சென்னை குடிநீரில் டையாக்சின் நச்சு கலந்திருப்பதால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே, பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரமான புழல் ஏரியில் உள்ள தண்ணீரில் மனித உடல் நலனுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நச்சுகள் கலந்திருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. சுற்றுச்சூழல் குறித்த அக்கறையின்மையால் ஏற்பட்டுள்ள இப்பாதிப்பைத் உடனடியாக தடுக்காவிட்டால் சென்னை மாநகர மக்களுக்கு நினைத்துப் பார்க்க முடியாத கேடுகள் ஏற்படக்கூடும்.
புழல் ஏரியின் அடிப்பகுதியில் படிந்திருக்கும் படிமங்களில் இருந்து 32 மாதிரிகளையும், 6 தண்ணீர் மாதிரிகளையும் எடுத்து அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் புழல் ஏரி நீரில் நுண்பிளாஸ்டிக் அதிக அளவில் கலந்திருப்பது தெரியவந்திருக்கிறது. ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு கன சென்டிமீட்டருக்கு 27 துகள்கள் நுண்பிளாஸ்டிக் கலந்திருப்பது தெரியவந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நுண்பிளாஸ்டிக் துகள்கள் கலந்த குடிநீரை அப்படியே குடிப்பதால் பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படாது. தண்ணீருடன் கலந்து அந்நியப் பொருளாக உடலுக்குள் நுழையும் நுண்பிளாஸ்டிக் துகள்கள் இயல்பாக வெளியேறி விடும். ஆனால், நீர் மூலம் பரவும் நோயைத் தடுக்க வேண்டும் என்பதற்காக சென்னையில் 90 விழுக்காட்டினர் குடிநீரைக் காய்ச்சி தான் குடிக்கின்றனர். புழல் ஏரியிலிருந்து எடுத்து விநியோகிக்கப் படும் சென்னைக் குடிநீரை காய்ச்சும் போது, 100 டிகிரி வெப்பநிலையில் நுண்பிளாஸ்டிக் துகள்கள் உருகி டையாக்சின் என்ற நச்சுப் பொருட்கள் உருவாகி தண்ணீரில் கலந்து விடுகிறது. காய்ச்சப்பட்ட தண்ணீரைக் குடிக்கும் போது, அதனுடன் கலந்து டையாக்சின் நச்சுவும் நமது உடலுக்குள் செல்கிறது.
டையாக்சின் மிகவும் மோசமான வேதிப்பொருளாகும். அதை உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் பாதிக்கப்பட்டு அதன் காரணமாக மிகவும் எளிதாக தொற்று நோய்கள் தாக்கும் ஆபத்து ஏற்படும். அதுமட்டுமின்றி, வளர்ச்சிக் குறைபாடுகள், மலட்டுத் தன்மை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். இவை அனைத்தையும் கடந்து புற்றுநோய் ஏற்படும் ஆபத்தும் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உயிர் வாழ்வதற்கு மிகவும் அவசியமான குடிநீரே, நுண்பிளாஸ்டிக் துகள்கள் கலப்பு காரணமான உயிரைக் குடிக்கும் நோய்களை ஏற்படுத்துவது மிகவும் கொடூரமானதாகும். இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும் எதிராக மனிதகுலம் இழைக்கும் குற்றங்களின் காரணமாகவே இந்நிலை ஏற்படுகிறது.
புழல் ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டுள்ள தெர்மோக்கூல் தான் புழல் ஏரி நீரில் நுண்பிளாஸ்டிக் கலக்க முக்கியக் காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மீன்பிடி வலைகள் மூலமாகவும் நுண்பிளாஸ்டிக் தண்ணீரில் கலந்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. புழல் ஏரியில் அண்ணா பல்கலைக்கழகப் பேராசியர்கள் ஆய்வு நடத்தியதன் மூலம் இந்த ஆபத்து நமக்கு தெரியவந்துள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் மற்ற 3 ஏரிகளான பூண்டி ஏரி, சோழவரம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி ஆகியவற்றில் இன்னும் ஆய்வுகள் நடத்தப்படாததால் அவற்றில் இத்தகைய நுண்பிளாஸ்டிக் கலந்திருக்கிறதா? என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. நுண்பிளாஸ்டிக் கலப்பதற்கான காரணங்களை வைத்துப் பார்க்கும் போது, அந்த ஏரிகளிலும் நச்சுப்பொருட்கள் கலந்திருக்கக்கூடும்.
சென்னை குடிநீர் வாரியம் மூலமாக ஒரு கோடிக்கும் கூடுதலானவர்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களில் அடித்தட்டு மக்கள் தான் இந்த தண்ணீரை காய்ச்சிக் குடிக்கின்றனர். நுண்பிளாஸ்டிக் கலந்த தண்ணீர் விநியோகிக்கப்படுவதால் அதிக அளவில் பாதிக்கப்படுபவர்கள் அடித்தட்டு மக்களாகத் தான் இருப்பார்கள். ஏரி நீரைச் சுத்திகரிப்பது என்பதை, குளோரின் கலப்பதுடன் சென்னை குடிநீர் வாரியம் நிறுத்திக் கொள்கிறது. இதனால் நுண்பிளாஸ்டிக் எந்தத் தடையுமின்றி ஏழைகளின் சமையலறைகளில் நுழைந்து விடுகிறது. தண்ணீரில் நுண்பிளாஸ்டிக்குகள் கலப்பு குறித்த விவரங்கள் இதுவரை வெளிவராததால் அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்திருக்கலாம்.
அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி மூலம் இப்போது நுண்பிளாஸ்டிக் கலப்பு குறித்த உண்மைகள் வெளிவந்துள்ள நிலையில், அதனால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் ஆகும். அதற்காக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் மற்ற ஏரிகளிலும் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் இத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன்பின்னர், ஏரிகளின் நீரில் நுண்பிளாஸ்டிக் கலப்பதைத் தடுக்கும் வகையில், அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் தெர்மோக்கூல் போன்ற நுண்பிளாஸ்டிக் துகள்களை வெளியிடும் பொருட்களை இருப்பு வைக்கவும், ஏரிகளில் மீன்பிடி வலைகளை பயன்படுத்தவும் சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். அத்துடன், குடிநீர் விநியோக வழிகளில் வடிப்பான்களை பொருத்துவது, நீரிலிருந்து நுண்பிளாஸ்டிக் துகள்களை எளிதில் அகற்றுவதற்கான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிப்பது போன்ற நடவடிக்கைகளை அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து அரசு மேற்கொள்ள வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.