தின் அடிப்படையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் விதிகளில், தமிழ்நாட்டு அரசுப் பணிகளில் வெளி மாநிலத்தவர் பங்கேற்பதற்காக 07.11.2016 அன்று திருத்தங்கள் செய்யப்பட்டது.
இவற்றையெல்லாம் ஆதாரங்களுடன் கடந்த 16.11.2017 அன்று, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை வெளியிட்டு அம்பலப்படுத்தினார். இதனையடுத்து, பல கட்சிகளும் இது குறித்து அறிக்கை வெளியிட்டு தமிழ்நாடு அரசுக்குக் கண்டனம் தெரிவித்தனர். அவர்கள் அனைவருக்கும் நாம் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்..
மகாராட்டிரம், கர்நாடகம், குசராத், மேற்கு வங்கம், சத்தீஸ்கட் போன்ற பல மாநிலங்களில் மண்ணின் மக்களுக்கே வேலை உரிமை சட்டமாக்கப்பட்டுள்ளது. அம்மாநிலங்களின் அரசுப் பணியில், தமிழ்நாட்டில் நடப்பது போல் வெளி மாநிலத்தவர்களையும், வெளி நாட்டினரையும் பணிக்கு அமர்த்த முடியாது!
எனவே, தமிழ்நாடு அரசு – அரசுப் பணிகளில் 100 விழுக்காட்டு இடங்களையும், தனியார் மற்றும் இந்திய அரசு நிறுவனங்களில் 90 விழுக்காட்டு இடங்களையும் தமிழர்களுக்கே வழங்கிட சட்டமியற்ற வேண்டும்.
- தமிழ் தேசிய பேரியக்கம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.