நமது உடலில் ஏதாவது ஒரு உறுப்போ, சுரப்பியோ சரியாக வேலை செய்யவில்லை என்றால் அதனை உடல் ஒரு நோயாக வெளிப்படுத்தும்... இது தான் உடலின் சங்கேத பாசை. ருசிக்கு மட்டும் உண்ணாமல், பசிக்கு தேவையான சுவைகளுடன் உணவு உண்டாலே வியாதிகள் வருவதற்கான வாய்ப்புகளே இல்லை எனலாம்.
ஒரு மனிதனின் ஆரோக்கியமே அவனுடைய செயல்பாட்டை நிர்ணயம் செய்யும். ஆரோக்கியமற்ற ஒருவனால் தெளிவான வாழ்க்கையே வாழ முடியாது. மற்றவரையும் வாழ்விக்க முடியாது என்பது தான் உண்மையும் கூட..
ஒருவரின் வாழ்வு சிறக்க உடலை நல்ல முறையில் வைத்துக் கொள்ள வேண்டும். நம் உடலுக்கு தேவையான சத்துப்பொருட்களும், உணவுப் பொருட்களும் எந்த அளவிற்கு தேவை, அறுசுவையில் எந்த சுவை குறைவாக இருக்கிறது என்ற விழிப்புணர்வே இல்லாமல் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறோம்.
துவர்ப்பு, உப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு, காரம் என அறுசுவையுடன் கூடிய உணவு மட்டுமே நம்மை நோயில்லாமல் வாழ வைக்கும் என்பதை எப்போது புரிந்து கொள்கிறோமோ அப்போது தான் நாம் நோயிலிருந்து விடுபட முடியும். ஒவ்வொரு உணவுப் பண்டங்களும் நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களையும் சுவைகளையும் கொண்டுள்ளது...
நமது ஆரோக்கியத்திற்கு, இந்த அறுசுவைகளை சரியான விகிதத்தில் உணவில் சேர்த்துக் கொண்டாலே , அத்தியாவசிய சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும் என்பதை நம் முன்னோர்கள் எந்த வித ஆய்வு கூடமும் இல்லாமல் , நவீன உபகரணங்களும் இல்லாமல் கண்டறிந்திருக்கிறார்கள் . சுவைகளை வைத்தே அதில் இருக்கும் சத்துக்களையும், அவற்றின் விகிதாச்சாரத்தையும் கண்டறிந்ததே ஒரு மாபெரும் நுண்ணறிவுதான் .
இன்றைய மருத்துவ முறையில் எத்தனை நவீன உபகரணிகள் கொண்டும் அறிய முடியாத சில நோய்களை அவர்கள் வாதம், பித்தம், கபம் எனப் பிரித்து எந்த நாடி மிகுந்தோ/குறைந்தோ உள்ளது என்று கைகளில் உள்ள நாடியைத் தொட்டே கண்டறிந்தார்கள். அதற்கு உணவுமுறை மாற்றம், மூலிகைகள் என தகுந்த தீர்வையும் இயற்கையான முறையில் நமக்கு அளித்து விட்டு தான் சென்றார்கள்.
நவீன மருத்துவம் தான் இன்று நம்மில் பல பேர் கொண்டாடும் வைத்திய முறை. ஆனால்....நவீன வைத்தியம் என்ன என்பதை சற்றும் அறியாத நம் முன்னோர்கள் நூறு வருடங்களைக் கடந்தும் வாழ்ந்து வந்தார்கள். வெளிநாடுகளில் படித்து தேர்ந்த மருத்துவர்கள், ஊசி, மருந்து, மாத்திரைகள், உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் இருப்பவற்றை காட்டும் நவீன கருவிகள், எல்லாம் இருந்தும் நவீன மருத்துவம் சாதித்தது என்ன?
இந்த உறுப்பில் இந்த நோய் வந்திருக்கிறது என்று எல்லாவற்றையும் தனித்தனியாய்ப் பிரித்து கண்டுபிடித்த நவீன மருத்துவமுறை பல லட்சங்களை விழுங்கிவிட்டு நம்மில் பலரை நம்மிடம் இருந்து பிரித்து விட்டது.. அல்லது.... லகரங்களில் கடன் வாங்கி உயிர்பிழைக்க வைத்து அவர்களை கடன்காரர்களாக்கி நிம்மதி இல்லாமல் சாகடித்திருக்கிறது....
நம் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது இரும்பு, சுண்ணாம்புச்சத்து, பல உயிர்ச்சத்து கலந்த பலவிருத்தியோ அல்லது மருந்து-மாத்திரைகளோ இல்லை. உதாரணமாக உப்பில் சோடியம் குளோரைடு அடங்கி உள்ளது.. இது நமது உடலுக்கு அத்தியாவசிய தேவையானது..
ஆனால் இது அதிக அளவில் தேவை இல்லாதது. மிளகில் (100Gms ) 240% வைட்டமின் "c ", 39 % உயிர்ச்சத்து B -6 , 13 % இரும்பு சத்து, 14 % தாமிர சத்து, 7% பொட்டாசியம் அடங்கி இருப்பதை நவீன ஆய்வுகள் கண்டறிந்துள்ளன... இந்த கனிம சத்துக்கள், செரிமான சக்திக்கும், உடலில் தேவை இல்லாமல் சேரும் கொழுப்பை கரைக்கவும் , தொற்றுக்களை தடுக்கவும் பயன்படும்..
அதனால் தான் நம் முன்னோர்கள் பத்து மிளகோடு பகையாளி வீட்டில் கூட உணவு உண்ணலாம் (மிளகு விசத்தன்மையை முறிக்கும் ஆற்றல் வாய்ந்தது) என்று இந்த மிளகின் சிறப்பைப் பற்றி அன்றே தெளிவாக உரைத்திருக்கிறார்கள்.
ஆண்களை விட பெண்களுக்குத்தான் வியாதிகள் வரும் வாய்ப்புகள் அதிகம்.. இதற்கான காரணம் என்னவென்று யோசித்தால்... உணவு ஒரு முக்கிய காரணமாக இருக்கும்.
தேவையறிந்து சமைக்காமல் தேவைக்கு அதிகமாக சமைத்து, பின் அது வீணாகி விடக் கூடாதென்பதற்காக பசி இல்லாமல் சாப்பிட்டோ, அல்லது அதனை அடுத்தவேளைக்கு சாப்பிட்டோ வியாதிகளுக்கு சொந்தக்காரர்கள் ஆகி விடுகிறார்கள்... .
நம் உடம்புக்கான மருந்து வேறெங்குமில்லை, நம் உடம்புக்குள்ளேயே உண்டு...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.